800 ரூபாயில் இயற்கை திரவ உர உற்பத்தியில் அசத்தும் குமரி மாவட்ட விவசாயி அழகேசன்!
நைட்ரஜன், ஃபாஸ்பரஸ் போன்ற தாவர வளர்ச்சிக்கு அவசியமான உரங்கள் குறித்த அடிப்படை அறிவு பெரும்பாலான விவசாயிகளுக்கு இருக்கும். மாட்டு சாணத்தில் நைட்ரஜன் இருப்பதும் அவர்களுக்குத் தெரியும். பின் ஏன் விளைநிலத்தில் ஏராளமாக கொட்டிக்கிடக்கும் மாட்டு சாணத்தை உரமாக பயன்படுத்தாமல் விலை உயர்ந்த உரங்களை வாங்குகிறார்கள்?
அதிர்ஷ்டவசமாக ஒரு விவசாயி இது குறித்து சிந்தித்தார். விவசாயியான ஜி.ஆர்.சக்திவேல் பயிர்களுக்காக மாட்டின் கழிவினை பயன்படுத்தி திரவ வடிவத்திலான உரத்தை வெற்றிகரமாக தயாரித்தார். நான்கு வருடங்களுக்கு முன்னால் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையத்தின் மைராடா க்ரிஷ் விக்யான் கேந்திராவிலிருந்து கிடைத்த சில ஆவணங்களின் உதவியுடன் இந்திய வேளாண்மை சங்கம் இந்த முயற்சியை அங்கீகரித்தது. இந்த முயற்சி அவ்வளவு எளிதாக ஒரே நாளில் உருவாகியதல்ல.
ஆர்கானிக் முறையை தீவிரமாக ஆதரிக்கும் சக்திவேல் எப்போதும் சுற்றியுள்ள வளங்களை பயன்படுத்துவதில் அதிக தீவிரம் காட்டினார். விளைநிலத்தில் ஏராளமாக கிடைக்கும் மாட்டின் கழிவுகளை பயன்படுத்த திட்டமிட்டார். பல வருடங்களாக கவனித்தும் திட்டமிட்டும் விளைநிலத்திலுள்ள மாட்டின் கழிவுகளான சாணம் மற்றும் சிறுநீர் ஆகியவற்றை மறுசுழற்சி செய்யும் திட்டத்தை உருவாக்கினார். இதற்காக நான்கு பெட்டிகள் கொண்ட யூனிட்டை வடிவமைத்தார்.
முதலில் மாட்டுக் கொட்டகையின் தரையை சற்று சாய்வாக அமைத்ததால் மாட்டின் சிறுநீர் ஒரு கால்வாய்க்கு செல்லும். இந்த சிறுநீர் தொட்டியில் சேகரிக்கப்படும். தரையிலிருந்து மாட்டு சாணம் சேகரிக்கப்படும். இவ்வாறு சேகரிக்கப்படும் மாட்டின் சிறுநீரும் சாணமும் ஒன்றாக கலந்து தெளிவாகும் வரை சற்று நேரம் அப்படியே விடப்பட்டு பெட்டியில் ஒவ்வொரு நிலையிலும் வடிகட்டப்படும். இந்த முறையினால் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வடிபொருள் கிடைக்கும். அவர் இந்த வடிபொருளுடன் நீர் சேர்த்து கரும்பு தோட்டத்தின் சொட்டு நீர் பாசனத்திற்கு பயன்படுத்தினார். சாண எச்சத்தையும் வீணாக்குவதில்லை. கழிவுகளை சமையல் எரிவாயுவாக பயன்படும் மீத்தேன் கேஸாக மாற்றும் பயோகேஸ் உற்பத்தி முறைக்கு அவை பயன்படுத்தப்பட்டது.
