5 ஆயிரம் முதலீட்டில் தொடங்கி 35 கோடி ரூபாய் டர்ன்ஓவர்– பைகள் தயாரிப்பில் வளர்ச்சி அடைந்துள்ள பிராண்ட்!

By YS TEAM TAMIL|18th Mar 2021
பை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மும்பையைச் சேர்ந்த COSMUS தற்போது கார்ப்பரேட், சில்லறை வர்த்தகம், மின்வணிகம் என் மூன்று பிரிவுகளின்கீழ் செயல்படுகிறது.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

தொழில்முனைவில் ஈடுபடும் ஒவ்வொருவருக்கும் ஒரு சுவாரஸ்யமான பின்னணி இருக்கும்.

பீஹாரைச் சேர்ந்த சித்திக்கும் இப்படித்தான் தொழில் தொடங்கியுள்ளார். பிபிஏ படித்து முடித்தார். அதன் பிறகு உறவினர் ஒருவரை சந்திக்க ஒருமுறை மும்பை சென்றார். ஒரு வாரம் தங்குவதாக இருந்தது. ஆனால் அங்கேயே தொழில் தொடங்குவோம் என்று சித்திக் கற்பனைகூட செய்யவில்லை.


மும்பை சென்று கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் கழித்து 2003ம் ஆண்டு பிரபல குடிசைப்பகுதியான தாராவியில் பை தயாரிப்புத் தொழிலைத் தொடங்கினார். நண்பர்களிடம் கடனாக 5,000 ரூபாய் பெற்றுக்கொண்டு, இவர் தொடங்கிய தொழில் இன்று COSMUS என்கிற நிறுவனமாக உருவெடுத்து 35 கோடி ரூபாய் டர்ன்ஓவர் கொண்டுள்ளது.

1

தொடக்கம்

சித்திக் மும்பையில் சில நாட்கள் மட்டுமே தங்க திட்டமிட்டிருந்ததால் ஒரு சிறு தொகையை மட்டும் கையிருப்பு வைத்திருந்தார். கூடுதல் நாட்கள் தங்குவது குறித்து பின்னரே முடிவெடுத்தார். உடனே முதல் வேலையாக கையிலிருந்த தொகையைக் கொண்டு கம்ப்யூட்டர் கோர்ஸ் சேர்ந்தார்.


இவரது தீர்மானத்தில் குடும்பத்தினருக்கு விருப்பமில்லை. இருந்தாலும் சித்திக் உறுதியாக இருந்தார். கோகோ கோலா, கேட்பரி போன்ற நிறுவனங்களில் வேலை செய்தார். 2000ம் ஆண்டு வேலையை விட்டு விலகினார். ஆன்மிக வழியில் சில நாட்கள் பயணித்துள்ளார்.

ஓராண்டிற்கு பின்னர் மீண்டும் வேலை தேடினார். ஆனால் தோல்வியே மிஞ்சியது. எங்கும் வேலை கிடைக்கவில்லை.


தாராவியில் சித்திக்கின் நண்பர் ஒருவர் ஸ்கிரீன் பிரிண்டிங் வணிகத்தில் ஈடுபட்டிருந்தார். அவர் பைகளும் தயாரித்து வந்தார். அவற்றை விற்பனை செய்ய சித்திக்கின் உதவியைக் கேட்டுள்ளார். உடனே அதில் களமிறங்கிய சித்திக் பாந்த்ரா வரை சென்று பைகளை விற்பனை செய்யத் தொடங்கினார்.


இப்படியே சில நாட்கள் கடந்தது. ஒருமுறை பரேல் பகுதியில் உள்ள கடை ஒன்றில் 300 டஃபெல் பைகளுக்கான கார்ப்பரேட் ஆர்டர் கிடைத்தது. பை ஒன்றிற்கு 65 ரூபாய் வரை லாபம் கிடைத்தது.


ஒன்றரை ஆண்டுகள் கடந்தன. சித்திக்கின் நண்பர் தொழிலை மேற்கொண்டு நடத்தாமல் நிறுத்திக்கொள்ள முடிவெடுத்தார். சித்திக் மீண்டும் குழப்பத்தில் ஆழ்ந்தார். சொந்தமாக தொழில் தொடங்கத் தீர்மானித்தார். நண்பர்களிடம் 5,000 ரூபாய் கடனாகப் பெற்றுக்கொண்டார். தாராவியில் நான்கு தையல் இயந்திரங்களுடன் 2003-ம் ஆண்டு COSMOS Bags என்கிற பெயரில் பைகள் தயாரிக்கத் தொடங்கினார். பின்னர் இந்நிறுவனம் COSMUS என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

2
“பைகள் துறை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. அதனால் எனக்கு ஆர்டர் கிடைக்கக்கூடிய இடங்களில் மட்டும் கவனம் செலுத்தினேன்,” என்கிறார் சித்திக்.

பல ஆண்டுகள் COSMUS நிறுவனம் பி2பி வணிகத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தது.

வணிக வளர்ச்சி

COSMUS தற்போது கார்ப்பரேட், சில்லறை வர்த்தகம், மின்வணிகம் என் மூன்று பிரிவுகளின்கீழ் செயல்படுகிறது. அமேசான், ஃப்ளிப்கார்ட், பேடிஎம் போன்ற மின்வணிக தளங்களில் இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன.


