புதியவகை மின் ஸ்கூட்டர்கள் விற்பனையை துவங்கியது ஏதர் எனர்ஜி!
ஏதெர் எனர்ஜி நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட S340, S450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வகைகளை பெங்களூருவில் கடந்த வாரம் அறிமுகம் செய்து, விற்பனைக்கு ஆர்டர் எடுக்க தொடங்கியது.
S340 ஸ்கூட்டர் 2016ல் பெங்களூருவில் நடைபெற்ற ரைஸ் மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டாலும் அதற்கான முன்பதிவு மற்றும் ஆர்டர்கள் இப்போது தான் துவங்கியுள்ளன. இவற்றின் விலை ரூ.1,09,750 மற்றும் ரூ. 1,24,750 ஆகும்.
S450 என்ற மாதிரியையையும் அறிமுகம் செய்து வியக்க வைத்துள்ளது ஏதர் எனர்ஜி. சென்னை ஐஐடி பட்டதாரிகள் தருண் மேத்தா மற்றும் ஸ்வப்நில் ஜெயினால் துவக்கப்பட்ட பெங்களூருவைச்சேர்ந்த இந்த நிறுவனம் 2013 முதல் செயல்பட்டு வருகிறது. எலெக்டிரிக் வாகன ஸ்டார்ட் அப்பான இந்நிறுவனம் 2015 ல் டைகர் குளோபல், ஹீரோ மோட்டார்கார்ப் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனர்களின் முதலீட்டை ஈர்த்தது.
2016 பிப்ரவரியில் நிறுவனம் தனது முதல் தயாரிப்பான S340 மாதிரியை காட்சிப்படுத்தியது. எனினும் இந்த வாகனத்தின் அம்சங்கள் சாலையில் பயன்படுத்தப்படும் அம்சங்களில் இருந்து மாறுபட்டிருந்தது. பைக் அம்சங்கள் மற்றும் சில நுணுக்கங்களில் மாற்றம் தேவைப்பட்டதோடு இதன் கட்டமைப்பிலும் மாற்றம் தேவைப்பட்டது.
சாலையில் மாற்றங்கள்
“சாலையில் சிக்கல்களை உணர்ந்ததோடு, பெரும்பாலான ஹார்ட்வேர் மற்றும் எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட் அப்களுக்கு தயாரிப்பு தான் இடுகாடாக அமைவதையும் உணர்ந்தோம்,” என்கிறார் தருண்.
நிறுவனம் பெங்களூருவில் ஒயிட்பீல்ட் பகுதியில் தயாரிப்பு வசதியை நிறுவியுள்ளது. S340 மற்றும் S450 இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. மாற்றங்களை செய்து மேம்படுத்தப்பட்ட S340 ஐ அறிமுகம் செய்ததோடு புதிய மாதிரியான S450யையும் அறிமுகம் செய்துள்ளது.
2016 ல் தருண் S340 ஐ அறிமுகம் செய்த போது இந்த பைக் 7.3 விநாடிகளில் 0 ல் இருந்து 40 கி.மீ வேகம், மணிக்கு 72 கி.மீ வேகம், 60 கிமீ ரேஞ்ச், 11 டிகிரி கிரேடபிலிட்டி மற்றும் 14 என்.எம் டார்க் பெற்றிருந்தது. இருந்தும் இது வரைவு பலைக்கைக்கான அம்சங்கள் என்பதை இக்குழு உணர்ந்தது.
“நகரில் உள்ள பகுதிகளுக்கு ஏற்ற கிரேடபிலிட்டி அம்சம் மாறக்கூடியது. அவற்றுக்கு தனி கிரேடிங் அம்சம் உண்டு. மேலும் பெரும்பாலான பெட்ரோல் பைக்குகளில் ஆரம்ப வேகம் அதிகம். எலெக்ட்ரிக் பைக்குகளிலும் இப்படி தான் இருக்க வேண்டும். வாடிக்கையாளர் எலெக்ட்ரிக் வாகனத்தை தேர்வு செய்ய வேண்டும் என நாங்கள் விரும்பினால் இந்த அம்சங்கள் எல்லாம் முக்கியம்,” என்கிறார் தருண்.
