ஆயுர்வேத மருத்துவர் டூ நடிகை: பன்முகப் பெண்ணாக தன்னை செதுக்கிய ரேச்சல் ரெபெக்கா!
நடிகை, தன்நம்பிக்கை பேச்சாளர் என்று தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டு முன்உதாரண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார் ரேச்சல்.
வாழ்க்கைத் தரும் எதிர்பாராத திருப்பங்களை அதன் போக்கிலேயே அனுபவித்து தன்னை பன்முகம் கொண்டவராக செதுக்கிக் கொண்டவர் ஆயுர்வேத மருத்துவர் ரேச்சல் ரெபெக்கா. நடிகை, தன்நம்பிக்கை பேச்சாளர் என்று தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டு முன்உதாரண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார் ரேச்சல்.
சுய-உந்துதல் மற்றும் சுய- உணர்தல் என்றால் என்ன என்பதை தெளிவுபடுத்த மருத்துவர் ரேச்சல் ரெபேக்கா பல சுவாரஸ்யங்களை தன்னகத்தே கொண்டிருக்கிறார். இந்த சர்வதேச மகளிர் தினச் சிறப்பாக இவருடனான நேர்காணல் தொகுப்பைப் பார்ப்போம்...
வேலூரைச் சேர்ந்த ரேச்சல், சிறு வயது முதலே அம்மா கடைபிடித்து வந்த ஆரோக்கியமான மருத்துவப் பழக்கத்தால் ஈர்க்கப்பட்டு, ஆயுர்வேதம் படிக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டார். அவர் விரும்பியதைப் போலவே சென்னையில் இளநிலை ஆயுர்வேதம் படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இளநிலைக்குப் பின்னர் பெங்களூருவில் மௌலிக சித்தாந்தத்தை முதுநிலை பாடமாக எடுத்து படித்துள்ளார்.
”படிப்பு ஒருபக்கம் இருக்க மீடியாவிற்குள் நுழைய வேண்டும் என்ற ஆசையும் எனக்கு இருந்தது. நான் பரதநாட்டியக் கலைஞரும் கூட, என்னுடைய சொந்த முயற்சியில் நானே தனியார் தொலைக்காட்சி ஒன்றை அணுகி ஆயுர்வேத மருத்துவம் தொடர்பான நிகழ்ச்சிக்கான என்னுடைய திட்டத்தைக் கூற அது அவர்களுக்குப் பிடித்துப் போனது. இப்படியாக மீடியா பயணம் தொடங்க படங்களிலும் நடிக்கத் தொடங்கினேன்,” என்றார்.
2017ம் ஆண்டில் ’இப்படை வெல்லும்’ என்ற படத்தில் நடிக்கத் தொடங்கி பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். கடைசியாக இப்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘கடைசி விவசாயி’ படத்தில் நான் ஏற்று நடித்த மிக முக்கியமான கதாபாத்திரம் எனக்கு மேலும் நற்பெயரைப் பெற்று தந்திருக்கிறது.
அந்தப் படத்தில் மாஜிஸ்திரேட்டு மங்கையர்கரசியாக நான் நடித்தேன் என்பதை விட வாழ்ந்திருக்கிறேன் என்றே சொல்லலாம். இந்தப்படப்பிடிப்பு உசிலம்பட்டியில் நடந்தது அந்த ஊர் மக்கள் என்னை அவ்வளவு பாசத்துடன் அவர்கள் வீட்டுப் பெண்ணாகப் பார்த்தனர். முக்கியமாக இந்தப் படத்தின் கதையை நகர்த்தி செல்லும் தாத்தா என்னுடை அவருடைய சொந்த பேத்தியாகவே பார்த்தார்.
புதிய சொந்தங்களோடு பாராட்டுகளையும் கொடுத்திருக்கிறது இப்படம். என்னுடைய படைப்பை பார்த்து விஜய்சேதுபதி, இயக்குநர்கள் சீனு ராமசாமி, மிஸ்கின் சார் உள்ளிட்டோர் பாராட்டியது எனக்கு மேலும் உத்வேகம் தந்திருக்கிறது.
"ஒரு அழகான பொண்ணு முகத்துல குங்குமப் பொட்டு எவ்வளவு அழகா இருக்குமோ அப்படி இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் அவ்வளவு அழகா இருந்துச்சு. ரொம்ப நிறைவா நடிச்சிருக்கீங்க,"ன்னு மிஸ்கின் சாரே எனக்கு போன் செய்து பாராட்டியதை விட வேறு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும்.
