600 பில்லியன் டாலர் மதிப்புடைய மளிகைச் சந்தையை மின் வணிகம் மூலம் வர்த்தக செய்யும் ஸ்டார்ட் அப்கள்!
தற்போது 600 பில்லியன் டாலர் மதிப்புடைய இந்திய மளிகைச் சந்தை உலகின் ஆறாவது மிகப்பெரிய சந்தையாகும். ஆனால் ஐந்து முதல் எட்டு சதவீத மளிகை ஸ்டோர்கள் மட்டுமே ஒழுங்குபடுத்தப்பட்ட பிரிவில் உள்ளது. இந்த சந்தை வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளத் தேவையான தொழில்நுட்பமும் லாஜிஸ்டிக்ஸும் சிறு சில்லறை வர்த்தகர்களிடையே இல்லை.
இந்தியாவில் சுமார் 4.8 கோடி எஸ்எம்ஈ-க்கள் உள்ளனர். இவர்கள் மொத்த அளவிலேயே கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. இதனால் பி2சி சந்தையைக் காட்டிலும் பி2பி மின்வணிக சந்தை வாய்ப்பு மிகப்பெரியதாகிறது. மொத்தவியாபாரிகளும் சில்லறை வியாபாரிகளும் ஆன்லைன் கொள்முதலுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்து வருகின்றனர்.
HoReCa (ஹோட்டல்கள், ரெஸ்டாரண்டுகள், கஃபேக்கள்) வணிகங்கள், சில்லறை வர்த்தகர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சிறப்பாக லாபம் பெறவும், விரைவாக ஆர்டர்களை பூர்த்திசெய்யவும், குறைவான கையிருப்புகளை வைத்திருக்கவும் சில ஸ்டார்ட் அப்கள் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இது குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
1. JumboGrocery : 2015-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட டெல்லியைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப் இந்திய அரசாங்கத்தால் ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஜம்போகிராசரி ஹோட்டல்கள், ரெஸ்டாரண்டுகள், கேட்டரிங் ஹவுஸ், உணவு மற்றும் பானங்கள் பிரிவில் செயல்படும் மற்ற பெருநிறுவனங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது. உற்பத்தியாளர்களுடன் வலுவான விநியோக சங்கிலி இணைப்பை ஏற்படுத்தி விரிவான தயாரிப்பு தொகுப்புகளையும் தளத்துடன் இணைக்கப்பட்ட லாஜிஸ்டிக்ஸ் அமைப்பையும் வழங்குகிறது. சுயநிதியில் இயங்கும் இந்த ஸ்டார்ட் அப்பானது பொருட்களை வாங்குவோர் பல்வேறு வகைகளில் மேற்கொள்ளும் தொடர்பு குறித்த தகவல்களை (touchpoints) வழங்குவதுடன் கொள்முதல், விலை மற்றும் பில்லிங்கில் வெளிப்படைத்தன்மை, நிலையான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பொருட்களை டெலிவர் செய்யும் வசதி, மொத்த கொள்முதல்களுக்கான தள்ளுபடி போன்றவற்றிற்காக தானியங்கி தீர்வுகளை வழங்குகிறது.
2. Smerkato: ஓராண்டாக செயல்பட்டு வரும் பெங்களூருவைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப் பொருட்கள் விரயமாதல், பயன்பாடு, முதலீட்டின் மீதான லாபம் போன்றவற்றைக் கண்காணிக்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறது. உணவுச் சங்கிலி, ரெஸ்டாரண்டுகள் மற்றும் ஹோட்டல்கள் தங்களது மளிகை தேவைகளுக்காக Smerkato-வில் ஆர்டர் செய்யலாம். ஆர்டர்கள் அவர்களது இடங்களிலேயே விநியோகிக்கப்படும். Smerkato உள்ளூர் ஸ்டோர்களுக்கான ஹைப்பர்லோக்கல் சந்தைப்பகுதியாகும். வாடிக்கையாளர்களிடத்தில் விநியோகம் செய்யப்படுவதற்காக நிலையான கமிஷனுடன் Smerkato வாடிக்கையாளர்கள் சார்பாக உள்ளூர் கடைகளில் ஆர்டர்களை வழங்குகிறது. தற்போது ஹார்டுவேர், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் உள்ளிட்ட பிரிவுகளிலும் விரிவடைந்துள்ளது.
3. EZKirana : கடந்த ஆண்டு யுவர்ஸ்டோரியின் டெக் 30 ஸ்டார்ட் அப்களில் ஒன்றான EZKirana நட்சத்திர ஹோட்டல்களைக் காட்டிலும் சிறு வணிகங்களில் கவனம் செலுத்துகிறது. இந்த ஸ்டார்ட் அப்பிற்கு ஏற்கெனவே ஒழுங்குபடுத்தப்பட்ட கொள்முதல் அமைப்பு உள்ளது. ஆரம்பத்தில் இக்குழுவினர் பொருட்களை மொத்தவியாபாரிகளிடம் இருந்து கொள்முதல் செய்தாலும் தற்போது நேரடியாக உற்பத்தியாளர்களிடமிருந்தே கொள்முதல் செய்யத் துவங்கியுள்ளனர். அதிக கையிருப்பு இல்லாமல் குறிப்பிட்ட காலத்திற்குத் தேவையான பொருட்களை மட்டுமே கையிருப்பாக வைத்திருக்கும் மாதிரியை பின்பற்றுகிறது. பெங்களூருவைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப் எளிதான ஆர்டர் தேர்வு, பேக்கேஜிங், இருப்பு இல்லாத பொருட்கள் சார்ந்த திருத்தங்கள் போன்றவற்றிற்காக ஒரு செயலியையும் உருவாக்கியுள்ளது.