மாட்டு சாணத்தின் மூலம் உரம் தயாரிக்க நான்கு தொட்டி அமைப்பு
நான்கு தொட்டி அமைப்பு பல விவசாயிகளின் கவனத்தை ஈர்த்தாலும் விலை உயர்ந்தது என்கிற காரணத்தினால் பலர் இதை பயன்படுத்துவதில்லை. நான்கு தொட்டிகள் கொண்ட இந்த அமைப்பின் குறைந்தபட்ச விலை பொருட்கள் மற்றும் கூலியுடன் சேர்த்து 40,000 ரூபாயாகும். இந்த முறையினால் பயனுள்ள உரம் கிடைத்தாலும் சிறிய தொகையில் இயங்கி வரும் விவசாயிகளுக்கு இந்த விலை கட்டுப்படியாகவில்லை.
சென்னிமலையின் மைலாடியைச் சேர்ந்த விவசாயியான அழகேசன், சக்திவேலின் மாடலை ஆய்வு செய்ய முடிவெடுத்தார். விவாசியகள் தங்கள் நிலத்தின் மூலமாகவே கிடைக்கும் உரத்தினை பயன்படுத்தும் விதத்தில் எளிதாகவும் குறைந்த விலையிலும் திரவ உர உற்பத்தி ஆலையை உருவாக்க விரும்பினார். கழிவுகளை சேகரித்து வடிகட்டும் முறைக்காக நான்கு தொட்டியை பயன்படுத்துவதால் விலை அதிகமாக இருந்தது. அதற்கு பதிலாக ஒரே ஒரு கொள்கலன் கொண்டு உரம் தயாரிக்கும் தொழிற்சாலையை உருவாக்கினார்.
சிமெண்ட் கட்டமைப்புகள் கிடையாது, கூலி செலவு கிடையாது, கட்டிட செலவு கிடையாது. அவர் பயன்படுத்தியதெல்லாம் ஒரே ஒரு ப்ளாஸ்டிக் பேரல் மட்டுமே. மாட்டின் சிறுநீரும் சாணமும் அதில் ஒன்றாக திணிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்கு அப்படியே விடப்படும். ஒவ்வொரு கிலோ மாட்டு சாணத்திற்கும் ஐந்து லிட்டர் மாட்டு சிறுநீர் கலக்கப்படும். இந்த கலவையை புளிக்கவிடுவதற்காக சிறிதளவு வெல்லம் சேர்க்கப்படும். செலவின் ஒரு பகுதியிலேயே அதே திரவ உரம் தயார். இதற்கான மொத்த செலவு வெறும் 800-1000 ரூபாய்தான்.
பேரல் பயன்படுத்தப்படும் இந்த முறையில் இரண்டு நன்மைகள் உள்ளன. முதலில் செலவு குறைவானது. இரண்டாவது அடக்கமானது. அசைக்கமுடியாத மெசனரி அமைப்பைப்போல இல்லாமல் இந்த பேரலை விவசாயி தேவைக்கேற்ப நிலத்தின் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் நகர்த்தி எடுத்துச் செல்லலாம். பராமரிப்பது மிகவும் எளிதானது. சுத்தம் செய்வதற்கு நேரமும் உழைப்பும் அதிகம் தேவைப்படாது. இரு விவசாயிகளும் இந்த முறையை மேலும் எளிதாக்கி பல விவசாயிகளை சென்றடைய பாடுபடுகின்றனர்.
ஈரோடு மற்றும் அதன் சுற்றுப்புறத்திலுள்ள பல விவசாயிகள் இந்த அமைப்பை பயனபடுத்தினாலும் ஏர் கலப்பையைப் போன்றோ அல்லது அரிவாள் போன்றோ பொதுவாக பயன்படுத்தும் பொருளாக இந்த சிறிய உரம் தயாரிக்கும் தொழிற்சாலையும் அனைவரையும் சென்றடைய சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது.
ஆங்கில கட்டுரையாளர்: சீதா கோபாலகிருஷ்ணன்