அவருடைய அடுத்த படத்தில் வாய்ப்பும் கேட்டிருக்கிறேன், நிச்சயம் தருகிறேன் என்று கூறி இருக்கிறார். இந்தப் படத்தில் என்னுடைய நடிப்பையும் மற்றவர்களின் பாராட்டையும் பார்த்துவிட்டு பெற்றோர், கணவர் என குடும்பத்தினர் மகிழ்ச்சியின் தினந்தோறும் இயக்குனர் மணிகண்டனுக்கு நன்றி சொல்லி வருகின்றனர். தொடர்ந்து எந்த திரைப்படமாக இருந்தாலும் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்கத் தயாராக இருக்கிறேன் என்று தன்னுடைய திரை அனுபவத்தை மகிழ்ச்சியோடு பகிர்ந்தார் ரேச்சல்.
நடிகையாகிவிட்டதால் மருத்துவப் பணிக்கு முழுக்கு போட்டுவிடவில்லை இவர். சென்னை மடிப்பாக்கத்தில் ‘பிரயத்னா’ என்ற மருத்துவமனையை நடத்தி வரும் ரேச்சல், அங்கு நோயாளிகளுக்கு ஆயுர்வேத சிகிச்சையும் அளித்து வருகிறார்.
நடிகை, மருத்துவர் மட்டுமல்ல தன்நம்பிக்கைப் பேச்சாளராகவும் தன்னுடைய முத்திரையை பதித்திருக்கும் ரேச்சல், கடந்த 2 ஆண்டுகளாக தன்னுடைய அடுத்த தேடலான மன நலம் பற்றி படித்து வருகிறார்.
“மனம் தான் அத்தனையும் என்பதையே ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. அதனால் இளநிலை ஆயுர்வேத மருத்துவம் படித்த பிறகு, மௌலிக சித்தார்ந்தம் என்ற பாடத்தில் முதுநிலை பயின்றேன. இப்போது சைக்கோதெரபி படித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு பிரச்னை வந்தால் அதன் ஆதாரம் என்ன, அதை ஏன் நான் பிரச்னையாகப் பார்க்கிறேன், சமூகம் சொல்வதால் ஒன்று பிரச்னையாகிவிடுமா என்ற பல்வேறு கேள்விகளுக்கும் நமக்குள்ளாக சுதந்திரத்தை தேடுவதற்காக உளவியலை விரும்பித் தேர்ந்தெடுத்து படித்து வருகிறேன்.”
படிக்கும் உளவியலை நடைமுறைப்படுத்தும் விதமாகவே நடிப்பைப் பார்க்கிறேன். ஒரு கதாபாத்திரத்தை புரிந்து கொள்வதும் மற்றவர்களின் மனநிலையை புரிந்து கொள்வதைப் போன்றது தான். இது மட்டுமல்ல ஆயுர்வேத சிகிச்சை அளிக்கும் போதும், அன்றாட வாழ்வியல் என அனைத்தும் மனம் சார்ந்தே இருக்கிறது. உளவியல் ரீதியிலாக ஒன்றை அணுகும் போது உண்மையில் நாமும் தெளிவு பெறலாம் மற்றவர்களும் மனத்தெளிவு அடைய உதவ முடியும்.
”சவுகரியமானது என்று நினைத்தால் எல்லாப் பெண்களாலும் எல்லாவற்றையும் செய்ய முடியும். யாரும் யாரையும் பின்பற்றத் தேவையில்லை, உனக்கு நீ செய்வது சரியென்றால் எனக்கு நான் செய்வது சரி என்ற மனநிலை அனைவருக்கும் வர வேண்டும். இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சித்தாந்தம் பேசாமல் யதார்த்தத்திற்கு ஏற்ப வாழலாம் அப்படித்தான் வாழவும் முடியும்,” என்கிறார்.
சமமின்மை, வேறுபாடு எல்லாமே வெளி உலகில் இல்லை எல்லாமே உள்ளுக்குள் தான் இருக்கிறது என்று கூறும் ரேச்சல், 2015ல் பெண் சாதனையாளர் விருதையும், 2016ல் புதுமைப் பெண் விருதையும் வென்றிருக்கிறார்.
சென்னைக்கு வருவது தான் தன்னுடைய கனவு என்று இருந்தவர், இப்போது இளம் தலைமுறையினருக்கு ஊக்கம் தரும் பேச்சாளராகவும் நம்பிக்கை நட்சத்திரமாகவும் மக்கள் மனம் கவர்ந்த குணசித்திர நடிகையாகவும் திகழ்கிறார்.