பாட்டி வைத்திய முறையில் சருமம். கூந்தல் பராமரிப்பு தயாரிப்பை தொடங்கிய அம்மா-மகள்!
இவர்களின் ப்ராண்ட், முற்றிலும் இயற்கையான, நச்சுத்தன்மை இல்லாத, உயர் தரமான, பிரீமியம் தயாரிப்புகளை வழங்குகிறது.
நாம் அனைவரும் ஏதோ ஒரு தருணத்தில் நம் பாட்டியின் வீட்டு வைத்தியத்தின் மகிமையை உணர்ந்திருப்போம். அதன் மூலம் நிச்சயம் பலனும் அடைந்திருப்போம். ஆனால் இந்த அம்மா-மகள் ஜோடி ஒருபடி மேலே சென்று 85 வயது பாட்டியின் வீட்டு வைத்தியத்தைக் கொண்டு ’ஹைபிஸ்கஸ் மங்கி’ (Hibiscus Monkey) என்கிற பிராண்டையே உருவாக்கியுள்ளனர்.
மோனாவும் ரோஷ்னி மேத்தாவும் ’ஹைபிஸ்கஸ் மங்கி’ இன்றைய நவீன தலைமுறையினருக்கான சுய பராமரிப்பு பிராண்ட் என்கின்றனர். இந்த பிராண்டின் தயாரிப்புகள் ரோஷ்னியின் பாட்டியிடம் இருந்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கப்பட்டதாகும். இதில் இந்திய கலாச்சாரம் வேரூன்றி உள்ளது. ரசாயனங்களற்ற, முற்றிலும் இயற்கையாக மூலப்பொருட்களால் தயாரிக்கபப்டுகிறது.
ரோஷ்னி மத்திய அரசுப் பணியில் இருந்தபோது புதுடெல்லியில் தனது பாட்டியுடன் வசித்து வந்தார்.
“எனக்கு முடி உதிர்வு ஏற்பட்டபோது வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட எண்ணெயை உபயோகிக்குமாறு என் பாட்டி அறிவுறுத்தினார். அதன் விளைவுகளை என்னால் கண்கூடாகப் பார்க்கமுடிந்தது. என் தலைமுடி மீண்டும் பொலிவுடன் வளரத் தொடங்கியது. அவர் தயாரித்த எண்ணெயில் பிசுபிசுப்பில்லை. எனவே எனக்கு மிகவும் பிடித்துப்போனது,” என்று நினைவுகூர்ந்தார்.
பாட்டியின் வீட்டுத் தயாரிப்பை சந்தையில் அறிமுகப்படுத்துவது குறித்து ரோஷ்னி அவருடன் விளையாட்டாகப் பேசினார். அப்போதுதான் முற்றிலும் இயற்கையான விதத்தில் பராமரிப்புப் பொருட்களை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியம் இருப்பதை ரோஷ்னி உணர்ந்தார்.
25 வயதான ரோஷ்னி யுஏஈ, பங்களாதேஷ், ஃபிலிப்பைன்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளில் வளர்ந்தவர். கார்னெல் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் முடித்ததும் நியூயார்க்கில் மேலாண்மை ஆலோசகராக பணியாற்றினார். பிறகு அரசுப் பணியில் சேர்வதற்காக இந்தியா திரும்பினார். இவர் தற்போது அமெரிக்காவின் ஹார்வர்ட் கென்னடி பள்ளியில் எம்பிபி-எம்பிஏ படித்துவருகிறார்.
ரோஷ்னி ஹைபிஸ்கஸ் மங்கி தொடங்க தனது அம்மா மோனா மேத்தாவையும் இணைத்துக்கொண்டார். மோனா முன்னாள் ஆலோசகர் மற்றும் கார்ப்பரேட் வங்கியாளர். இந்தியாவிற்கு மாற்றலான பிறகு இவர் ஃப்ரீலான்சிங் முறையில் ஆலோசகராக இருந்து வருகிறார். அத்துடன் மும்பையை மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும் ’ப்ராஜெக்ட் மும்பை’ குழுவிலும் இடம்பெற்றுள்ளார்.