பைக் அம்சங்கள்
S340 இப்போது 5.1 விநாடியில் 0-40 கிமீ ஆரம்ப வேகம், 20 என்.எம் டார்க், 15 டிகிரி கிரேடேஷன், 60 கிமீ மற்றும் 70 கிமீ வேகம் பெற்றுள்ளன. ஆரம்ப வாடிக்கையாளர்களுக்கு இன்ஸ்டலேஷன், சார்ஜிங் கேபில், நிறுவன சேவை திட்டமான ஏதெர் ஒன் ஒராண்டு சந்தா ஆகியவை அளிக்கப்படுகின்றன.
S450 3.9 விநாடியில் 0-40 கிமீ ஆரம்ப வேகம், 80 கிமி வேகம், 75 கிமீ ரேஞ்ச், 18 டிகிரி கிரேடேஷன், 20.5 என்.எம் பெற்றுள்ளது. இதன் விலை ரூ.1,24,750. இதில் சார்ஜின் பாயிண்ட், இன்ஸ்டலேஷன் மற்றும் ஒராண்டு சேவை சந்தாவும் அளிக்கப்படுகின்றன.
இந்த ஸ்கூட்டர்களுடன் இணைக்கப்பட்டுள்ள செயலி, பாதை, பார்க்கிங் மற்றும் சார்ஜிங் மையங்களை அறிய உதவுகிறது.
ஏதெர் ஒன், சேவை தகவல்களில் வாடிக்கையாளர்களுக்கு உதவுவதோடு, அளவில்லா சவாரிகளையும் அளிக்கிறது. இவற்றுக்கு சார்ஜிங் கட்டணம் இல்லை. வீட்டில் சார்ஜ் செய்தால் அந்த கட்டணம் திரும்பி அளிக்கப்படும்.
சேவை மற்றும் பராமரிப்புக்கு உரிமையாளர்கள் எந்த கட்டணும் செலுத்த வேண்டாம். மற்ற சேவைகள் ஏதெர் ஒன் கீழ் வரும். சாலையோர சேவையும் அளிக்கப்படும்.
உள்கட்டமைப்பு வசதி
இந்த வாகனங்கள் லித்தியம் அயான் பேட்டரி மூலம் இயங்குகின்றன, டிஜிட்டல் டச் ஸ்கிரின் டாஷ்போர்டு உள்ளது, லேசான அலுமினிய உடல் அமைப்பு கொண்டுள்ளது. ஸ்மார்ட் டாஷ்போர்டு மூலம் வாடிக்கையாளர்கள் தனிப்பட்ட அறிமுக சித்திரத்தை உருவாக்கிக் கொண்டு, ரைடிங் வகையையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
இந்த பைல் ஒரு மணி நேரத்திற்குள் 90 சதவீதம் சார்ஜ் ஆகிவிடுகிறது. டாஷ்போர்டில் உள்ள வாகன கட்டுப்பாடு அமைப்பு வாகன இயகத்தை கண்காணிக்கிறது. ஜிபிஎஸ் மற்றும் பயண தொலைவை சுட்டிக்காட்டும் கருவியும் உள்ளது. அறிமுகம் சித்திரம் மூலம் அடிப்படை தகவல்களை இடம்பெறச்செய்யலாம்.
“டாஷ்போர்டின் பெரும்பகுதி, மற்றம் பிற அம்சங்கள் இந்திய சூழல், பருவநிலை, புழுதி ஆகியவற்றை மனதில் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. இந்திய வாகனத்திற்கு ஜெர்மனி டாஷ்போர்டு பொருந்தாது,”என்கிறார் தருண்.
