'59 நிமிட கடன் வசதியை சிறுதொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை’: SBI தலைவர்!
இந்த கடன் வசதித் திட்டம் வெற்றி அடையாமல் இருக்கப் போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம்.
கடந்த ஆண்டு அரசு அறிமுகம் செய்த 59 நிமிட கடன் வசதி குறித்து சிறு தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை என ஸ்டேட் வங்கி தலைவர் ரஜ்னிஷ் குமார் தெரிவித்துள்ளார். எனினும், இந்த கடன் வசதியை வங்கி, வாகனம் வாங்குபவர்களுக்கு, குறிப்பாக கார் கடன்களுக்கு விரிவாக்கம் செய்ய உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரூ.25 கோடி விற்றுமுதல் உள்ள வர்த்தகர், இந்த திட்டத்தின் கீழ் 59 நிமிடங்களில், ரூ.5 கோடிக்கான அனுமதியை பெறலாம் என அவர் தெரிவித்தார்.
“இந்த வசதி மிகவும் வெற்றிகரமானதாக ஆகியிருக்க வேண்டும். எனினும், இது தொடர்பான விழிப்புணர்வு, இன்னமும் இலக்கு வாடிக்கையாளர்களான சிறு தொழில் நிறுவனங்களை சென்றடையவில்லை என நினைகிறேன் என்று ரஜ்னிஷ் குமார், ஆண்டு வங்கி மாநாடு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்று சொல்லப்படும், நடுத்தர, சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களில் 90 சதவீத நிறுவனங்கள் இதன் கீழ் கடன் பெறலாம் என அவர் தெரிவித்தார்.
“இது முகவும் சக்தி வாய்ந்த மேடையாகலாம். ஆனால் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது,” என்று அவர் கூறினார். ஜி.எஸ்.டி வரி செலுத்தல், வருமான வரி, ரொக்க பழக்கம் ஆகிய தகவல்களை அலசி இந்த கடனுக்கு தகுதி வாய்ந்தவர்கள் அல்கோரிதமால் தேர்வு செய்யப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.”
இந்தத் திட்டத்தை கார் மற்றும் வாகன கடன் பிரிவுகளுக்கு விரிவாக்கம் செய்ய வங்கி திட்டமிட்டிருப்பாதாகவும் அவர் கூறினார்.
கடன் அனுமதி வழங்குபவர்கள் எதிர்காலத்தில் பதில் சொல்லும் பொறுப்புக்கு இலக்காகலாம் எனும் அச்சம் பற்றி குறிப்பிட்டவர் அல்கோரிதம் அனுமதி அளிக்கும் கடனுக்கு யாரும் பொறுப்பு அல்ல என்று தெரிவித்தார். அனுமதிக்கு பிந்தைய ஆவணங்கள் சரி பார்த்தலை மட்டும் வங்கி ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
பொதுத் துறை வங்கிகள் 59 நிமிட கடன் வசதியை அறிமுகம் செய்த பிறகு, 50,706 கோரிக்கைகளுக்கு கொள்கை அனுமதி அளிக்கப்பட்டு, 27,893 கடன்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி தெரிவிக்கிறது.
செய்தி : பிடிஐ | தமிழில் : சைபர்சிம்மன்