”இந்திய சமூகத்தில் பாரம்பரியமாகவே பெண்கள் தன்னைக் காட்டிலும் மற்றவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பழக்கப்பட்டவர்கள். அவ்வாறின்றி பெண்கள் சுய பராமரிப்பில் கவனம் செலுத்தவேண்டும் என்றும் இதை நினைத்து வெட்கப்படக்கூடாது என்றும் அறிவுறுத்த விரும்புகிறோம்,” என்கிறார் ரோஷ்னி.
குடும்ப ரெசிபிக்களின் தொகுப்பு
ஹார்வர்ட் இ-லேப்ஸ் மற்றும் மும்பை அடல் இன்குபேஷன் மையத்தில் இன்குபேட் செய்யப்பட்ட ஹைபிஸ்கஸ் மங்கி முழுவதும் இயற்கையான, நச்சுத்தன்மை இல்லாத, உயர் தரமான, பிரீமியம் தயாரிப்புகளை வழங்குகிறது. இதில் ரசாயனங்கள், பாரபென், மினரல் ஆயில், செயற்கை நிறம், நறுமணம் போன்றவை பயன்படுத்தப்படுவதில்லை. தற்போது நிறுவனர்கள் கலவையையும் மூலப்பொருட்களையும் வழங்குகின்றனர். தயாரிப்பு அவுட்சோர்ஸ் செய்யப்படுகிறது. குடும்பத்திற்கு சொந்தமான யூனிட்டில் பேக் செய்யப்படுகிறது.
”எங்களது குடும்ப ரெசிபிக்கள் எங்களது பாட்டியிடம் இருந்து வந்தது. எங்களது சரும பராமரிப்பு மற்றும் கூந்தல் பராமரிப்பு பொருட்கள் பாரம்பரிய முறையில் இந்தியாவின் இளம் பெண்களுக்காக உருவாக்கப்பட்டது,” என்றார்.
இந்தியா முழுவதும் உள்ள 22-25 வயதுடைய பெண்களை இந்த பிராண்ட் இலக்காகக் கொண்டுள்ளது. டி2சி மாதிரியில் செயல்படுகிறது. இதன் தயாரிப்புகள் இன்ஸ்டா-ஷாப் மற்றும் ஃபேஸ்புக்கில் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
ஹைபிஸ்கஸ் ஹேர் ஆயில், Cuddles–முழங்கை மற்றும் முழங்கால் தைலம், Comforter – மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் தசைப்பிடிப்புகளுக்கு பயன்படுத்துவது, Velvet – மாய்ஸ்சரைசர் போன்றவை இந்த பிராண்டின்கீழ் சிறப்பாக விற்பனையாகும் தயாரிப்புகளாகும். ஹைபிஸ்கஸ் மங்கி வெறும் நான்கே மாதங்களில் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விநியோகிப்பதன் மூலம் இந்தியா முழுவதும் 90 நகரங்களில் விற்பனை செய்தது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் கூந்தல் எண்ணெய் கண்ணாடி பாட்டில்களில் பேக் செய்யப்படுகிறது.
“நவீன தலைமுறை பிராண்ட் என்பதால் நம்முடைய செயல்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளை அறிந்திருக்கவேண்டியது அவசியமாகிறது. பொருட்களைக் கொண்டு செல்ல லாஜிஸ்டிக்ஸ் ஏற்பாடு செய்யும் கிட்டத்தட்ட பன்னிரண்டு நிறுவனங்களை அணுகினோம். எங்கள் தயாரிப்பு கண்ணாடி பாட்டில்களில் இருப்பதால் அவற்றைக் கொண்டு சேர்க்க அந்நிறுவனங்கள் மறுத்தது. இந்த பேக்கிங் முறையால் அன்றாடம் பல்வேறு சவால்களை சந்திக்க நேர்ந்தாலும் சமரசம் செய்துகொள்ளாமல் இத்தகைய சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதில் உறுதியாக இருக்கிறோம்.
