சிறு வணிகங்களை ஊக்குவிக்கும் மூன்று முக்கியத் திட்டங்கள்!
சிறு வணிகங்களுக்கென சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகம் பல்வேறு சந்தைப்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் சில முக்கிய திட்டங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
சிறு வணிகங்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (MSME) வலுவான சுற்றுச்சூழல் இந்தியாவில் உள்ளது. இருப்பினும் அவை முறை சாரா வணிகமாகவே உள்ளது. இந்தப் பிரிவில் வலுவான பிராண்டிங் இல்லாத காரணத்தால் ஒரு எம்.எஸ்.எம்.ஈ தயாரிப்பை மற்றொரு தயாரிப்பில் இருந்து வேறுபடுத்துவது கடினமாக உள்ளது.
எனவே தயாரிப்பை மட்டுமல்லாது நிறுவனத்தையும் ஒருசேர சந்தைப்படுத்துவதே பிராண்டை உருவாக்குவதற்கான எளிமையான வழியாகும். இதைச் சொல்வது எளிது. எனினும் செயல்படுத்துவது கடினம். வளங்களும் நிதியும் குறைவாக இருப்பதால் பல்வேறு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களும் சிறு வணிகங்களும் தங்களது தயாரிப்பை சரியான வாடிக்கையாளர்களிடம் எடுத்துச்செல்வதில் சவால்களை சந்திக்கின்றன.
இதற்குத் தீர்வுகாணும் வகையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகம் சிறு வணிகங்கள் தங்களது வணிகத்தை சந்தைப்படுத்தவும் விற்பனையை மேம்படுத்தவும் உதவும் எண்ணற்ற திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. வணிகத்தை சந்தைப்படுத்தவும் விற்பனையை மேம்படுத்தவும் உதவும் மூன்று முக்கிய திட்டங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
சர்வதேச கூட்டுறவு திட்டம் (International Cooperation Scheme)
இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை தொடர்பான சர்வதேச கருத்தரங்கங்கள், உச்சிமாநாடுகள், அமர்வுகள் போன்றவை தொழில் சங்கங்கள் மற்றும் அரசு நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்பட இந்தத் திட்டம் உதவுகிறது.
இந்த திட்டம் வாயிலாக ஏற்பாடு செய்யப்படும் மிகப்பெரிய சர்வதேச கண்காட்சி மற்றும் சர்வதேச மாநாடுகள், அமர்வுகள், பயிற்சி பட்டறைகள், கூட்டு குழு சந்திப்புகள், கூட்டு பணியாளர் குழு சந்திப்புகள் போன்றவற்றின் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பலனடையலாம்.
விமான கட்டணம், இடவசதிக்கான வாடகை, சரக்கு கட்டணம், விளம்பரக் கட்டணம், சர்வதேச கண்காட்சிகள்/ வர்த்தக கண்காட்சிகள் போன்றவற்றில் பங்கேற்கும் பட்சத்தில் நுழைவு/பதிவு கட்டணம் போன்றவற்றிகான செலவுகளை ஈடு செய்வதற்கு சர்வதேச கூட்டுறவு திட்டம் நிதியுதவி அளிக்கிறது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையை வளர்ச்சியடையச் செய்து மேம்படுத்துவதில் ஈடுபட்டுள்ள அரசு நிறுவனங்கள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட தொழில் சங்கங்கள் இதற்கென பரிந்துரைக்கப்பட்ட படிவத்தை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சக இயக்குனர் பெயரில் அனுப்பி இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
தொடர்பு கொள்ள: Director (IC), M/o MSME
Ph:23063198, Fax: 23061756
Email: [email protected]
சந்தைப்படுத்தல் உதவித் திட்டம் (Marketing Assistance Scheme)
வெளிநாடுகளில் கண்காட்சிகள் ஏற்பாடு செய்தல், சர்வதேச கண்காட்சிகளிலும் வர்த்தக கண்காட்சிகளிலும் பங்கேற்றுக்கொள்ளுதல், மற்ற நிறுவனங்கள், தொழில் சங்கங்கள், ஏஜென்சிக்கள் ஏற்பாடு செய்யும் கண்காட்சிகளில் இணைந்து ஸ்பான்சர் செய்தல், வாடிக்கையாளர்-விற்பனையாளர் சந்திப்புகள், தீவிர பிரச்சாரங்கள், சந்தைப்படுத்தும் நடவடிக்கைகள் போன்றவற்றை ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு இந்தத் திட்டம் உதவுகிறது.
