‘ஹிஜாப்’ பெண்களை கால்பந்து வீராங்கனைகள் ஆக்கும் பயிற்சியாளர் தமிமுன்னிசா!
தமிமுன்னிசா, தனது பயிற்சி அகாடமி டாலண்ட் எப்சி சார்பில் நடைபெற்ற மாநில கால்பந்து போட்டிக்காக 20 பெண்கள் கொண்ட குழுவுக்கு (இவர்களில் பெரும்பாலானோர் பாரம்பரிய இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்) பயிற்சி அளிப்பதில் அண்மையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.
ரபியா ஃபாத்திமாவுக்கு 12 வயதாகிறது. ஹை ஃபைகள் பெறவும், கேஎப்சியில் இருந்து பர்கர் சாப்பிடவும் அவருக்கு பிடிக்கும்.
எனினும், அவரது உணவுப் பிரியத்திற்கு ஒருவரால் மட்டும் தான் கட்டுப்பாடு விதிக்க முடியும். கால்பந்து பயிற்சியாளரான தமிமுன்னிசா ஜபார் (THAMIMUNISSA JABBAR) தான் அந்த நபர்.
தமிமுன்னிசா, தனது பயிற்சி அகாடமி டாலண்ட் எப்சி சார்பில் நடைபெற்ற மாநில கால்பந்து போட்டிக்காக 20 பெண்கள் கொண்ட குழுவுக்கு (இவர்களில் பெரும்பாலானோர் பாரம்பரிய இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்) பயிற்சி அளிப்பதில் அண்மையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். பலரும் ரம்ஜானுக்கு இரண்டு நாட்கள் கழித்தே பயிற்சியை துவக்கியதால் பயிற்சி தீவிரமாக இருந்தது.
ஆனால், குறுகிய காலத்தில், சாம்பியன்களை உருவாக்குவது என்பது ஹிஜாபில் செயல்படும் சூறாவளி பயிற்சியாளரான தமிமுன்னிசாவுக்கு புதிதோ அல்லது கஷ்டமானதோ அல்ல. இதற்கு முன்னர் அவர் மாவட்ட, வட்டம் மற்றும் மண்டல அளவிலான போட்டிகளுக்கு இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலத்தில் அணிகளை தயார் செய்துள்ளார். எல்லாம் ஹிஜாப் அணிந்தபடியே தான்.
“இது எளிமையான தகவலாக இருக்கலாம், ஆனால், பல நேரங்களில் தங்கள் குழந்தைகள் பாதுகாப்பான கைகளில் தான் இருக்கின்றன என்பதை உணர்த்துவதாகவும் அமைகிறது,” என்கிறார் தமிமுன்னிசா.
இதன் காரணமாக, தங்கள் வேர்களில் பற்று கொண்டிருக்கும் அதே நேரத்தில் கால்பந்து விளையாட்டில் அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள விரும்பும் பாரம்பரிய இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண்களுக்கு அவர் ஆதர்சமாக உருவாகியிருக்கிறார்.
தனது மாணவிகள் தலைக்கவசம் அணிந்து விளையாடுவதற்காக அவர் நடுவர்களோடு வாதிட்டிருக்கிறார், அவர்கள் குடும்பங்களோடு மாதக்கணக்கில் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டிருக்கிறார், அவர்கள் பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் இருப்பதை உறுதி செய்து கொள்வதிலும், வீட்டிற்கு பாதுகாப்பாக செல்வதிலும், தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவதிலும் அக்கறை காட்டி வந்திருக்கிறார்.
“எதிர்ப்பு தெரிவிக்கும் பல குடும்பங்களுக்கு இவை எல்லாம் சமரசத்திற்கு இடமில்லாதவை என்பவர் தானும் இந்த விஷயங்களில் நம்பிக்கை கொண்டிருப்பதாகக் கூறுகிறார்.”
தமிமுன்னிசாவின் நம்பகத்தன்மை மற்றும் கால்பந்து தனது மாணவிகளின் வாழ்க்கையை மாற்றும் எனும் உறுதியே அவரிடம் தனது மகள் பயிற்சி பெற அனுமதிக்க முதல் காரணம் என்கிறார் ரபியாவின் தந்தை முகமது ரபியுல்லா.
பல நேரங்களில், பெண் பயிற்சியாளருடன் தங்கள் குழந்தைகள் வேறு நகரங்களுக்குச் சென்று போட்டிகளில் விளையாட அனுமதிப்பதில் இஸ்லாமியக் குடும்பங்களுக்கு மத நம்பிக்கைகள் தடையாக இருக்கின்றன.
