வீடில்லாதோரை மீட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கும் ஆட்டோ ஓட்டுநர்!
சென்னையில் ஆட்டோ ஓட்டுநரான அருள் ராஜ், செய்யும் இந்த உன்னதமான செயலைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.
குடியிருக்க வீடில்லாமல் பலர் சாலையில் இருக்கின்றனர். இவர்களுக்கு உதவ பலர் முன்வருவதில்லை. சென்னையைச் சேர்ந்த டி அருள் ராஜ் தினமும் ஒரு ஆதரவற்ற நபரையாவது மீட்டு வருகிறார்.
ஆட்டோ ஓட்டுநரான அருள், தினமும் காலையிலும் மாலையிலும் ஆட்டோவில் பயணிகளை ஏற்றி சவாரி செய்வதில் நான்கு மணி நேரம் செலவிடுகிறார். மற்ற நேரங்களில் வீடில்லாதோரைக் கண்டுபிடித்து அவர்களுக்கு உதவி வருகிறார்.
34 வயதான அருள், 2017-ம் ஆண்டு ’கருணை உள்ளங்கள்’ என்ற அறக்கட்டளையை நிறுவினார். இந்த அறக்கட்டளை வீடில்லாத 320 பேர்களுக்கு உதவியுள்ளது. இதில் 120 பேரை அருள் அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் ஒன்று சேர்த்துள்ளார். ’தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்’ உடனான உரையாடலில் அருள் கூறும்போது,
“நான் என் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறேன். 2015ம் ஆண்டு வரை சமூக சேவையில் ஈடுபடும் எண்ணம் இருந்ததில்லை. அந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது என் மனைவிக்கு ஒரு அவசர அழைப்பு வந்தது. சைதாப்பேட்டையில் இருந்த அவரது நண்பர் அழைத்திருந்தார். அவர்கள் பட்டினியாக இருப்பதாகவும் அந்தப் பகுதியை விட்டு வெளியேற முடியாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தார். நான் அவர்களுக்கு உணவு எடுத்துச் சென்றேன். அப்போதுதான் நூற்றுக்கணக்கானோருக்கு உதவி தேவைப்பட்டதை உணர்ந்தேன்,” என்றார்.
அருள் வங்கியில் கலெக்ஷன் பிரிவில் பணிபுரிந்து வந்தார். சரியான நேரத்தில் பணியை முடிப்பதில் சிக்கல் இருந்ததால் பணியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு 2015-ம் ஆண்டு சமூக சேவையில் ஈடுபட்டார். ஆறு மாதங்கள் பணி ஏதும் இல்லை. நகரை தூய்மைப்படுத்துவதிலும் சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் நேரம் செலவிட்டார் என ஸ்டோரிபிக் தெரிவிக்கிறது.
அதேநேரம் அருள் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் குழுவில் இணைந்தார். வெள்ள நிவாரணம் வழங்குவதற்காக பிரத்யேகமாக ‘மக்களுக்கு உதவுங்கள்’ என்கிற குழுவை உருவாக்கினார். நகரின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் கோரிக்கைகள் வந்து குவிந்தன. அருள் தன்னால் இயன்ற உதவியை செய்தார்.
2016ம் ஆண்டு இறுதியில் வீடில்லாத பெண்மணி ஒருவர் தன்னை ஆதரவற்றோர் இல்லம் ஒன்றில் சேர்த்து உதவுமாறு அருளிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
”அதுவரை ஆதரவற்றோர் இல்லம் குறித்து நான் கேள்விப்பட்டதில்லை. அதற்கு முன்பும் வெள்ளம் ஏற்பட்ட சமயத்தில் ஒரு பெண்மணி இதைப் பற்றி கேட்டார். என்னால் அவருக்கு உதவமுடியவில்லை. ஆனால் வீடில்லாதோரை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட இந்த கோரிக்கை காரணமாக அமைந்தது. இதுவே என் வாழ்க்கையை நிரந்தரமாக மாற்றியது,” என்கிறார்.
இது வெறும் ஆரம்பம் மட்டுமே. 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் வீடில்லாத ஒருவர் சாலையில் கிடப்பதாகவும் சரியான நேரத்தில் அவரை மீட்காமல் போனால் அவர் உயிரிழந்துவிடும் அபாயம் இருப்பதாகவும் அவரிடம் தெரிவிக்கப்பட்டது. அருள் நேரம் கடத்தாமல் அந்த நபரை மீட்டு அதிகாலை 1.30 மணிக்கு போரூர் பகுதியில் உள்ள தனியார் இல்லம் ஒன்றில் சேர்த்தார்.
இந்த செயலினால் அவருக்கு ஆத்ம திருப்தி கிடைத்தது. விரைவிலேயே வீடில்லாதவர்களைக் கண்டறிந்து அவர்களை இல்லங்களில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டார். அருள் தினமும் சுமார் 500 ரூபாய் சம்பாதிக்கிறார். இந்தத் தொகை எரிபொருள் செலவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
“ஒவ்வொரு மாதமும் சுமார் 10 பேரை மீட்கிறோம். 2017ம் ஆண்டு ஆட்டோ ஒன்றை வாங்கினேன். என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் 90,000 ரூபாய் கொடுத்து உதவினார். மீதமுள்ள தொகையை மாதத் தவணையில் செலுத்தி வருகிறேன்,” என்றார்.
2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ’கருணை உள்ளங்கள்’ அறக்கட்டளை கூகுள் ப்ளேஸ்டோரில் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் வீடில்லாதோரின் படங்களை பதிவேற்றம் செய்யலாம். அதன் பிறகு இந்நிறுவனம் தன்னார்வலர்களை நியமிக்கும். 9841776685 என்கிற எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது உதவ முன்வரலாம்.
கட்டுரை: THINK CHANGE INDIA