சர்வதேச கண்காட்சியிலோ அல்லது வர்த்தக கண்காட்சியிலோ பங்கேற்பதற்கான அதிகபட்ச பட்ஜெட் ஆதரவு ஒரு நிகழ்ச்சிக்கு 30 லட்ச ரூபாய் வரை ஆகும் (லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு 40 லட்ச ரூபாய்).
மேலும் கட்டுமானம் மற்றும் மாற்றியமைக்கும் கட்டணங்கள் உள்ளிட்ட இடவசதிக்கான வாடகை, விளம்பரங்கள், அச்சுப்பொருட்கள், போக்குவரத்து போன்ற செலவுகளின் பல்வேறு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு உள்நாட்டு கண்காட்சிகள் மற்றும் வர்த்தக கண்காட்சிகளுக்கான பட்ஜெட் நிர்ணயிக்கப்படும்.
எனினும் இத்தகைய கண்காட்சிகள் மற்றும் வர்த்தக கண்காட்சிகளை ஏற்பாடு செய்வதற்கான நிகர செலவுகளுக்கான பட்ஜெட் ஆதரவு அதிகபட்சமான 45 லட்ச ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கண்காட்சி அல்லது வர்த்தக கண்காட்சியில் பங்கேற்பதற்கான பட்ஜெட் வரம்பு 15 லட்ச ரூபாய் ஆகும்.
நிறுவனத்தின் அளவு மற்றும் வகையைப் பொறுத்து தொழில்முனைவோருக்கு விமான கட்டணம் மற்றும் இடவசதிக்கான வாடகையில் 25 சதவீதம் முதல் 95 சதவீதம் வரை நிதி உதவி வழங்கப்படும்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழில் சங்கங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் தொடர்புடைய மற்ற நிறுவனங்கள் போன்றவை இந்த திட்டத்தில் பலனடைய தகுதியுடையவர்களாக கருதப்படுவர். அருகிலுள்ள தேசிய சிறு தொழில் கழகத்தின் அலுவலகத்தில் உள்ள கிளை மேலாளரிடம் முழு விவரங்களையும் சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம்.
தொடர்புகொள்ள: GM (Business Dev.), NSIC
Ph: 011-26311109
Email: [email protected]
கொள்முதல் மற்றும் சந்தை ஆதரவு திட்டம் (Procurement and Marketing Support Scheme – P&MS)
குறு மற்றும் சிறு நிறுவனங்கள் உள்நாட்டு சந்தைகளை உருவாக்கவும் சந்தையை அணுகுவதற்கான புதிய முயற்சிகளை ஊக்குவிக்கவும் உதவும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான பொது கொள்முதல் திட்டம் 2012 ஆர்டரை திறம்பட நடைமுறைப்படுத்துவதற்காக சந்தை இணைப்புகளை எளிதாக்குகிறது. வணிக வளர்ச்சியின் பல்வேறு அம்சங்கள் குறித்து குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு எடுத்துரைக்கிறது. வர்த்தக கண்காட்சிகள், சமீபத்திய சந்தை நுட்பங்கள் போன்றவை குறித்த முழுமையான விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த, தகுதியுடைய, தனிப்பட்ட குறு மற்றும் சிறு நிறுவனங்கள் ஆன்லைனில் தங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.
தொடர்புகொள்ள : Joint Development Commissioner O/o DC, MSME, Nirman Bhawan, New Delhi
Ph: 011-23061091
Email- [email protected]
ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: ஸ்ரீவித்யா