‘கற்றுக்கொள்ள டிகிரி தேவை இல்லை’ - அன்று Zoho-வின் செக்யூரிட்டி; இன்று தொழில்நுட்ப அதிகாரி அப்துல் அலிம்
ஒரு வாரத்துக்கு முன்பு ஒரு லிங்கிடின் போஸ்ட் மிக வைரலாக பரவிக்கொண்டிருந்தது. பலர் அந்த பகிர்வினை இதர சமூக வலைதளங்களிலும் வேகமாக ஷேர் செய்துக்கொண்டிருந்தனர்.
அப்துல் அலிம் என்பவர் எழுதி இருந்த போஸ்ட்தான் அது.
"என்னிடம் 1,000 ரூபாய் கையில் இருந்தது. அதில் 800 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்து சென்னை வந்தேன். பல இடங்களிலும் வேலை கிடைக்காமல் சில மாதம் சென்னையில் உள்ள நண்பர்களின் உதவியுடன் தங்கி இருந்தேன். ஒருவழியாக Zoho-வில் செக்யூரெட்டியாக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது...
அப்போது அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த பலரிடம் உரையாட வாய்ப்பு கிடைத்தது. ஷிபு அலெக்ஸிஸ் என்னும் மூத்த பணியாளர் என்னிடம் அவ்வப்போது உரையாடுவார். அப்போது எனக்கு கொஞ்சம் கம்யூட்டர் பற்றி தெரியும் என்பதை தெரிந்துகொண்டார். மேலும், அதில் எவையெல்லாம் படிக்க வேண்டும் என்பதையும் சொல்லிக்கொடுத்தார். எட்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு ஆப் வடிவமைத்து அவரிடம் காண்பித்தேன். அவர்களுக்கு பிடித்திருந்தது.
நான் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்திருக்கிறேன் என்பதால், எனக்கு எதுவும் கிடைக்காது என நினைத்திருந்தேன். ஆனால் அந்த ஆப் மூலமாக Zoho-வில் நேர்முகத் தேர்வுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் தேர்வானேன். தற்போது எட்டு ஆண்டுகளாக ஜோஹோவில் பணியாற்றுகிறேன். காலம் கடந்துவிட்டது என நினைக்க வேண்டாம், எப்போது வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம்,’’ என அப்துல் அந்த போஸ்டினை முடித்திருந்தார்.
லிங்கிடின் மூலம் அப்துலை தொடர்பு கொண்டேன். இது தொடர்பாக உரையாடுவதில் அவருக்கு ஆரம்பத்தில் பல தயக்கங்கள் இருந்தது. அந்த தயக்கத்தை உடைத்து நம்மிடம் பேசத் தொடங்கினார் அப்துல்.
எனக்கு சொந்த ஊர் அசாம் மாநிலம். தலைநகர் குவகாத்தியில் இருந்து 150 கிலோமீட்டரில் எங்களுடைய கிராமம் உள்ளது. அங்குள்ள பள்ளியில் படித்தேன். வகுப்பில் முதல் ரேங்க் வாங்கும் மாணவன் கிடையாது. ஆனால் முதல் ஐந்து இடங்களில் வருவேன். எட்டாம் வகுப்பு படிக்கும்போது எங்கள் கல்லூரியில் கம்யூட்டர் வந்தது. அப்போது ஹெச்.டி.எம்.எல். உள்ளிட்ட சில அடிப்படை விஷயங்களை படித்திருந்தேன்.
பள்ளிப்படிப்பை முடித்த பிறகு கல்லூரிக்கு அங்கு வாய்ப்பு இல்லை. பொறியியல் அல்லது கம்யூட்டர் சயின்ஸ் படிக்க வேண்டும் என்றால் மிக சில கல்லூரிகளே இருந்தன. அதுவும் தலைநகர் குவஹாத்தில் இருந்தன. நாங்கள் இருந்த பகுதியில் கலைக்கல்லூரிகள் மட்டுமே இருந்தன. அதில் படிப்பதற்கும் ஆகும் செலவை கூட ஏற்க முடியாது சூழ்நிலை. அப்பா டிரைவர் என்பதால் கல்லூரி படிப்பதற்கான தொகை என்பது எங்களுக்கு மிக அதிகம்.
அப்போதுதான் சென்னை வரலாம் எனத் தோன்றியது. எங்களுடைய ஊரில் இருந்து பலர் சென்னையில் செக்யூரெடியாக இருக்கிறார்கள். மஹிந்திரா வோர்ல்ட் சிட்டி உள்ளிட்ட பல இடங்களில் வேலை செய்கிறார்கள். அதனால் சென்னை வரலாம் என நினைத்து ரயில் பிடித்தேன். இங்கு வந்து படிக்க முடியும் என்றெல்லாம் யோசிக்கவில்லை.
