‘வீட்டிலேயே சூடான எண்ணெய் மசாஜ்’ - கேசம் மற்றும் சரும ஆரோக்கியத்தில் ஆயுர்வேத ப்ராண்ட்!
இந்திய இல்லங்களில், இரவு படுக்கும் முன் சூடான எண்ணெயை தலைமுடியில் தடவிக்கொண்டு படுக்குமாறு வயதானவர்கள் அறிவுரை கூறுவது வழக்கம். இந்த ஆயுர்வேத பழக்கம், தலைமுடி ஆரோக்கியத்தை பாதுகாத்து, உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், எண்ணெயையை சூடாக்க நேரம் தேவைப்படும், சிக்கலான செயலாக இருப்பதால் இந்த பழக்கம் இளைஞர்களிடையே வேகமாக மறைந்து வருகிறது.
இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண, எம்.எஸ்.ஹர்ஷா, சகோதர நிறுவனம் மெட் மேனரின் தொகை குறிப்பிடாத முதலீட்டின் உதவியுடன் 2020ல் ட்ரு ஹேர் & ஸ்கின் (
) நிறுவனத்தை துவக்கினார். இரண்டு ஆண்டுகள் ஆய்வு மற்றும் சோதனைகளுக்குப் பிறகு, ஐதராபாத்தைச் சேர்ந்த இந்நிறுவனம் தனது முதல் காப்புரிமை பெற்ற எண்ணெய் சூடாக்கும் இயந்திரத்தை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்தது.சந்தையில் இடைவெளி
நுகர்வோர் துறையில் புதுமையாக்கம் இல்லை என ஹர்ஷா கருதுகிறார்.
“இந்தத் துறையில் நிகழும் புதுமையாக்கம் எல்லாம் பொருட்கள் உருவாக்கத்தில் நடைபெறுகிறது. வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், தொழில்நுட்பத்தை பொருட்களில் ஒருங்கிணைக்கும் முயற்சி இல்லை,” என ட்ரு ஹேர் & ஸ்கின் நிறுவனர் ஹர்ஷா எஸ்.எம்.பி ஸ்டோரியிடம் பேசும் போது கூறினார்.
ஐதராபாத்தைச் சேர்ந்த மருந்தக நிறுவனம் மெட் மேனர் ஆர்கானிக்சில் செயல் இயக்குனராக இருந்த போது, 2018ல் நிறுவனம் சரும நலன் சார்ந்த ஆய்வில் ஈடுபட்டிருப்பதை கண்டார். மருந்து கடையில் வாடிக்கையாளர்கள் எளிதாக வாங்கக் கூடிய பொருளை உருவாக்குவதற்காக இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
கேச நலன் என வரும் போது வாடிக்கையாளர்கள் புதிய தயாரிப்புகளை முயன்று பார்க்க தயாராக இருப்பதை இந்த ஆய்வு உணர்த்தியது. மேட் மேனர் ஆர்கானிக்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய ஆயர்வேத மருத்துவர்களுடன் இணைந்து செயல்படத்துவங்கிய போது, எந்த எண்ணெயும் சூடாக பயன்படுத்தப்படும் போது சிறப்பாக இருப்பதை ஹர்ஷா உணர்ந்தார்.
“சருமத்தில் உறிஞ்சும் திறன் சிறப்பாக உள்ளது. தலைமுடி தொடர்பான பிரச்சனைக்குத் தீர்வு காண விரும்பினால், இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலமே இது சாத்தியம். ஏனெனில் இரத்தம் மூலமே ஊட்டச்சத்து கிடைக்கிறது,” என்கிறார் அவர்.
தென்னிந்தியாவில் உள்ள 15,000 பேரிடம் நடத்தப்பட்ட உள் ஆய்வு, சூடான எண்ணெயின் பலனை 70 சதவீதம் பேர் உணர்ந்திருந்தாலும், 12-13 சதவீதம் பேர் மட்டுமே பயன்படுத்துவதை உணர்த்தியது. இந்த இடைவெளியை நிரப்ப ஹர்ஷா தீர்மானித்தார்.
பொருள் உருவாக்கம்
ரூ.300 விலையில் விற்கக் கூடிய பொருளை உருவாக்கக் கூடிய நபர்களை கண்டுபிடிக்க ஹர்ஷாவுக்கு 2 ஆண்டுகள் ஆனது. இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களை அவர் மனதில் கொண்டு செயல்பட்டார்.
“எண்ணெய் அங்கு அதிகம் பயன்படுத்தும் பொருள் இல்லை என்பதால் சீன மற்றும் கொரிய நிறுவனங்கள் இதில் கவனம் செலுத்தவில்லை. இந்த கருத்தாக்கம் அவர்களுக்கு புதிது என்பதால் இந்தியாவில் உள்ளவர்கள் இதை நிராகரிக்கின்றனர்,” என்கிறார் அவர்.
