வீடில்லாத 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவற்றோர்களை மீட்டுள்ள ஆட்டோ ஓட்டுநர்!
ஆட்டோ ஓட்டுநர் முருகன், தனது உன்னத பணிக்காக குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரிடம் இருந்து விருதுகளை வென்றுள்ளார்.
ஆட்டோ ஓட்டுநரான முருகன், தெருவோரம் கடந்த 20 ஆண்டுகளில் 10,000-க்கும் அதிகமானோரை சாலைகளில் இருந்து மீட்டுள்ளார். இவர் ஒரு சமூக ஆர்வலர்.
கேரளாவின் கொச்சியில் உள்ள குடிசைப் பகுதியைச் சேர்ந்த 37 வயதான முருகன் நாட்டின் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரிடம் இருந்து பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். முருகன் 2007-ம் ஆண்டு ’தெருவோரம்’ என்கிற பெயரில் அரசு சாரா நிறுவனம் ஒன்றை நிறுவி தனது உன்னத பணியைத் தொடர்ந்து வருவதாக Milaap தெரிவிக்கிறது.
ஆதரவற்றோரை மீட்பதற்காக நகர் முழுவதும் சுற்றி வருவதற்கு முருகன் தனது ஆட்டோவைப் பயன்படுத்துகிறார். இதற்காக மாதம் 5,000 ரூபாய் செலவிடுகிறார். வருடந்தோறும் குறைந்தபட்சம் 400 பேரை மீட்கிறார்.
முருகன் Edex Live உடனான உரையாடலில் கூறும்போது,
“நான் சிறு வயதில் பிழைப்பிற்காக பிச்சை எடுத்துள்ளேன். கிடைத்த சிறு வேலைகளையும் செய்துள்ளேன். என்னுடைய பசியைப் போக்கிக்கொள்ள குப்பைத்தொட்டிகளில் உணவு தேடியுள்ளேன். பிறகு ஒருவர் ’சினேகா பவன்’ என்கிற அனாதை இல்லம் ஒன்றில் என்னை சேர்த்தார். அங்கு பத்தாண்டுகள் இருந்தேன்,” என்றார்.
ஒருவர் சாலையில் இருந்து மீட்கப்படும்போது முதலில் அவரது இடத்தின் அடிப்படையில் அடையாளம் காணப்படுவார். அதன் பிறகு தெருவோரம் குழுவினர் அந்த குறிப்பிட்ட பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையத்தை கண்டறிவார்கள். மீட்கப்பட்ட நபர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார். அங்குள்ள அதிகாரி ஒருவர் நிறுவனத்திடம் குறிப்பு எண்ணை வழங்குவார்.
இந்த செயல்முறையில் மீட்கப்பட்ட நபரின் மன நலனைக் கண்டறிய அவருக்கு மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்படும். இதற்காக அவர் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் நிறுவனத்திலேயே தங்கவைக்கப்படுவார். பின்னர் அந்த நபர் தலைமை மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர்படுத்தப்படுவார். அங்கு அந்த நபரின் மன நிலை குறித்தும் திருச்சூர் அரசு மன நல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டுமா என்பது குறித்தும் சட்டப்படி தீர்மானிக்கப்படும்.
முருகன் கூறும்போது,
“அவர்களுக்கு எந்த மாதிரியான உதவி தேவைப்படும் என்பதை புரிந்துகொள்ள முயற்சி செய்வோம். பல சந்தர்ப்பங்களில் அவர்கள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது போன்ற தகவல்கள்கூட அவர்களுக்குத் தெரிவதில்லை. இங்கு வரும் சிலர் பல் துலக்கியிருக்க மாட்டார்கள். குளித்திருக்க மாட்டார்கள். இவர்களுக்கு பல் துலக்கவோ, உடைகளை மாற்றவோகூட தெரிவதில்லை. இது நாங்கள் சந்திக்கும் மிகப்பெரிய சிக்கல்,” என்று தெரிவித்ததாக Edex Live குறிப்பிடுகிறது.
அவர் மேலும் கூறும்போது,
“நாங்கள் சோதனை செய்த பிறகு இவர்களில் பலருக்கு புற்றுநோய் அல்லது காசநோய் இருப்பது கண்டறியப்பட்டது. சில சமயங்களில் அவர்களைப் பராமரிப்பதால் எங்களுக்கும் தொற்று ஏற்படுகிறது.
“ஆனால் பச்சிளம் குழந்தைகளை பராமரிப்பது போன்றே அதே அன்புடனும் அரவணைப்புடனும் நாங்கள் அவர்களை நடத்துகிறோம்,” என்றார்.
அம்பேத்கார், அன்னை தெரசா போன்றோர் சமூகத்தின் நலிந்த பிரிவைச் சேர்ந்தவர்களுக்காக அயராது உழைத்தனர். அவர்களைக் கண்டே உந்துதல் பெற்றதாக முருகன் குறிப்பிடுகிறார்.
கட்டுரை: THINK CHANGE INDIA