30 அரிய வகை சிறுதானியங்களை பயிரிட்டு பாதுகாக்கும் ‘சிறுதானியங்களின் ராணி’ ரைமதி!
அழிந்துபோன பாரம்பரிய நெல் ரகங்களையும், 30 வகையான சிறுதானியங்களையும் மீட்டெடுத்து பயிரிட்டுப் பாதுகாத்து வருகிறார் ஒடிசாவை சேர்ந்த பழங்குடியினப் பெண் ரைமதி.
நம் முன்னோர்கள் உபயோகப்படுத்திய பல நெல் ரகங்கள், நம் கண்ணால் கூடக் காண முடியாத அளவுக்கு வழக்கொழிந்து விட்டன. அன்றாட உணவின் ஓர் அங்கமாக மாறிய நெல்லிற்கே இந்நிலைமையெனில், சிறுதானியங்களின் நிலையை எண்ணி பாருங்கள்.
சிறுதானியங்கள் எனும் வார்த்தையே கொரோனாவின் கொடூர ஆட்டத்திற்கு பிறகே, மக்கள் மத்தியில் அதிகம் புழங்க துவங்கியது. அதில் கொட்டிக்கிடக்கும் நன்மைகளால் மக்களின் அன்றாட உணவுப்பட்டியலில் சிறுதானியங்கள் இடம்பெறத் தொடங்கியுள்ளன. இதனை முன்பே உணர்ந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரைமதி கியூரியா 30 அரிய வகையான சிறுதானியங்களை கண்டறிந்து பாதுகாத்து பயிரிட்டு வருகிறார்.
ஒடிசா மாநிலம், கோராபுட் மாவட்டம், குந்த்ரா தொகுதியின் நுவாகுடா கிராமத்தை சேர்ந்த பழங்குடியின பெண் ரைமதி கியூரியா. ஊரார் அவரை அழைப்பதோ 'சிறுதானியங்களின் ராணி'. ஆம், 72 நாட்டு நெல் ரகங்களும், 30 வகையான அரிய தினைகளும் அழிந்து போகாமல் பாதுகாத்து தினை விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் அப்பெயர் பெற்றார்.
2023-ம் ஆண்டை இந்திய அரசு 'சர்வதேச தினை' ஆண்டாக அறிவிக்கக் கோரி, ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்மொழிந்தது. இதனால் இந்தியா தினை உணவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதன் பொருட்டு, கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற உலகத் தலைவர்கள் பங்கேற்ற ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்று தினை விவசாயத்தின் நன்மைகள் மற்றும் வெற்றிக் கதையை பகிர்ந்து கொள்வதற்காக ரைமதிக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. மாநாட்டின் போது, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்துள்ளது.
குந்த்ரா பாடி, மாண்டியா, ஜஸ்ரா, ஜுவானா மற்றும் ஜாம்கோலி உட்பட குறைந்தது 72 பாரம்பரிய நெல் வகைகளையும் 30 வகையான தினைகளையும் அவர் பாதுகாத்துள்ளார்.அவர் பாதுகாத்து வரும் தினை வகைகளில் ஒன்று ஒடிசா அரசால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது.
ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ரைமதிக்கு சிறுவயதிலிருந்தே விவசாயத்தின்மீது அதிக நாட்டம். 16 வயதில் திருமணம் முடிந்து மணவாழ்க்கைக்குள் அடியெடுத்துள்ளார். வீட்டு வேலைக்கு மத்தியிலும், தினைகளை சேகரித்து பாதுகாக்கும் அவரது ஆர்வம் மட்டும் குன்றவில்லை. அதை துாண்டும் வகையில் உத்வேகத்தை அள்ளித் தந்தார் 70 வயதான கமலா பூஜாரி. ஒடிசாவை சேர்ந்த கமலா பூஜாரி, அவரது வாழ்நாள் முழுவதும் நூற்றுக்கணக்கான நெல் விதை ரகங்களைப் பாதுகாத்ததற்காக பத்மஸ்ரீ விருது பெற்றவர்.
அவரின் வழிகாட்டுதலுடன், சென்னையை தளமாகக் கொண்ட 'எம்.எஸ்.சுவாமிநாதன் ரிசர்ச் பவுண்டேஷன்' (எம்.எஸ்.எஸ்.ஆர்.எஃப்) எனும் இலாப நோக்கற்ற அமைப்பில் ரைமதி இணைந்தார். பொருளாதார வளர்ச்சிக்கான உத்திகளை உருவாக்கி ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட இவ்வமைப்பானது குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள பின்தங்கிய பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
2000-ம் ஆண்டு முதல், அறக்கட்டளையின் உதவியுடன் அவர், நெல் சாகுபடி முறை, நெல் சாகுபடிக்கான வரி மாற்று முறை, விதைப் பெருக்கக் குறியீடு மற்றும் கேழ்வரகு தினைகளுக்கான வரி மாற்று முறை ஆகிய அறிவியல் பாதுகாப்பு முறைகளை பயின்று பின்பற்றி வருகிறார்.
