புதிய நிறுவனங்களின் முதலீடு தொடர்பான சட்ட நடைமுறைகளை எளிமைப்படுத்தும் நிறுவனம்
புதிதாக நிறுவனம் துவங்கி, தன் நிறுவனத்திற்காக பணம் திரட்டும் ஒவ்வொருவருமே பல சட்டரீதியான கட்டங்களை தாண்டியே பணம் பெற்றிருப்பார்கள். அந்த ஒவ்வொரு கட்டத்தையும் தாண்டுவதற்குள் ஏற்படும் மனநெருக்கடி வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது. முதல் முதலில் பணம் திரட்டும் பலருக்கு இந்த சட்டரீதியான ஆவணங்கள் பற்றியும் அது சார்ந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் சார்ந்த போதிய அனுபவம் இருக்காது.
நாங்கள் புது நிறுவனமாக இருந்தபோது நிதி நடைமுறைகள் மீது ஆர்வம் செலுத்தியதைவிட நிறுவனத்தின் வளர்ச்சியில் தான் அதிக அக்கறை கொண்டிருந்தோம்.
டெர்ம்ஷீட்.ஐஓ (Termsheet.io) என்ற நிறுவனம், புது நிறுவனங்களுக்கு உதவும் விதமாக முதலீட்டாளர்கள் சார்ந்த சட்ட நடைமுறைகளை துரிதமாக முடிக்க உதவுகிறது. இப்போதைக்கு விதை முதலீடுகள் பெறுவதில் உள்ள இடர்பாடுகளை களையும் விதமாக, அந்த முதலீடுகளை பெறுவதில் என்ன மாதிரியான சிக்கல்கள் வரக்கூடும் என்பதை கண்டறிந்து அதை சுலபமாக்கும் வழிகளில் இந்த குழு ஈடுபட்டுள்ளது.
இதில் மூன்று கோணங்கள் உள்ளது, முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனர்களின் தகுதிச்சுற்று, நிதி சுற்றுகளை திட்டமிடுவது அல்லது ஒருங்கிணைப்பது மற்றும் இறுதியாக ஒப்பந்தத்தை இறுதி செய்வது (உறுதியளித்தலை இறுதி செய்வது, பண நிர்வாகம், காகிதப்பணியை தயாரித்தல்)
டெர்ம்ஷீட்டுக்கு பின்னுள்ள கதை
விவேக்துரை 2014ம் ஆண்டு ஹம்புல்பேப்பர் என்ற நிறுவனத்தை துவங்கினார்; ஒப்பந்த தானியக்கம் சார்ந்த புதுநிறுவனம் அது. நிறுவனர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நிதி திரட்டும் அனுபவத்தை மேம்படுத்துவதே இந்த நிறுவனத்தின் நோக்கம். இதற்காக முதலீட்டளர்கள், நிறுவனர்கள், வழக்கறிஞர்கள் என எல்லோரும் பயன்படுத்தக்கூடிய வகையிலான சட்ட ஆவணத்தை உருவாக்கினார்.
இந்த ஆவணத்தை யார் வேண்டுமானாலும் பதிவிறக்கி அப்படியே பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆரம்பகால நிதி பெறுதலுக்கு பெரிய அளவிலான பேச்சுவார்த்தைகளோ, பல்வேறு வழக்கறிஞர்களின் தலையீடோ தேவையில்லாத நிலை இருப்பதால் எல்லோரும் பயன்படுத்திக்கொள்ளும் வகையிலான ஒரு ஆவணத்தை உருவாக்கினால் என்னவென்று ஒரு சிந்தனை தோன்றியதே இதற்கு காரணம்.
விதிமுறைகள் காரணமாகவே பெரும்பாலான ஒப்பந்தங்கள் பாதியில் நின்றுவிடுகின்றன. அதுமட்டுமல்லாமல் சில நீண்ட விதிமுறைகள் பல அனாவசிய கேள்விகளை எழச்செய்வதோடல்லாமல், இரண்டு பேருக்குமிடையிலான அவநம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகவும் மாறிவிடுகின்றன.
முதலீடு ஒப்பந்தம் முன்னேறுவதில் நீண்டகாலம் எடுத்துக்கொண்டால், அதுவே முதலீட்டாளர்களை எதிர்மறையாக சிந்திக்க வைத்து முதலீட்டு திட்டத்தையே மாற்றிவிடும் நிலையை கூட ஏற்படுத்தக்கூடும். ஆரம்பத்தில் இவர்களின் இந்த முயற்சி நல்ல பலனளிக்கவே, 2014 நவம்பர் டிசம்பர் மாத இடைவேளையில் தான் ஹம்புல்பேப்பர் நிறுவனம் டெர்ம்ஷீட்.ஐஓ என்ற புது நிறுவனத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. “பூஜ்ஜிய உராய்வு விதை ஓட்டம்” என்ற குறிச்சொல்லோடு டெர்ம்ஷீட்.ஐஓ நிறுவனத்தை 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தினார்கள்.
