150 கோடி ரூபாய் மதிப்பு பீர் பிராண்டை ஓராண்டில் உருவாக்கிய அவ்நீத் சிங்!
2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டு டெல்லி, பஞ்சாப், உத்திரப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் Medusa Beverages மற்ற நகரங்களிலும் விரிவடைய திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் பீர் விற்பனை வளர்ச்சியடையாத துறையாகவே உள்ளது. இதில் ஏராளமான கட்டுப்பாடுகள் நிலவுகின்றன. பல மாநிலங்களில் இறக்குமதி வரி வசூலிக்கப்படுகின்றன. இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் இதற்கான விளம்பரமும் விநியோகமும் தடை செய்யப்பட்டுள்ளன. இப்படி பீர் விற்பனையில் பல்வேறு சவால்கள் உள்ளன.
சில மாநிலங்களில் மட்டுமே பீர் விநியோகம் முறைப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் அரசாங்கமே விநியோகஸ்தர்களாக செயல்பட்டு வருகின்றன.
அவ்நீத் சிங் ஆர்கிடெக்சர் படித்துக்கொண்டிருந்தார். ஆரம்பத்தில் பீர் துறையில் இவருக்கு அதிக ஈடுபாடு இருக்கவில்லை. 19 வயதில் தனது சொந்த சேமிப்பு கொண்டும் அப்பாவிடம் 2 லட்ச ரூபாய் சீட் கேப்பிடல் பெற்றுக்கொண்டும் Bella Peau என்கிற சருமப் பராமரிப்பு பிராண்டைத் தொடங்கினார். இதில் எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை. அவ்நீத் உணவு மற்றும் பானங்கள் கஃபே தொடங்கினார்.
இந்த சமயத்தில்தான் பீர் பிராண்ட் உருவாக்குவதற்கான தேவை இருப்பதைத் தெரிந்துகொண்டார். 2016-ம் ஆண்டு டெல்லியில் மதுக்கடை திறக்க உரிமம் பெற்றார்.
“தனிப்பட்ட முறையில் எனக்கு பீர் மிகவும் நெருக்கமான ஒன்று. இந்தியாவில் பீர் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதிக பயனர்களைச் சென்றடைய பிரீமியம் பீர் பிராண்ட் உருவாக்கும் எண்ணம் தோன்றியது,” என்கிறார் அவ்நீத்.
அவ்நீத் 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் Medusa Beverages நிறுவினார். 2018-ம் ஆண்டு இதன் செயல்பாடுகள் தொடங்கப்பட்டன.
2018-ம் ஆண்டு 70 கோடி ரூபாய் டர்ன்ஓவர் கொண்ட இந்நிறுவனம் 2019ம் ஆண்டு 150 கோடி ரூபாய் டர்ன்ஓவர் எட்டியது. நாடு முழுவதும் கிராஃப்ட் பீர் தேவை அதிகரித்திருக்கிறது என்பதையே இந்த வளர்ச்சி உணர்த்துகிறது.
அடுத்தாக டெல்லியைத் தொடர்ந்து பஞ்சாப், உத்திரப்பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற இடங்களிலும் Medusa Beverages தொடங்கப்பட்டது.
பிராண்ட் வளர்ச்சி குறித்து அவ்நீத் கூறும்போது,
“நாங்கள் முதல் ஆண்டிலேயே டெல்லியில் மூன்று லட்சம் கேஸ் விற்பனை செய்தோம். கடந்த இருபதாண்டுகளில் டெல்லியில் இத்தகைய வெற்றியை எந்த ஒரு பிராண்டும் அடைந்ததில்லை. இந்த ஆண்டு மேலும் வளர்ச்சியடைய திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.
தயாரிப்பு
தயாரிப்புப் பணிகள் ஒப்பந்தம் அல்லது லீஸ் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிறுவனத்தின் தொழிற்சாலை ஒன்று லீஸ் அடிப்படையில் இயங்கி வருவதாக அவ்நீத் தெரிவிக்கிறார்.
“சொந்தமாக தொழிற்சாலை அமைக்கும் திட்டம் தற்சமயம் இல்லை. தொழிற்சாலையைக் காட்டிலும் பிராண்ட் டெவலப்மெண்ட் தொடர்பாக கோடிக்கணக்கில் செலவிடுவது சிறந்தது,” என்கிறார் அவ்நீத்.
நிபுணர் குழுவைக் கொண்டு ரெசிபி உருவாக்கப்பட்டுள்ளது. “எங்களது பீர் மிகச்சிறந்த பார்லி மால்ட் மற்றும் ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஹாப்ஸ் கலவையுடன் தயாரிக்கப்படுகிறது,” என்கிறார் அவ்நீத்.
இன்றைய தலைமுறையினரின் ஆர்வம் அதிகரித்திருப்பதால் தயாரிப்பும் அதிகரித்துள்ளது. விலையில் 40 சதவீதம் மூலப்பொருட்களுக்கும் மீதமுள்ளவை பேக்கேஜிங் மற்றும் பாட்டில்களில் நிரப்பப்படுவதற்கும் செலவிடப்படுகின்றன. Medusa பீர் 120 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
“சந்தையில் சிறப்பாக செயல்பட நாங்கள் கேன் மற்றும் பாட்டில்களில் பீர் விற்பனை செய்கிறோம். தற்போது எங்கள் குழு கேன்களை புரோமோட் செய்து வருகிறது. கண்ணாடி பாடில்களைக் காட்டிலும் கேன் விலை அதிகம் என்றாலும் சுகாதாரமானது. இந்தியாவில் பாட்டில் பிரிவு, சந்தை அளவில் 82 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளது. கேன்கள் மீதமுள்ள 18 சதவீதம் பங்களிக்கிறது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது வகைகளில் (I.M.F.L) அலுமினிய கேன்கள் இல்லை. பாட்டில்களில் மட்டுமே கிடைக்கின்றன. உத்திரப்பிரதேசத்தில் ஃப்ரூட்டி போன்று டெட்ரா பேக்கில் அறிமுகப்படுத்தியுள்ளோம். 180 மி.லிட்டர் பேக்கில் கிடைக்கின்றன,” என்றார் அவ்நீத்.
2024-ம் ஆண்டில் கிராஃப்ட் பீர் துறை 900 மில்லியன் டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக கோல்ட்ஸ்டெயின் ரிசர்ச் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
“எங்கள் செயல்பாடுகளை விரிவடையச் செய்து இந்தியா முழுவதும் செயல்பட விரும்புகிறோம். தயாரிப்புகள் வெவ்வேறு வகைகளையும் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறோம்,” என்கிறார் அவ்நீத்.
ஆங்கில கட்டுரையாளர்: சிந்து காஷ்யப் | தமிழில்: ஸ்ரீவித்யா