இரண்டு வாரங்களுக்கு முன் தான், ஏதர் தனது விற்பனை மையங்கள் மற்றும் பெங்களூருவில் 17 இடங்களில் ஏதர் கிரிட் சார்ஜிங் மையங்களையும் அமைத்துள்ளது. உள்கட்டமைப்பு வசதி நிறுவப்பட்டுள்ள நிலையில் வாகனங்களுக்கான ஆர்டர்களை நிறுவனம் பெறத்துவங்கியிருக்கிறது.
மின் வாகனங்கள்
தேசிய மின் வாகன போக்குவரத்து இலக்கு திட்டம்2020–ஐ அரசு 2013 ல் அறிவித்தாலும், இதை அமலாக்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, 2011ல் 28 ஆக இருந்த மின்வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எண்ணிக்கை, 2014 ல் 7 ஆக குறைந்துவிட்டதாக நகர்புற விவகாரங்களுக்கான தேசிய கழகம் தெரிவிக்கிறது.
மேலும், மின்வாகன விற்பனை 2011ல் 1,00,000 ல் இருந்து 2014ல் 16,000 ஆக 84 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இருப்பினும், 2022 வாக்கில் 100 ஜிவாட் சூரிய மின்சக்தை இலக்கை அரசு நிர்ணயித்திருப்பதாலும், 2020 ல் 7 மில்லியன் மின் வாகன மற்றும் ஹைபிரிட் வாகனங்களை இயக்க திட்டமிட்டிருப்பதாலும், இந்த துறை மீண்டும் வேகம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக அளவில், பல நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்துள்ளன. பிரம்மோ, ஜிரோ மோட்டார் சைக்கிள்ஸ், பிஎண்டபிள்யூ, எலெக்ட்ரிக் மோட்டார்ஸ்போர்ட், ஹாலிவுட் எலெக்ட்ரிக்ஸ், யமஹா, ஹார்லே டேவிட்சன் ஆகிய நிறுவனங்கள் இதில் அடங்கும். ஜப்பானிய நிறுவனமான டெர்ரா மோட்டார்ஸ் இந்தியாவில் 2015 ல் எல்கெட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யத்துவங்கி, குர்காட்னில் உற்பத்தி ஆலை அமைப்பதாகவும் அறிவித்துள்ளது.
2015 நுகர்வோர் மின்னணு கண்காட்சியில், தைவான் நிறுவனம் கோகோரோ தனது கோகோரோ ஸ்மார்ட் ஸ்கூட்டர் மற்றும் அதற்கான பேட்டரி அமைப்பான கோகோரோ எனர்ஜி நெட்வொர்க்கையும் அறிவித்தது. மகிந்திரா நிறுவனம், ரூ.4.79 லட்சம் விலை கொண்ட மகிந்திரா இ20 வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. குஜராத்தின் யோ பைக்ஸ், இந்தியாவில் எல்கெட்ரிக் ஸ்கூட்ட பிரிவில் முன்னோடியாக திகழ்கிறது. ஹிரோ ஆர்.என்.டி டீசல் ஹைபிரிட் ஸ்கூட்டர், ஹிரோ ஸ்பிலெண்டர் ஐஸ்மார்ட், ஹிரோ லீப், மகிந்திரா ஜென்ஜி, டிவிஎஸ் கியூப், Hyosung ST-E3 EVA ஆகியவையும் இயங்கி வருகின்றன.
கோவையைச்சேர்ந்த ஆம்பியர் எலெக்ட்ரிக் (Ampere Electric) நிறுவனமும் எலெக்ட்ரிக் சைக்கிள், இரு சக்கர வாகனம் மற்றும் இ-ஸ்கூட்டர்களை உருவாக்கியுள்ளது. இவற்றுக்கான சொந்த சார்ஜர்களையும் உற்பத்தி செய்வதாக தெரிவித்துள்ளது.
ஆங்கிலத்தில்: சிந்து காஷ்யப் / தமிழில்: சைபர்சிம்மன்
"