எல்லா ஆவணங்களையும் தொகுத்து தரப்படுத்தப்பட்ட ஆவணமாக்கி அதன் சுற்றை நெறிபடுத்தியிருக்கிறார்கள். "ஆரம்பத்தில் சிறு முதலீட்டு சார்ந்த நிறுவனங்களுக்கு உதவும் வகையிலேயே செயலாற்றினோம். இப்போது தான் பெருமுதலீடுகளையும் எளிமைப்படுத்தும் வகையிலான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளோம்” என்கிறார் விவேக்.
"ஆனால் அது ஒன்றும் சுலபமில்லை” என்கிறார். "எங்கள் உள் அளவீடுகளின் ஒன்று தான் நேரமெடுத்துக்கொள்கிறது. ஒரு வெளிநாட்டு முதலீட்டாளர் கலந்துகொள்ளும்போது ஒப்புதலுக்கான சுற்று அதிகரித்து இன்னும் தாமதப்படுகிறது. வங்கிகள் எங்களோடு சேர்ந்து வேலை பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. குறிப்பாக வெளிநாட்டு வங்கிகளிடமிருந்து ஒத்துழைப்பை பெறுவது கடினமாக இருக்கிறது” என்கிறார்.
டெர்ம்ஷீட்டின் ஆறு பேர் கொண்ட குழு சென்னை ஐஐடிஎம் ஆராய்ச்சி பூங்காவுக்குள் பணியாற்றுகிறார்கள். இவர்களின் வேலை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒப்பந்ததை உருவாக்குவது. தற்போது நிறுவனத்தின் விரிவாக்கப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
”நாங்கள் இப்போது ஆட்களை தேர்வு செய்து கொண்டிருக்கிறோம். ஆனால், மிக தேர்ந்தெடுக்கப்பட்ட வடிவில் இதை செய்கிறோம். ஏனென்றால் இதில் கொஞ்சம் துணிந்து முடிவெடுக்க வேண்டிய நிலை இருக்கிறது. புதுமுயற்சி என்பதோடு நின்றுவிடாமல் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலையில் எங்கள் நிறுவனம் இருப்பதே இதற்கு காரணம்” என்கிறார் விவேக்.
"ஆரம்பத்தில் எங்கள் வேலை என்பது ஒப்பந்தங்களை முடுக்கிவிடுவது தான். ஆனால் ஆரம்பகாலங்களில் நாங்கள் யாருக்கு வேலை செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டி இருந்தது. ஆரம்பத்தில் பரிசோதிக்கவும் கற்றுக்கொள்ளவுமே நீண்ட நேரம் எடுத்துக்கொண்டோம், அதனை பயன்படுத்தியே கணிசமான வேலைகளை செய்துமுடித்தோம்” என்கிறார்.
ஏற்கனவே க்யூபிக் (Cupick), ஏயில்(Aisle) மற்றும் லிவ்ப்ரெய்ல்(LiveBraille) போன்ற நிறுவனங்கள் வெற்றிகரமாக நிதி திரட்ட உதவியிருக்கிறார்கள். ஏதெர் எனர்ஜி(Ather Energy ) என்ற நிறுவனத்தின் நிதிதிரட்டும் கட்டத்தின் இறுதி பகுதியில் பணியாற்றியிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர்களின் வணிக முறை மிக எளிமையானது. பெருமுதலீடுகளை பொறுத்தவரை மொத்த பணத்தில் ஒருசதவீதத்தையும், சிறு முதலீடுகளுக்கு இரண்டு சதவீதமும் கட்டணமாக வசூலிக்கிறார்கள். இந்தியாவில் லெட்ஸ்வென்சர்(Letsventure) என்ற நிறுவனம் தான் இவர்களின் மிகப்பெரிய போட்டி. ஏஞ்சல்.கோ என்ற நிறுவனம் உலகம் முழுவதிலும் புது நிறுவனங்களின் நிதி திரட்டலுக்கு உதவுகிறது.
டெர்ம்ஷீட், நிறுவனர்களுக்கான கூட்டுறவுத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் தன்னார்வ அடிப்படையில் ஒரு நிறுவனர் இன்னொரு நிறுவனருக்கு உதவலாம். மனிபால்(Moneyball) என்ற நிகழ்வை நடத்துகிறார்கள். இதில் புது நிறுவனர்களுக்கு சில முக்கியமான நிறுவனத்தின் நிறுவனர்களை (அல்லது துணைத்தலைவர்களை) அறிமுகப்படுத்திவைக்கிறார்கள். இருவரும் விவாதித்துக்கொள்ள இந்த நிகழ்வு ஒரு வாய்ப்பாக அமைவது குறிப்பிடத்தக்கது.
இணையதள முகவரி - TermSheet