'கேரம் என் வாழ்க்கையையே மாற்றியது' - 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகை பெற்ற உலக சாம்பியன் காசிமா நெகிழ்ச்சி!
சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான மேஹ்பூப் பாஷாவின் மகள் காசிமா, கடந்த மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற 6வது உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்கப் பதங்களை வென்று சாதித்துள்ளார்.
நம் நாட்டைப் பொறுத்தவரை கிரிக்கெட்டிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் மற்ற விளையாட்டிற்கும், அதில் சாதிப்பவர்களுக்கும் கொடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால், இந்தப் போக்கு தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாக மாறி வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
அதனால்தான், செஸ், கேரம் என மற்ற விளையாட்டுகளில் சாதிப்பவர்களையும், அரசும், மக்களும் பாராட்டி, கொண்டாடி வருகின்றனர். சர்வதேச அளவில் இந்தியாவின் பெயரை, குறிப்பாக தமிழ்நாட்டிற்கு கௌரவம் சேர்க்கும் வகையில், பட்டங்களையும், பதக்கங்களையும் வெல்லும் அவர்களுக்கு, உரிய அங்கீகாரம் கிடைத்து வருகிறது.
அந்தவகையில், கடந்த மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற 6ஆவது உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை காசிமா 3 தங்கப் பதங்களை வென்று சாதித்திருந்தார். ஆட்டோ டிரைவரான தனது தந்தையின் ஊக்கத்தால், இந்தச் சாதனையை அவர் 17 வயதில் நிகழ்த்திக் காட்டி இருந்தார்.
தற்போது அவரது சாதனையைப் பாராட்டி, மேலும் ஊக்கமளிக்கும் வகையில், அவருக்கு 1 கோடி ரூபாய் பரிசுத்தொகையை வழங்கியுள்ளது தமிழக அரசு. இதற்கான காசோலையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காசிமாவிடம் வழங்கினார்.
யார் இந்த காசிமா?
சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான மேஹ்பூப் பாஷாவின் மகள்தான் காசிமா. 17 வயது கல்லூரி மாணவியான இவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில், மகளிர் தனிநபர், இரட்டையர் பிரிவு, குழு பிரிவு என 3 பிரிவுகளிலும் தங்கம் வென்றார்.
தனது கடின உழைப்பின் மூலம் சர்வதேச அரங்கில் சாதனை படைத்த அவருக்கு, தற்போது தமிழ்நாடு அரசு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையாக அளித்து கௌரவித்துள்ளது.
“6 வயது முதல் பயிற்சி எடுத்து வருகிறேன். 7 வயதில் தேசிய அளவிலான போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தேன். எனது அப்பாதான் கோச்சிங் கொடுத்து வருகிறார். தமிழ்நாடு கேரம் சங்க செயலாளர் மரிய இருதயமும் எனக்கு கோச்சிங் கொடுக்கிறார். என் வீட்டின் சுவர், கண்ணாடி என எல்லா இடத்திலும் ‘I’m a world champion one day’ என எழுதி வைத்திருப்பேன்.“
நன்றி
எங்களது பகுதியில் சிறிய அளவில் கிளப் ஒன்றையும் என் அப்பா நடத்தி வருகிறார். அதில், 40 முதல் 45 மாணவர்கள் வரை கேரம் கற்று வருகின்றனர். இங்கு கேரம் கற்றுக் கொள்பவர்களில் பெரும்பாலானோர், ஆட்டோ, ரிக்ஷா ஓட்டுபவர்களின் பிள்ளைகள் தான்.
“14 நேஷனல் சாம்பியன், 25 ஸ்டேட் சாம்பியன், மாவட்ட சாம்பியன்கள் மற்றும் பல மாவட்ட சாம்பியன்கள் பொருளாதார பிரச்சினையால் அடுத்தகட்டத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இப்போது தமிழ்நாடு அரசு எனக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகை அளித்திருப்பது எனக்கு மட்டுமல்ல; என்னைப் போன்ற பலருக்கும் ஊக்கத்தை அளிப்பதாக இருக்கும். விளையாட்டுத்துறை அமைச்சரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.“
ஏனென்றால், ஒரு கோடி ரூபாய் என்பது நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த என்னைப் போன்றோருக்கு மிகப் பெரிய பணம். தற்போதுவரை நாங்கள் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறோம். கடன், வீட்டு வாடகை எனப் பொருளாதார பிரச்சினைகள் ஏராளம். இப்போது கேரம் விளையாட்டு எனது வாழ்வையே மாற்றிவிட்டது.