“1,000 ரூபாய் கையில் இருந்தது 800 ரூபாய்க்கு சென்னைக்கு டிக்கெட் எடுத்தேன். மூன்று நாள் பயணம். ஒரு மாதம் மஹிந்திரா வேர்ல்டு சிட்டியில் தங்கி இருந்தேன். வேலை கிடைக்கவில்லை. அதன் பிறகு ஆழ்வார்பேட்டையில் இருந்தேன். சில வாரம் கழித்து கிண்டியில் உள்ள நண்பர்கள் வீட்டுக்கு வந்தேன். அப்போதுதான் போரூரில் உள்ள ஜோஹோ அலுவலகத்தில் செக்யூரிட்டியாக வேலை கிடைத்தது.”
அலுவலகத்துக்கு வரும் பணியாளர்களை ஸ்கேன் செய்து அனுப்பும் பணி. ஷிப்ட் தொடங்கும்போது வேலை இருக்கும். அதேபோல முடியும்போது வேலை இருக்கும். இடைப்பட்ட நேரத்தில் ஃபிரண்ட் டெஸ்கில் உள்ள கம்யூட்டரில் எதாவது படித்துக்கொண்டிருப்பேன். அதை பார்த்த ஷிபு அலெக்ஸிஸ் என்னிடம் பேச்சு கொடுத்தார்.
எனக்கு கொஞ்சம் பேசிக் தெரியும் என்பதால் மேற்கொண்டு எப்படி படிப்பது வேலைக்கு என்ன தேவை என்பதை சொல்லிக்கொடுத்தார். சொந்தமாக எதையாவது செய்ய வேண்டும் என்பதால் ஒரு ஆப் செய்தேன். இதற்கே எனக்கு எட்டு மாதம் ஆகியது. இதனை அடிப்படையாக வைத்து ஜோஹோவில் நேர்காணலுக்கு வாய்ப்பு கிடைத்தது. நேர்காணலில் அவர்கள் ஒ.கே. என்று சொல்லி விட்டார்கள். ஆனாலும் வேலைக்கு வர வேண்டும் என்றால் இது போதாது. மேலும் கூடுதலாக கற்றுக்கொண்டால் மட்டுமே வேலை என்று சொன்னார்கள்.
அதனால் செக்யூரிட்டி வேலையை விட்டுவிட்டு, ஜோஹோ ஸ்குலில் படிக்கத் தொடங்கினேன். 24 மாதம் அங்கு ஊக்கத்தொகையுடன் படித்தேன். அப்போது வேலைக்கு என்ன தேவை என்பதை முழுமையாக சொல்லிக்கொடுத்தார்கள். அந்த கோர்ஸ் முடிந்தவுடன் நிறுவனத்தில் வேலை கிடைத்தது,” என செக்யூரிட்டியில் இருந்து சாப்ட்வேர் துறைக்கு மாறியதை விளக்கினார் அப்துல்.
நீங்கள் முறையான படிப்பை படிக்கவில்லை. அதனால் நிறுவனத்தில் எதாவது மாறுதல்களை உணர்ந்தீர்களாக எனக் கேட்டதற்கு விளக்கமான பதில் வழங்கினார் அப்துல்.
முறையான படிப்பு இல்லாமல் ஜோஹோ ஸ்கூலில் படித்தவர்கள் கணிசமான சதவீதத்தில் பணிபுரிகின்றனர். அதனால் முறையான படிப்புக்கும் இங்குவந்து படிப்பதற்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. தவிர திறமையை வளர்த்துக்கொண்டே இருக்கும் பட்சத்தில் நாம் அடுத்தடுத்த நிலைக்கு சென்றுக்கொண்டே இருப்போம். நான் இப்போது full stack developer என அப்துல் கூறினார். மேலும், எனக்கு தெரியும் என்பதற்காக சொல்ல வில்லை. புரோகிராமிங் எழுதுவது எளிதானதுதான் என்றார்.
நம்மிடம் தமிழிலேயே அப்துல் உரையாடினார். தமிழ் எப்படி கற்றுக்கொண்டீர்கள் எனக் கேட்டதற்கு. இங்கு வருவதற்கு முன்னர் அஸ்ஸாமி, பெங்காலி மற்றும் ஹிந்தி மட்டுமே தெரியும். சென்னைக்கு வந்த பிறகுதான் தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலத்தையும் கற்றுக்கொண்டேன் என உற்சாகத்துடன் கூறினார்.
வாழ்த்துகளை கூறி போனை வைத்தேன்.
வாழ்க்கையை அதன் போக்கில் வாழாமல் கொஞ்சம் மெனக்கெட்டால் நமக்கு ஏற்றதுபோல மாற்றிக்கொள்ள முடியும் என்பதற்கு அப்துல் சரியான உதாரணம். அவருடன் பணிபுரிந்த பணியாளர்கள் பலர் இன்றும் அப்படியே இருந்திருக்கக் கூடும். அவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது என்பது அர்த்தமல்ல. இதுவே போதும் என்ற எண்ணமும் கற்றுக்கொள்ள முடியாத மனநிலையுமே காரணம்.
பொறியியல் கல்லூரியே இல்லாத ஊரில் இருந்து வந்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாக அப்துல் இருக்கிறார். மாற்றத்துக்கான முதல் படியை நாம் எடுத்துவைத்தால் வாழ்க்கை பல படிகளையும் வாய்ப்புகளையும் உருவாக்கும் என்பதற்கு அப்துல் மிகச்சரியான உதாரணம்.