4. Udaan : இந்நிறுவனம் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிகளான சுஜீத் குமார், அமோத் மால்வியா, வைபவ் குப்தா ஆகியோரால் 2016-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த சந்தைப் பகுதியில் உற்பத்தியாளர்களும் மொத்தவியாபாரிகளும் தங்களது தயாரிப்புகளை சில்லறை வர்த்தகர்களுக்கு விற்பனை செய்யலாம். இந்தப் பிரிவில் அதிகமாக நிதி உயர்த்திய ஸ்டார்ட் அப்பான Udaan போக்குவரத்து, கட்டணம் மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்குகிறது. தற்போது ஆடைகள், எலக்ட்ரானிக்ஸ், எஃப்எம்சிஜி ஆகிய மூன்று பிரிவுகளில் கவனம் செலுத்துகிறது. லைட்ஸ்பீட் வென்சர்ஸ் மற்றும் ரஷ்ய தொழில்நுட்ப முதலீட்டாளரான யூரி மில்னர் போன்றோரிடமிருந்து 60 மில்லியன் டாலர் நிதி உயர்த்தியுள்ளது.
5. Jumbotail: கலாரி கேப்பிடல் மற்றும் நெக்சஸ் வென்சர் பார்ட்னர்ஸ் ஆகியவற்றிடம் இருந்து 10.5 மில்லியன் டாலர் நிதி உயர்த்தியுள்ள பெங்களூருவைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப் இந்திய உணவு மற்றும் மளிகை சுற்றுச்சூழலை தொழில்நுட்பம், தரவு அறிவியல், வடிவமைப்பு அகியவற்றைப் பயன்படுத்தி ஒழுங்கமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் ப்ராண்டுகள் தங்களது உணவு மற்றும் மளிகை பொருட்களை இந்தச் சந்தைப் பகுதியில் பட்டியலிடலாம். கிரானா மற்றும் HoReCa வணிகங்கள் தங்களது மொபைல் செயலி வாயிலாக இவர்களை அணுகலாம். இந்தச் செயலி கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உள்ளது. ஜம்போடெயில் அதன் விற்பனையாளர்களுக்கு ஸ்டோரில்களில் டெலிவர் செய்யும் வசதியையும் கட்டணம் சேகரிக்கும் வசதியையும் வழங்குகிறது. நடைமுறை மூலதன கடனுக்கான வசதியையும் வழங்குகிறது.
6. Superzop : 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பெங்களூருவைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப் கிரானா ஸ்டோர்களுக்கான பி2ஆர் விவசாய வணிக தளமாகும். பிரித்வி சிங், தர்ஷன் கிருஷ்ணமூர்த்தி, ரகுவீர் அல்லடா ஆகியோரால் நிறுவப்பட்ட SuperZop செயலி சில்லறை வர்த்தகர்கள் பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து டெலிவரி பெற உதவுகிறது. இந்தச் செயலி ஆங்கிலம் மட்டுமல்லாமல் உள்ளூர் மொழிகளில் உள்ளது. தயாரிப்பின் தரத்தை காட்சிப்படுத்துதல், நுகர்வோர் நடத்தையை கணித்தல், நுகர்வோர் கடனை திருப்பிசெலுத்தும் திறனை ஆய்வு செய்தல், தேவையை கணித்தல் போன்றவற்றிற்காக செயற்கை நுண்ணறிவையும் இயந்திரக் கற்றலையும் பயன்படுத்துகிறது. மேலும் இவர்களது வாடிக்கையாளர்கள் பொருட்களை கடன் வசதியில் வாங்கிக்கொள்ள ‘SuperKredit’ வசதியையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
7. ShopKirana: இந்நிறுவனம் தனுதேஜாஸ் சரஸ்வத், சுமித் கோராவத் மற்றும் தீபக் தனோதியா ஆகியோரால் 2015-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இண்டோரைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப் வணிகர்கள் மற்றும் சில்லறை வர்த்தர்களுக்கான பி2பி மொபைல்-விநியோக தளமாகும். சில்லறை வர்த்தகர்களுக்கு ஆர்டர் செய்தல், விநியோகம், கட்டணம் ஆகியவற்றிற்கு உதவுகிறது. அதேபோல ப்ராண்ட் அதிக வாடிக்கையாளர்களைச் சென்றடையவும் ப்ரொமோஷன் அல்லது புதிய தயாரிப்பு அறிமுகம் போன்றவற்றிகாக சில்லறை வர்த்தகர்களுடன் நேரடியாக இணையவும் உதவுகிறது. தற்போது மும்பையிலும் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் பட்டியலிடப்பட்ட ப்ராண்டுகளின் வர்த்தக லாபத்திலிருந்து வருவாய் ஈட்டுகிறது. ஷாப்கிரானா வெளியிடப்படாத நிதித்தொகையை பல்வேறு ஏஞ்சல் முதலீட்டாளர்கள் மற்றும் ஜப்பானிய சீட் நிலை முதலீட்டாளர் இன்குபேட் ஃபண்ட் ஆகியவற்றிடம் இருந்து நிதி உயர்த்தியுள்ளது.
ஆங்கில கட்டுரையாளர் : அதிரா ஏ நாயர் | தமிழில் : ஸ்ரீவித்யா