மதுக்கடை விற்பனையாளர் இன்று ரூ.1,360 கோடி ஆண்டு வருவாய் ஈட்டும் மதுபான நிறுவன உரிமையாளர்!
அசோக் ஜெயினின் கனவு, ஓர் சொந்த மதுபானக் கிடங்கை உருவாக்குவது, மதுவை விற்பனை செய்ய பாட்டில்களை உருவாக்குதல், இறுதியில் மதுபான ஆலைகளை நிறுவுதல். இந்த அனைத்து லட்சியத்திலும் வெற்றியடைந்துள்ளார்.
ஹரியானாவில் உள்ள ஒரு சிறிய ஒயின் கடையில் மதுபான விற்பனையாளராக இருந்தவர் அசோக் ஜெயின். அவர், விற்பனையாளராக மதுபானங்களை விற்றுக் கொண்டிருந்தாலும் அவரின் கனவுகளும், லட்சியங்களும் மிகப் பெரிதாக இருந்தன. அந்த கனவுகளை நனவாக்க அவர் பாடுபட்டார்.
தனது நண்பருடன் இணைந்து சேமித்த பணத்தில் தான் பணிபுரிந்த மதுக்கடையையே விலைக்கு வாங்கினர். விற்பனை ஓகோவென போக, மேலும், கொஞ்சம் பணம் சேர்த்து இன்னும் பல கடைகளையும் வாங்கினார். தொடர்ந்து குர்கான் மதுபான சிண்டிக்கேட்டில் உறுப்பினராகவும் ஆனார். காலப்போக்கில் அசோக் தனது கடின உழைப்பால், மதுபான மொத்த விற்பனையாளராகவும், பாட்டிலராகவும், டிஸ்டில்லராகவும் மாறினார்.
1996ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில், அசோக் தனது சொந்த மதுபான வியாபாரத்தின் உச்சத்தில் இருந்தார். என்.வி. குழுமம் என்ற அவர்களின் மதுபான ஸ்தாபனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் வணிக மேம்பாட்டு இயக்குநராக இருக்கும் அசோக்கின் மகன் வருண் ஜெயின் இதுகுறித்து கூறியதாவது,
ஒவ்வொருவருக்கும் ஓர் கனவு, லட்சியம் இருக்கிறது. எனது தந்தையின் கனவு, அவர் ஓர் சொந்த மதுபானக் கிடங்கை உருவாக்கவேண்டும் என்பதாகும். அதை அவர் செய்தார். இதையடுத்து, பிற நிறுவனங்களின் மதுவை விற்பனை செய்யத் தேவையான பாட்டில்களை உருவாக்கும் நிறுவனத்தை உருவாக்கத் துடித்தார். அதையும் வெற்றிகரமாக செய்து முடித்தார். மேலும், அவரது கனவு தொடர்ந்து வளர்ந்தது.
சொந்தமாக ஆல்கஹால் தயாரித்து விற்பனை செய்வதுதான் அது. அதிலும் இறங்கி வெற்றி பெற்றுவிட்டார் என்கிறார்.
என்.வி. குழுமம் தொடங்கப்பட்டபோது மதுபானத்துக்கான உள்நாட்டு சந்தை எவ்வாறு வளர்ந்திருந்தது என்பது குறித்தும் அவர் விவரிக்கிறார். அந்த நேரத்தில், Black Label ஓர் மிகப் பெரிய விஸ்கி சந்தை. அதே நேரத்தில் white spirits மற்றும் Bacardi வேறு களத்தில் இருந்தனர். ஆனால் எனது தந்தை ஓர் திடமான வணிகத் திட்டத்துடனேயே பாட்டில் தயாரிப்புத் தொழிலில் இறங்கினார். இதனால்தான் அவர் தனது அடுத்தடுத்த திட்டங்களில் வெற்றிப் பெற்றார் என்கிறார்.
என்.வி. குழுமம் கடந்த நிதியாண்டில் ரூ.1,360 கோடி விற்றுமுதல் செய்துள்ளது. மேலும், மாதத்துக்கு சுமார் 120 கோடி ரூபாய் விற்பனையை சாதிக்கிறது. நிறுவனத்தில் சுமார் 500 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
இந்தியாவின் பெருகிவரும் மக்கள்தொகை, வருமானம் அதிகரிப்பு, மக்களின் வாங்கும் திறனில் ஏற்பட்ட உயர்வு போன்றவை நாட்டின் வளர்ச்சியை காட்டுகிறது. இத்தகைய அணுகுமுறை மற்றும் வாழ்க்கை முறையின் மாற்றங்கள் மக்கள் மது அருந்துவதை மேலும் ஏற்றுக்கொள்ளச் செய்துள்ளன. இந்த வளர்ச்சி காரணிகளின் அடிப்படையில், இந்தியாவில் மது பான சந்தை 2016- 2024க்கு இடையே 7.4 சதவிகிதம் சிஏஜிஆரில் வளர்ந்து 39.7 பில்லியன் டாலர்களை எட்டும் என்று கோல்ட்ஸ்டைன் ஆராய்ச்சி தெரிவித்துள்ளது.