2019ல் முன்னோட்ட வடிவத்தை வெளியில் இருந்து உருவாக்கினார். அதன் பிறகு, ஐதராபாத் உற்பத்தியாளர்கள் சிலர் மூலம் இதை மேலும் வளர்த்தெடுத்தார். பெரும்பாலான பாகங்கள் இந்தியாவில் கிடைக்கின்றன. ஒரே ஒரு பாகம் மட்டும் தென்கொரியாவில் இருந்து வருகிறது.
சவால்கள்
நிறுவனம் தயாரிப்பை அறிமுகம் செய்ய திட்டமிட்டு, விநியோகிஸ்தர்களை நியமித்த போது பெருந்தொற்று தாக்கியது. விளம்பரம் செய்தாலும், சப்ளை சைன் நெருக்கடியால் பொருள் வாடிக்கையாளர்களை சென்றடையவில்லை.
"நாங்கள் பொருட்களை அனுப்பி வைத்தாலும், அவை விநியோகஸ்தரை சென்றடையவில்லை. எல்லாம் குடோனில் கிடந்தன. இவற்றின் மதிப்பு ஒரு கோடி இருக்கும்,” என்கிறார்.
2020 ஆகஸ்ட்டில் ஆன்லைன் வழியை முயன்று பார்த்தார். வீடியோக்களில் ஒருங்கிணைகப்பட பில்டர்காபியை நிறுவனம் அணுகியது. இரண்டு மூன்று நாட்களில் ஆயிரம் யூனிட்கள் விற்பனை ஆனது என்கிறார் ஹர்ஷா.
விநியோக வழி
நிறுவனம் தனது தயாரிப்பு, பாராபீன்ஸ், சல்பேட்ஸ் அல்லது வேறு எந்த தீங்கான ரசாயனம் கொண்டிருக்கவில்லை என்கிறது. கூந்தல் எண்ணெட், ஷாம்பூ, கண்டிஷனர், ஹேர் செரம் உள்ளிட்ட 14 பொருட்களை கேச நலன் பிரிவில் கொண்டுள்ளது.
81 சதவீத வாடிக்கையாளர்கள் தங்கள் தயாரிப்பில் திருப்தி கொள்வதாக ஹர்ஷா கூறுகிறார். இதனால் கேச நலன் பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. பொருட்களை மேம்படுத்தி, வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்வதற்காக நிறுவனம் கேச நலன் சார்ந்த மூன்று கேள்விகளை உருவாக்கியுள்ளது. இதனடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை பரிந்துரைக்கிறது.
’ட்ரு ஹேர் & ஸ்கின்’ தென்னிந்தியாவில் பிரதானமாக செயல்படுகிறது. 15000 விற்பனை நிலையங்களில் கிடைக்கிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இரண்டாம் கட்ட நகரங்களில் 7 கியாஸ்களை அமைத்துள்ளது. கேச நலன் மற்றும் சரும நலன் பொருட்கள் சராசரியாக ரூ.350 விலை கொண்டிருப்பதாக ஹர்ஷா கூறுகிறார்.
இந்நிறுவனம் தனது இணையதளம் மற்றும் அமேசான், ஃபிளிப்கார்ட் மூலம் விற்பனை செய்கிறது. ஆம்னிசேனலில், மாமாஎர்த், இமாமி, பாராசூட் ஆகிய நிறுவனங்களுடன் போட்டியிடுகிறது. இருப்பினும், தொழில்நுட்பப் பயன்பாடு, விலை மற்றும் தரம் தங்களை தனித்து காட்டுவதாக ஹர்ஷா கூறுகிறார்.
எதிர்காலத் திட்டம்
ட்ரு ஹேர் & ஸ்கின் நிறுவனம் அண்மையில், ஏற்கனவே உள்ள 13 எஸ்.கே.யுகளுக்கு பொருத்தமாக, இலவச சூடாக்கும் இயந்திரத்துடன் கூடிய பாடி பட்டர் உள்ளிட்ட சருமநல வரிசையை அறிமுகம் செய்தது.
2022 நிதியாண்டில் நிறுவனம் ஆண்டு அடிப்படையில் வருவாயில் 200 சதவீத வளர்ச்சி கண்டு, 2023ல் 150 சதவீத வளர்ச்சியை எதிர்பார்க்கிறது. விரிவாக்க திட்டங்களுக்கு ஏற்ப, வரும் நிதியாண்டில் 200 சதவீத வளர்ச்சி எதிர்பார்க்கிறது. தென்னிந்தியாவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் மேலும் ஆழமாக ஊடுருவத் திட்டமிட்டுள்ளது.
“தென்னிந்தியாவில் வலுவான விநியோகச் சங்கிலியை உருவாக்க விரும்புகிறோம். வட இந்தியாவில் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், ஆப்லைன் விரிவாக்கத்திற்கு இன்னும் காலம் தேவை,” என்கிறார் ஹர்ஷா.
ஆங்கிலத்தில்: அனுபிரியா பாண்டே | தமிழில்: சைபர் சிம்மன்
பாட்டி வைத்திய முறையில் சருமம். கூந்தல் பராமரிப்பு தயாரிப்பை தொடங்கிய அம்மா-மகள்!
Edited by Induja Raghunathan