அப்பாவின் சப்போர்ட்
கேரம் என்பது இண்டோர் கேம் என்பதால், பெண்களுக்கு இது நல்ல ஒரு விளையாட்டு. இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த நான் கேரம் விளையாட ஆரம்பித்தபோது, பலர் என் அப்பாவிடம் எதற்காக பெண் பிள்ளைக்கு இந்த விளையாட்டெல்லாம் சொல்லித் தருகிறீர்கள், என அறிவுரை கூறினார்கள். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், சாதிக்க விரும்பிய எனக்கு உறுதுணையாக என் அப்பா இருந்தார்.
இப்போது தமிழ்நாடு அரசு எனக்கும், மற்ற வீராங்கனைகளுக்கும் உதவித்தொகை அளித்திருப்பது மிக்க மகிழ்ச்சி. இதன் மூலம் இந்த விளையாட்டைக் கற்றுக் கொள்ள மேலும் பலரிடம் ஆர்வம் அதிகரிக்கும், எனத் தெரிவித்துள்ளார்.
ஒரு தந்தையின் கனவு
ஆட்டோ ஓட்டுநரான அவரது தந்தை மெஹ்பூப் பாஷா கேரம் போட்டிகள் மீது கொண்டிருந்த ஆர்வமே காசிமாவின் இந்த வெற்றிக்கு தூண்டுதலாக அமைந்துள்ளது. காசிமாவின் அப்பா ஓட்டி வருவதுகூட அவரது சொந்த ஆட்டோ இல்லையாம். வாடகை ஆட்டோவை ஓட்டித்தான் குடும்பத்தைக் கவனித்துக் கொண்டு, அதோடு தன் மகளையும் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ளத் தேவையான செலவுகளைச் செய்து வருகிறார்.
“முதலில் என் மகனுக்குத்தான் கேரம் கற்றுக் கொடுத்து, சாதிக்க வைக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால், குடும்ப பொருளாதாரச் சூழல் காரணமாக, அவரால் கேரமில் பிரகாசிக்க முடியாமல், வேலைக்குச் செல்ல வேண்டியதாகி விட்டது. அதனைத் தொடர்ந்து, காசிமாவுக்கு கேரம்ல விருப்பம் இருக்குன்னு தெரிஞ்சபிறகு, அவளுக்கு கேரம் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தேன்.
நான் காசிமாவுக்கு கேரம் கத்துக்கொடுக்கிறதைப் பார்த்துட்டு நிறைய பேர் பொண்ணுக்கு இந்த விளையாட்டெல்லாம் சொல்லிக்கொடுக்காதே, என அறிவுரை கூறினார்கள். ஆனால், அவை எதையும் நான் காதில் போட்டுக் கொண்டது இல்லை. என் மகளின் விருப்பம்தான் எனக்கு முக்கியம்.
திறமைக்கு கிடைத்த பரிசு
மாநில, தேசிய அளவிலான போட்டிகளுக்கு என்னுடைய சொந்த செலவில்தான் கலந்து கொள்ள வைத்தேன்.
“போக்குவரத்துக்கே நிறைய செலவாகும். மூத்த மகளுக்கு ஆன திருமணச் செலவுக் கடனே இன்னும் நிறைய இருக்கிறது. இதற்கிடையேதான், காசிமாவின் கேரம் போட்டிகளுக்கும் செலவு செய்து வருகிறேன். இப்போது என் மகளின் திறமைக்கு உரிய பரிசு, அங்கீகாரம் கிடைத்து விட்டது,” என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் மேஹ்பூப் பாஷா.
காசிமாவைப் போலவே, கேரம் இரட்டையர் பிரிவு மற்றும் குழு போட்டியில் தலா ஒரு தங்கம் வென்ற மித்ராவுக்கு 50 லட்ச ரூபாயை தமிழ்நாடு அரசு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.