விநியோகஸ்தர்களுடன் இணைந்து பல அவுட்லெட்கள் மூலமாகவும் விற்பனை செய்கிறது.

நான்கு இயந்திரங்களுடன் தொடங்கப்பட்டு 95 இயந்திரங்களுடன் தாராவியில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இந்நிறுவனம் டஃபிள் பேக், லேப்டாப் பேக், ஸ்கூல் பேக் போன்ற பிரிவுகளின்கீழ் சுமார் 40,000 பைகளை ஒரு மாதத்திற்குத் தயாரிக்கிறது.


COSMUS பைகள் 799 ரூபாயில் தொடங்கி 2,999 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தரமான தயாரிப்பை போட்டியாளர்களைக் காட்டிலும் குறைந்த விலையில் வழங்குவதே இந்நிறுவனத்தின் சிறப்பம்சம்.

ஆண்டுதோறும் இந்நிறுவனம் நிலையாக வளர்ச்சியடைந்து வருகிறது. 2019 நிதியாண்டில் 13 கோடி ரூபாய் விற்றுமுதல் இருந்தது. 2020 நிதியாண்டில் இந்த அளவு கிட்டத்தட்ட இரண்டரை மடங்கு அதிகரித்து 35 கோடி ரூபாய் ஆனது.

தற்சார்பு

ஆரம்பத்தில் பை தயாரிப்பிற்கான மூலப்பொருட்கள் சீனா, தாய்வான் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் தற்போது 100% மேட் இன் இந்தியா பிராண்டாக உருவெடுத்துள்ளது.


சில பொருட்கள் உள்ளூரியே வாங்கப்படும் நிலையில் மற்ற மூலப்பொருட்கள் நிறுவனத்திலேயே தயாரிக்கப்படுகின்றன.


கோவிட்-19 பெருந்தொற்று பரவல் சூழலானது உலகம் முழுவதும் விநியோகச் சங்கிலியை கடுமையாக பாதித்தது. பிரதமர் நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா திட்டத்தின்கீழ் இந்திய தயாரிப்புகள் ஊக்குவிக்கப்படுகின்றன. தயாரிப்புப் பணிகளுக்கு சீனா போன்ற நாடுகளை சார்ந்திருப்பது ஆபத்து என்பதை வணிகங்களை உணர ஆரம்பித்தன.

“இந்தியாவில் சீனாவைக் காட்டிலும் சிறப்பான மூலப்பொருட்களைத் தயாரிக்க முடியும். ஆனால் இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலையானது சில காலம் வரை நீடிக்கும்,” என்று கருதுகிறார் சித்திக்.

உதாரணத்திற்கு பைகள் தயாரிப்பில் பிவிசி முக்கிய மூலப்பொருள். இருப்பினும் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக இவற்றை இந்திய தொழிற்சாலைகளில் தயாரிக்க உரிமம் கிடைப்பதில்லை. இதனால் இவற்றில் 90% சீனாவில் இருந்து பெறப்படுகிறது என்கிறார்.

டி2சி வணிகத்தில் கவனம்

பெருந்தொற்று காலத்திற்கு முன்பு ஆஃப்லைன் ஸ்டோர்கள் மூலமாகவே 70% விற்பனையாகி வந்தது. ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று சமயத்தில் தாராவி கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியது. பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஊழியர்கள் வேலையை விட்டு அனுப்பபட்டனர். மொத்தத்தில் உற்பத்தியும் விற்பனையும் ஸ்தம்பித்தது.

3


வணிகத்தைத் தொடர்ந்து சிறப்பாக நடத்த ஆன்லைன் விற்பனைக்கு மாறுவது சிறந்தது என்பதை சித்திக் உணர்ந்தார். இன்று ஆன்லைன் மூலமாகவே 90 சதவீத விற்பனை நடைபெறுகிறது.


பின்னர் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. மின்வணிக செயல்பாடுகள் மீண்டும் தொடங்கின. இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில் 45 கிடங்குகள் இருப்பதால் சரியான நேரத்தில் டெலிவர் செய்யமுடிந்தது என்கிறார்.


மேலும், இந்நிறுவனம் சூழலுக்கேற்ப மாஸ்க் தயாரிப்பிலும் கவனம் செலுத்தியது.

ஆன்லைன் செயல்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் நிறுவனத்தின் வலைதளத்தை மேம்படுத்தும் பணியில் சித்திக் மும்முரம் காட்டி வருகிறார்.

டி2சி வணிகத்தை விரிவுபடுத்தும் வகையில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களையும் இந்நிறுவனம் பயன்படுத்தி வருகிறது.

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனையில் தயாரிப்புகளின் விலையில் நிலையற்ற தன்மை இருப்பதைத் தவிர்க்க நாடு முழுவதும் ஃப்ரான்சைஸ் மூலம் செயல்படவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


ஆங்கில கட்டுரையாளர்: பவ்யா கௌஷல் | தமிழில்: ஸ்ரீவித்யா