“மற்றவர்கள் தங்கள் பிள்ளைகள் வெயிலில் விளையாடி கருத்து விடுவார்கள் எனக் கவலைப்படுகின்றனர், அல்லது ஆண் பாதுகாப்பு இல்லாததால் ஏதேனும் ஆபத்தில் சிக்கிக் கொள்ளலாம் என அஞ்சுகின்றனர். என்னைப்பொருத்தவரை என் மகள் மகிழ்ச்சியாக இருப்பதையும் முன்னேறுவதையும் பார்த்தது, இறுதி உந்துதலாக அமைந்தது,” என்கிறார் அவர்.
குடும்பங்களில் ஏற்படும் இத்தகைய ஆழமான மாற்றத்தின் மதிப்பை தமிமுன்னிசாவைவிட வேறு யாரும் சிறப்பாக அறிந்திருக்கவில்லை. கால்பந்து வீராங்கனையாக வேண்டும் எனும் கனவை பின்பற்றுவதில் அவர் எதிர்கொண்ட தொடர் போராட்டங்களே இளம் வீராங்கனைகளுக்காக வாதிடும் சாம்பியனாக அவர் மாற ஒரு காரணமாகியிருக்கிறது.
செங்கல்பட்டில் மாணவியாக இருந்த போது 1997ல் கால்பந்துடனான அவரது உறவு துவங்கியது. விளையாடத்துவங்கிய இரண்டு ஆண்டுகளுக்குள் அவர் காஞ்சியில் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார். இந்த வெற்றி அவரது பெற்றோருடன் பனிப்போரை உண்டாக்கியது. 1999ல் ஊட்டியில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில போட்டியில் வென்ற பிறகே இது முடிவுக்கு வந்தது.
“என்னைப்பற்றி நாளிதழ்களில் வந்த செய்தியை படித்த போது என் தந்தையின் கண்களில் கண்ணீர் கசிந்தது. நான் உறுதியாக இருந்ததற்காக பாராட்டு தெரிவித்தார் என்பவர். ஆனால், விளையாட்டில் எனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என என் குடும்பத்தினருக்கு நம்பிக்கை அளித்த என் பயிற்சியாளர் இல்லாவிட்டால் எனக்கு 18 வயது ஆனவுடன் திருமணம் செய்து கொடுத்திருப்பார்கள்,” என்கிறார்.
பயிற்சியாளராக ஏழு ஆண்டுகளில் அவர் திறமை வாய்ந்த வீராங்கனைகளை அணியில் தக்க வைத்துக்கொள்ள மிகவும் மெனக்கெடுகிறார். ஏழைக் குடும்பங்களில் இருந்து வருபவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க வீட்டு உணவை அளிக்கிறார்.
பள்ளி விடுமுறைகளில் தனது அணியினருக்காக சிறப்பு முகாம் நடத்தியவர் பயிற்சி அளிப்பதோடு தினமும் அவர்களுக்கு சமைத்தும் கொடுத்திருகிறார். அப்படி இருந்தும் பள்ளி படிப்பை முடித்ததும் அவருடன் தொடர்ந்து இருக்கும் பெண்கள் அரிதாகவே இருக்கின்றனர்.
“வளர்ந்து விட்ட பெண்கள் விஷயத்தில் என்னால் எதுவும் செய்ய முடிவதில்லை. ஏனெனில், 18 வயதானவுடன் அவர்கள் குடும்பத்தினர் திருமணம் செய்து கொடுக்கவே விரும்புகின்றனர்,” என்கிறார்.
21 வயதான ஷாம்னா ரகுமான் மட்டுமே தொடர்ந்து விளையாடும் பழைய மாணவியாக இருக்கிறார். பயிற்சியாளராக இருக்கும் அவர் ஒருவிதத்தில் தமிமுன்னிசாவின் பாரம்பரியத்தை தொடர்பவராக இருக்கிறார். மற்றபடி கால்பந்து விளையாட வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு இந்த விளையாட்டை கொண்டு சென்று வருகிறார்.
“2008 தமிமிடம் பயிற்சி பெறத்துவங்கினேன். பள்ளி போட்டி துவங்கி சிறிய வெற்றியை கூட கொண்டாட வேண்டும் என்பதை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன்,” என்கிறார்.
“களத்தில் உங்களால் என்ன முடியும் என்பதை உணர்த்துவதே, குடும்பத்தினர், சமூகத்தின் தயக்கங்களை போக்குவதற்கான வழி. இந்தியாவில் இன்னமும் அதிகம் போற்றப்படாத விளையாட்டாக இருக்கும் கால்பந்தில் நீங்கள் சாம்பியனாகும் போது, நீங்கள் தனித்து தெரிந்து கொண்டாடப்படுகிறீர்கள்” என்கிறார்.
ஆங்கிலத்தில்: சரண்யா சக்கரபாணி | தமிழில்: சைபர் சிம்மன்
குறைந்த கட்டணத்தில் கோடிங் பயிற்சி - ‘கோட் பண்ணு’ உருவாக்கிய தூத்துக்குடி பொண்ணு!
Edited by Induja Raghunathan