வளர்ந்து வரும் சந்தையின் தேவையைப் பூர்த்தி செய்ய, என்.வி. குழுமம் Party Special, Royal Envy மற்றும் Discovery போன்ற பிராண்டுகளில் தனது சொந்த விஸ்கி சந்தையை உருவாக்குகியது. மேலும், ஓட்கா மற்றும் ஜின்னுக்கு Blue Moon என்றும், ரம்முக்கு Crazy Romeo என்றும் பெயரிட்டு விற்பனையை சூடுபிடிக்கச் செய்தனர். மேலும், இவர்கள் Pernod Ricard, Bacardi Martini மற்றும் Diageo ஆகியோருக்கும் மதுபானங்களை உற்பத்தி செய்தளித்தனர்.
என்.வி. குழுமம் ஹரியானாவில் இரண்டு, பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒன்று என 4 மதுபான ஆலைகளை நிறுவினர். கோவா மற்றும் சண்டிகரில் தலா ஓர் பாட்டில் தயாரிப்பு ஆலை உள்ளது.
இதுகுறித்து வருண் மேலும் கூறியதாவது, “பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் தயாரிக்கப்படும் மதுபானங்கள் தானியங்களை அடிப்படையாகக் கொண்டவை. எங்களது என்.வி. குழுமம் ஒவ்வொரு அடியிலும் பல சப்ளையர்களைக் கொண்டுள்ளது. அதாவது பாட்டில்கள், மூடிகள், பேக்கேஜிங் மற்றும் விற்பனையாளர்கள், விலை நிர்ணயம் என அனைத்து அலகுகளிலும் தரத்தை பூர்த்தி செய்ய முயற்சிக்கிறோம்.
”எனது தந்தை முதன்முதலில் விற்பனை செய்யத் தொடங்கியபோது, சந்தையில் என்னென்ன பொருள்கள் நன்றாக விற்பனையாகின்றன, அவை எவ்வளவு உயர்ந்த தரம் வாய்ந்தவை என்பதை அவதானித்தார். இதே வழிமுறையைத்தான் இன்றளவும் நாங்கள் பின்பற்றி வருகிறோம்,” என வருண் கூறுகிறார்.
நாங்கள் மலிவான, வெகுஜன தயாரிப்பில் நுழைந்தபோது, பல்வேறு ரகங்களை பல்வேறு நிறுவனங்கள் களமிறக்கி எங்களுடன் போட்டியிட்டன. இந்த பிராண்டுகளுக்கு இடையிலான சண்டை பெரும்பாலும் சந்தைப் பங்கிற்காகவே தவிர லாபத்திற்காக அல்ல. ஒரு பாட்டிலை வாங்கும்போது நுகர்வோர் செலுத்தும் விலையை மாநில அரசின் கொள்கைகள் நிர்ணயிக்கின்றன. மேலும், இந்த விலையானது மாநிலத்துக்கு மாநிலம் வித்தியாசப்படுகிறது.
விஸ்கி தயாரிக்க, ஓர் நிறுவனம் ஸ்காட்லாந்தில் இருந்து ஸ்காட்ச் இறக்குமதி செய்து, அதைக் கலக்கிறது. இதனால் செலவு அதிகரிக்கிறது. அதோடு மாநிலத்துக்கு மாநிலம் மது அருந்த நிர்ணயிக்கப்பட்டிருக்கும் வயதும் வேறுபடுகிறது. ஆனால் இது எதுவுமே மது விற்பனையைப் பாதிப்பதில்லை.
என்.வி. குழுமம் டெல்லியில் ஒரு வலுவான விநியோக அமைப்பைக் கொண்டுள்ளது. இது பல்வேறு பிராண்டுகளின் தயாரிப்புகளையும் விற்பனை செய்கிறது. ஆனால் இவர்கள் தங்களின் விளம்பர யுக்திகளை மாநிலத்துக்கு மாநிலம் மாற்றுகின்றனர்.
மது விற்பனையை, மது அருந்துவதை நேரடியாக ஊக்குவித்து விளம்பரப்படுத்த இயலாது. எனவே நிகழாண்டு முதல் டிஜிட்டல் மீடியா மார்க்கெட்டிங் நிறுவனத்தில் இறங்கியுள்ளனர். விஸ்கி தயாரிப்புகளைச் சுற்றியுள்ள விஷயங்களை விளம்பரப்படுத்த ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமும் சிறப்பாக பயன்படுத்துகின்றனர்.
நிறுவனம் தனது உற்பத்தி மற்றும் விநியோகத்தை விரிவுபடுத்துவதற்காக அமைத்த குழு அடுத்த ஆண்டில் 300 கோடி ரூபாய் முதலீடுகளை வரிசைப்படுத்தியுள்ளது. அரபு நாடுகள் மற்றும் ஓமனுக்கு மதுபானங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தொடர்ந்து, அமெரிக்கா, ஐரோப்பா, சீனா மற்றும் பல நாடுகளிலும் தனது சிறகை விரித்து வெளிநாட்டில் மதுபானம் தயாரித்து விற்பனை செய்வதே லட்சியமாகக் கொண்டு என்.வி. குழுமம் செயல்பட்டு வருகிறது என்பதே உண்மை.
ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: திவ்யாதரன்