"இந்தியாவில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் சத்தான உணவுகளை அன்றாடம் உட்கொள்வதில்லை. ஆரோக்கியமான உணவுமுறைக்கு மாறுவதற்கு சிறுதானியங்களின் உற்பத்தி அதிகரித்து, அதன் விலை குறைய வேண்டும்" என்று பகிர்ந்தார் அவர்.
தற்போது அவரது நான்கு ஏக்கர் நிலத்தில் தினை பயிரிடும் ராய்மதி, சிறந்த தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி, தினை விவசாயத்தின் விளைச்சலையும் தரத்தையும் கணிசமாக மேம்படுத்தியுள்ளார். இயற்கை வேளாண்மை நடைமுறைகளை ஊக்குவிக்க உயிர் உள்ளீடுகளையும் பயன்படுத்தி வருகிறார்.
ரைமதி தனது முயற்சிகளை விரிவுபடுத்தும் வகையில், சமூகத்தில் உள்ள மற்ற 2,500 விவசாயிகளுக்கு தினை விவசாய உத்திகளைப் பின்பற்ற பயிற்சி அளிக்க முன்முயற்சி எடுத்துள்ளார். திணைகளை விளைவிப்பதோடு, அதை மக்கள் பயன்படுத்தவும் வலியுறுத்தி வருகிறார்.
சப்பாத்தி, தோசை போன்ற காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு தயாரிக்க, தினை பிரதானமான ஒன்றாகும் எனும் அவர், ஒரு நாள் முழுவதும் அரிசியால் ஆன உணவுகளை உட்கொள்ளாமல் இருந்தாலும், நாளிற்கான ஆற்றலை தினைகள் தரவல்லவை என்று குறிப்பிடுகிறார்.
தினை சாகுபடி அவருக்கு ஒரு மாற்றமான அனுபவத்தை அளித்துவருகிறது. ஏனெனில், பெண் விவசாயிகள் மற்றும் உழவர்-உற்பத்தி நிறுவனங்களின் சுய உதவிக் குழுவை அவரே தலைமை தாங்கி வழிநடத்துகிறார். அவரது பகுதியிலுள்ள பெண் விவசாயிகள் தினைகளை பகோராக்கள் மற்றும் லட்டுகள் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி உள்ளூர் சந்தைகளில் விற்பனைச் செய்கின்றனர்.
பெண்களின் வாழ்வதாராத்துக்கு உதவுவதுடன், 2012-ம் ஆண்டிலிருந்து அவரது முன்னோர்களின் குடும்ப நிலத்தில் பண்ணைப் பள்ளி ஒன்றை நிறுவி சிறுதானிய விவசாயத்தை பெருக்குவதற்காக முக்கியப் பங்காற்றி வருகிறார். இந்தப் பள்ளியின் மூலம், தினை விவசாயத்தினை அறிவியல் நடைமுறையில் பயிற்சி அளித்து, மதிப்பு கூட்டலின் மூலம் சிறந்த வருமானம் ஈட்ட உதவுகிறார்.
இவரது சிறப்பான பணியைப் பாராட்டி, மாநில அளவில் 'தினை ராணி' என்ற பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார். மேலும் 2016ம் ஆண்டு சுனபேடாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோயில் அண்ட் வாட்டர் கன்சர்வேஷனிடமிருந்து 'சிறந்த விவசாயி' விருதையும், 2018ம் ஆண்டு நோமுண்டியிலுள்ள டாடா ஸ்டீல் நடத்திய பாரம்பரிய உணவுத் திருவிழாவில் 'சிறந்த விவசாயி' விருதையும் பெற்றார்.
"தேசிய அளவிலான அங்கீகாரம் மட்டுமில்லை, உலகளாவிய தலைவர்களிடமிருந்தும் அபரிமிதமான மரியாதை கிடைத்தது. இந்த அங்கீகாரமும், மரியாதையும் அதிக தினை ரகங்களை பாதுகாத்து, மாநிலத்தை பெருமைப்படுத்த ஊக்குவிக்கிறது" என்று பகிர்ந்தார் ரைமதி.
தகவல் உதவி : தி பெட்டர் இந்தியா