"எங்கள் பேக்கேஜிங் அனைத்தும் மறுபயன்பாட்டிற்கு உட்படுத்த உகந்ததாக இருப்பதை உறுதிசெய்துள்ளோம். ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்துவிடுகிறோம்,” என்றார் ரோஷ்னி.
வாடிக்கையாளர்கள்
ஹைபிஸ்கஸ் மங்கி தயாரிப்புகளை தொடர்ந்து வாங்கும் வாடிக்கையாளர்கள் #HMTribe என்றழைக்கப்படுகின்றனர். இந்த வாடிக்கையாளர் சமூகம் அதிகரித்து வருவதே தங்களது பிராண்ட் விரைவாக வளர்ச்சியவைதற்கு காரணம் என்கின்றனர் நிறுவனர்கள்.
”எங்கள் வாடிக்கையாளர்கள் சமூக வலைதளங்களில் தயாரிப்புகளைப் பற்றி பதிவிடுகின்றனர். மேலும் பலர் தங்களது சகோதரி, அம்மா, நண்பர்கள் போன்றோருக்காக ஹைபிஸ்கஸ் மங்கி தயாரிப்புகளை வாங்கி #HMTribe குழுவில் இணைத்துவிடுகின்றனார். #HMTribe எங்களது பிராண்டின் முதுகெலும்பாக உருவாகியுள்ளது. இவர்கள் ஹைபிஸ்கஸ் மங்கி பிராண்ட் வளர்ச்சியடைய உதவுகின்றனர்,” என்றார்.
போட்டிகள் நிறைந்த இந்திய சந்தையில் பெண் தொழில்முனைவோராக செயல்படுவதில் பிரச்சனைகளை சந்திக்கிறார்களா?
”ஹைபிஸ்கஸ் மங்கி பெண்களால் பெண்களுக்காக செயல்படும் பிராண்ட். பெண்களாக தொழில்முனைவில் ஈடுபடுவதை எங்களது பலமாகவே கருதுகிறோம். பெண்களாக இருப்பதால் எங்கள் வாடிக்கையாளர்களுடன் சிறப்பாக தொடர்பில் இருந்து அவர்களது முக்கிய பிரச்சனைகளை புரிந்துகொள்ளமுடிகிறது.
"பெண்கள் தங்கள் கூந்தல் பார்க்க அழகாக இருப்பதுடன் தொடும்போது மிருதுவாகவும் பிளவின்றியும் இருக்கவேண்டும் என்று விரும்புவார்கள். எங்கள் தயாரிப்பை நான் பயன்படுத்திவிட்டு என் அனுபவத்தை வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்துகொள்வேன்,” என்றார் ரோஷ்னி.
”என் பாட்டிக்கு 85 வயதாகிறது. அவர் தனது உடலை முறையாகப் பராமரிப்பதைப் பார்த்திருக்கிறேன். இந்த வயதிலும் அவர் தனக்கான சரும பராமரிப்பு பொருட்களைத் தானே தயாரிக்கிறார். தனது உடல் மீதும் சருமத்தை பராமரிப்பதிலும் அவர் காட்டும் அக்கறையைக் கண்டு நானும் என் அம்மாவும் எப்போதும் வியந்து போவோம்,” என்றார்.
பல்வேறு சுய பராமரிப்புப் பொருட்களை அறிமுகப்படுத்தவும் கேரளாவில் சொந்தமாக தயாரிப்பு யூனிட் அமைக்கவும் நிறுவனர்கள் திட்டமிட்டுள்ளனர். ஏனெனில் இவர்கள் பயன்படுத்தும் மூலப்பொருட்களில் பெரும்பாலானவை கேரளாவைச் சேர்ந்தது.
“உள்ளூர் விவசாயிகளிடம் இருந்து மூலப்பொருட்களை வாங்கி கிராமம் மற்றும் அதன் சமூக பொருளாதார நலனையும் எங்களது சுற்றுச்சூழலில் இணைத்துக்கொள்ள விரும்புகிறோம்,” என்கின்றனர்.
ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா