30 நிமிடங்களில் உங்களது புத்தகத்தை வெளியிட உதவும் சென்னை நிறுவனம்!
காபி, பாஸ்தா, சாம்பார், பனீர் பட்டர் மசாலா என பல்வேறு பொருட்கள் இன்ஸ்டண்டாக கிடைக்கும் இன்றைய உலகில் புத்தகம் ஏன் இன்ஸ்டண்டாக கிடைக்கக்கூடாது?
நிச்சயம் கிடைக்கும் என்கிறது சென்னையைச் சேர்ந்த நோஷன் ப்ரெஸ் (Notion Press) நிறுவனம். இதன் தளமான Xpress எழுத்தாளர்கள் தங்களது புத்தகங்களை அச்சு வடிவிலோ அல்லது இ-புத்தகமாகவோ முப்பதே விநாடிகளில் வெளியிட உதவுகிறது. இந்தியாவில் Xpress போன்ற தளம் அறிமுகமாவது இதுவே முதல் முறை என்கிறார் நோஷன் பிரெஸ் நிறுவனத்தின் சிஇஓ நவீன் வல்சகுமார்
சுயமாக வெளியிட உதவும் இப்படிப்பட்ட தளத்தின் அவசியம் என்ன? ஒவ்வொரு மாதமும் அதிகளவிலான (ஒரு மாதத்திற்கு சுமார் 3,000 முதல் 4,000 வரை) எழுத்தாளர்கள் நோஷன் பிரெஸ் நிறுவனத்தை இதுபோல் பிரசுரிக்கக் கேட்டு அணுகினர். இதுவே இக்குழுவை இதுகுறித்து தீவிரமாக சிந்திக்கத் தூண்டியது என்கிறார் நவீன்.
”தங்களது புத்தகங்களை வெளியிடவேண்டும் என்கிற தீவிர ஆர்வம் கொண்ட எழுத்தாளர்களுக்கானது Xpress. இந்தத் தளம் அவர்களது கதைகளையும் கருத்துகளையும் புத்தக வடிவில் மாற்றி மக்களிடம் கொண்டு சேர்க்கிறது,” என்றார்.
Xpress தற்சமயம் ஆங்கிலம் மற்றும் தமிழ் தலைப்புகளில் வெளியிட உதவுகிறது. வரும் வாரங்களில் ஹிந்தி, பெங்காலி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி ஆகிய மொழிகள் இணைக்கப்பட உள்ளது. 2019-ம் ஆண்டு கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளும் இணைக்கப்படும் என்று அக்டோபர் மாத இறுதியில் Xpress அறிமுகப்படுத்திய போது நவீன் குறிப்பிட்டார்.
நோஷன் பிரெஸ் நவீன் வல்சகுமார், பார்கவா அடெபள்ளி, ஜனா பிள்ளை ஆகிய இணை நிறுவனர்களால் 2012-ம் ஆண்டு நிறுவப்பட்டது. சுயமாய வெளியிடும் சுயப்பிரசுர தளமாக துவங்கப்பட்டு பின்னர் விரிவடைந்து சர்வதேச வெளியீட்டாளர்கள், விநியோகம் மற்றும் மெயின்ஸ்ட்ரீம் வெளியீடு போன்ற சேவைகளையும் வழங்கத் துவங்கியது. வெளியீடு செயல்முறையில் உள்ள ஒட்டுமொத்த மதிப்பு சங்கிலியையும் இணைத்துக்கொண்டுள்ளது.
இந்நிறுவனம் தற்சமயம் 100 நாடுகளில் 30,000 அவுட்லெட்கள் முழுவதும் அதன் புத்தகங்களை விநியோகம் செய்ய சர்வதேச புத்தகக்கடைகளுடன் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் இணைந்துள்ளது.
ஒரு புத்தகத்தை வெளியிடும் செயல்முறை அதிக நேரம் எடுக்கக்கூடியதாகும். இது உள்ளடக்கத்தை எழுதுவது, எழுத்துப்பிரதியை எடிட் செய்தல், பக்கங்களை வடிவமைத்தல், ஆர்ட்வொர்க் எடிட் செய்தல், பேஜினேஷன் மென்பொருள் பயன்படுத்தி பக்கங்களை லே அவுட் செய்தல், புத்தகத்தின் அட்டையை வடிவமைத்தல் என பல்வேறு செயல்களை உள்ளடக்கியதாகும். புத்தகம் அச்சிட தயாரானதும் அது அச்சிடுவதற்கோ அல்லது இ-புத்தகமாக PDF வடிவில் வெளியிடப்படுவதற்காக மின் வடிவில் மாற்றுவதற்கோ அல்லது Kindle போன்ற தளத்திற்கோ அனுப்பப்படும்.
வழக்கமாக ஒரு புத்தகம் வெளியிடுவதற்கான அனைத்து செயல்முறைகளும் நிறைவடைய மாதக்கணக்கில் ஆகும். ஆசிரியர் இறுதி முடிவை எடுக்க எடிட்டிங், ஆர்ட்வொர்க், வடிவமைப்பு, லே அவுட் ஆகியவற்றில் துறை சாரந்த தொழில்முறை நிபுணர்கள் அடங்கிய குழுவுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கவேண்டியிருக்கும்.
Xpress ஏற்கெனவே இருக்கும் டெம்ப்ளேட் வாயிலாக எழுத்தாளர் தனது சொந்த புத்தகத்தை தாமாகவே தேர்வு செய்து வெளியிட உதவுகிறது. எடிட் செய்யப்படும் வசதி தளத்தில் இணைக்கப்படவில்லை. Xpress தளம் வாயிலாக ரன் செய்யப்படுவதற்கு முன்பே புத்தகம் எடிட் செய்யப்படவேண்டும்.
நோஷன் பிரஸ் சிடிஓ பார்கவா அடெபள்ளி விவரிக்கையில்,
“Xpress வெளியீட்டுத் தளம் சிறப்பான பயனர் அனுபவத்தை வழங்குகிறது. இதில் புத்தக ஆசிரியர் தானே சொந்தமாக புத்தகத்தின் அட்டையையும் உள்ளே இருக்கும் பக்கங்களையும் ஏற்கெனவே அமைக்கப்பட்ட டெம்ப்ளேட்களைக் கொண்டு வடிவமைத்து சொந்தமாக புத்தகத்தை உருவாக்கலாம்,” என்றார்.
தளத்தின் செயல்பாடுகள்
எடிட் செய்யப்பட்ட உள்ளடக்கம் பாகங்களாக வகைப்படுத்தப்பட்டு படங்கள், அட்டவணைகள் போன்றவை தயாரானதும் அதை Xpress தளத்தில் லோட் செய்யலாம். இந்த மென்பொருள் ஒவ்வொரு பக்கமாக ரன் செய்து லே அவுட் வடிவமைப்பை (புத்தகத்தின் அளவு, எழுத்தின் வகை, பக்கத்தின் வடிவமைப்பு, அச்சு வடிவம் எனில் பேப்பரின் தரம் உள்ளிட்டவை) தேர்வு செய்ய உதவும்.
கடைசியாக அட்டைப் பக்கம் மற்றும் உட்புற அட்டை போன்றவை வடிவமைக்கப்படும். பின்னர் வெளியீட்டிற்குத் தேவையான அம்சங்களைப் பூர்த்தி செய்யத் தீவிர சோதனை மேற்கொள்ளப்படும். இந்த சோதனை அடிப்படையில் பிழை குறித்த அறிக்கை உருவாக்கப்படும். பிழைகள் கண்டறியப்பட்டதும் 30 நிமிடங்களுக்குள்ளாகவே புத்தகம் தயாராகிவிடும்.
ஒரு பிரச்சனையை எதிர்கொண்டதும் நோஷன் பிரெஸ் குழு உதவ முன்வரும். அச்சிடும் செயல்முறை அல்லது கையெழுத்துப் பிரதியை இ-புத்தக வடிவத்தில் மாற்றும் செயல்முறை அதிக நேரம் எடுக்காது.
“நீங்கள் Xpress தளத்தை தேர்வு செய்தால் சில மணி நேரங்களில் உங்களது புத்தகத்தின் சில பிரதிகள் உங்களிடம் இருக்கும்,” என்றார் நவீன்.
”இந்தத் தளத்தில் சுமார் இரண்டரை ஆண்டுகள் பணியாற்றினோம்,” என்றார் நோஷன் பிரெஸ் மேம்பாட்டுத் துறைத் தலைவர் ஷிராஜ். அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு இந்தத் தளம் 700 நூல் ஆசிரியர்களுடன் சோதனை செய்யப்பட்டது. அறிமுகப்படுத்திய ஒரே நாளில் இந்த எண்ணிக்கை 1,000-க்கும் அதிகமாக அதிகரித்தது.
ப்ரொடக்ஷன் வேகம் அதிவிரைவாக இருக்கும். சோதனை நடவடிக்கையை அடிப்படையாகக் கொண்டு பெரும்பாலான பிரச்சனைகள் தீர்த்துவைக்கப்பட்டது. செயல்விளக்கத்தைப் பார்த்த பிறகு உரை அதிகம் இருக்கும் உள்ளடக்கத்திற்கு Xpress பொருத்தமானது என தெரிந்துகொண்டேன். ஆனால் உங்கள் புத்தகத்தில் புகைப்படங்களும் படங்களும் இருக்கும் பட்சத்தில் நோஷன் ப்ரெஸ் குழுவிடம் இருந்து தொழில்நுட்ப உதவி தேவைப்படும். அதே நேரம் குறிப்பிட்ட இடத்தில் வைப்பது, அளவு, எடிட்டிங் போன்றவற்றிற்கு நிபுணர்கள் அவசியம்.
நீங்கள் புத்தகத்தை முடித்த பிறகு அதற்கான விலையை நிர்ணயிக்கலாம். புத்தகம் தயாரிக்கப்பட்ட பிறகு ஒரு புத்தகத்திற்கான தயாரிப்பு செலவு சுட்டிக்காட்டப்படும். ஆனால் Xpress தளத்தில் தயாரிக்கப்பட்ட ஒரு புத்தகத்தின் குறைந்தபட்ச விலை 180 ரூபாய் என நோஷன் பிரெஸ் நிர்ணயித்துள்ளது.
நோஷன் ப்ரெஸ் வாயிலாக நீங்கள் ஒரு புத்தகத்தை விற்பனை செய்யும்போது புத்தகத்தை உருவாக்கவோ அல்லது விநியோகிக்கவோ உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. அத்துடன் விற்பனையில் உங்களுக்கு 70 சதவீதம் ராயல்டியும் கிடைக்கும். பணம் உங்களது வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும். ஆனால் உங்களது புத்தகத்தை அமேசான், ஃப்ளிப்கார்ட் அல்லது இன்ஃபிபீம் போன்ற தளங்கள் வாயிலாக விநியோகம் செய்ய தீர்மானித்தால் நீங்கள் 9,999 ரூபாய் கட்டவேண்டியிருக்கும். 100 நாடுகளுக்கு சர்வதேச அளவில் விநியோகம் செய்ய 14,999 ரூபாய் கட்டவேண்டும். நோஷன் பிரெஸ் உலகம் முழுவதும் 30,000 ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் புத்தகக்கடைகளுடன் இணைந்துள்ளது.
தனித்துவம்
“பெரும்பாலான இடங்களில் அச்சிடத் தயாராக இருக்கும் ஃபைல்கள் மட்டுமே அச்சிடப்படும். ஆனால் Xpress உங்களது புத்தகத்தை ஆரம்பகட்டத்தில் இருந்து உருவாக்க உதவுகிறது,” என்றார் நவீன்.
நோஷன் பிரெஸ் Xpress தளத்தில் அச்சு மற்றும் இ-புத்தகங்கள் இரண்டுமே வெளியிடமுடியும் என்பதே அமேசானின் கிண்டில் டைரக்ட் பப்ளிஷிங் நிறுவனத்திடம் இருந்து வேறுபடுத்திக் காட்டும் அம்சமாகும். KDP-யில் புத்தகங்கள் எலக்ட்ரானிக் வடிவில் மட்டுமே தயாரிக்கப்பட்டு அமேசானில் விற்பனை செய்யப்படும். Xpress தளம் வாயிலாக தயாரிக்கப்படும் புத்தங்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விநியோக சானல் வாயிலாக உலகளவில் சென்றடையமுடியும்.
நோஷன் பிரெஸ் உயர் சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்களிடமிருந்து (HNIs) ஒரு மில்லியன் டாலர் நிதி உயர்த்தியுள்ளது. தற்போது லாபகரமாக செயல்படுவதாக நவீன் குறிப்பிடுகிறார். சந்தையில் சிறப்பாகவே செயல்பட்டு வருவதால் இந்நிறுவனத்திற்கு தற்சமயம் நிதி உயர்த்தும் திட்டம் இல்லை. தங்களது புத்தகங்களை தயாரித்து வெளியிட விரும்பும் எழுத்தாளர்கள் மற்றும் நாவலாசிரியர்கள் அதிகரித்து வருவதால் பெரியளவில் சேவையளிப்பதில் சவால்களை சந்திக்கலாம் என இந்நிறுவனம் கருதுகிறது.
நோஷன் பிரெஸ் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு தயாராகி வருகிறது. அடுத்த சில ஆண்டுகளில் அதிவேகமாக வளார்ச்சியடைய திட்டமிட்டுள்ளது.
ஆங்கில கட்டுரையாளர் : வெங்கடேஷ் கிருஷ்ணமூர்த்தி | தமிழில் : ஸ்ரீவித்யா