40 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ள மொபைல் ஆக்சசரீஸ் பிராண்ட்!
மொபைல் ஆக்சசரீஸ் பிரிவில் சந்தை வாய்ப்பு இருப்பதை உணர்ந்து 2012-ம் ஆண்டு பங்கஜ் கார்க் நிறுவிய டெய்லிஆப்ஜெக்ட்ஸ் பிராண்ட் சொந்த தயாரிப்பு மற்றும் விற்பனை மூலம் 40 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் தொழில்நுட்பம் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இணைய வசதியும் மலிவு விலையில் இணையத்தைப் பயன்படுத்த டேட்டா வசதியும் மொபைல் பயன்பாட்டை பன்மடங்காக அதிகரிக்கச் செய்துள்ளது.
இந்தியாவில் மில்லியன் கணக்கானோர் மொபைல் பயன்படுத்துகின்றனர். இதனால் மொபைல் சந்தை மட்டுமின்றி மொபைல் ஆக்சசரீஸ் சந்தையும் சிறப்பாக வளர்ச்சியடைந்துள்ளது.
இந்தப் பிரிவின் வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டுள்ளது டெய்லிஆப்ஜெக்ட்ஸ் (DailyObjects) நிறுவனம். இது ஒரு டெக் மற்றும் லைஃப்ஸ்டைல் பிராண்ட்.
டெய்லிஆப்ஜெக்ட்ஸ் ட்ரென்டியான மொபைல் கவர், இயர்ஃபோன் ஹோல்டர் போன்றவை மட்டுமல்லாது பேக், வேலட் போன்ற மற்ற லைஃப்ஸ்டைல் தயாரிப்புகளையும் வழங்குகிறது. டி2சி நிறுவனமான டெய்லிஆப்ஜெக்ட்ஸ் குருகிராமைச் சேர்ந்தது. பங்கஜ் கார்க் இதன் நிறுவனர் மற்றும் சிஇஓ. இவர் 2012-ம் ஆண்டு இந்நிறுவனத்தை நிறுவினார்.
தொடக்கம்
பங்கஜ் ராஜஸ்தானின் அல்வார் பகுதியில் உள்ள முபாரிக்பூரில் வளர்ந்தார். இவருக்கு எப்போதும் தொழில்முனைவில் ஆர்வம் இருந்து வந்தது. வரும் நாட்களில் இணையம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை சரியாகக் கணித்திருந்தார் பங்கஜ்.
ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பிரிவில் இளங்கலை பட்டம் முடித்த பிறகு Patni Computers நிறுவனத்தில் பணிபுரிய மும்பைக்கு மாற்றலானார். Amdocs நிறுவனத்திலும் பணிபுரிந்தார்.
“நீங்கள் பணியாற்றும் நிறுவனம் பெரிதாக இருக்குமானால், உங்கள் பங்களிப்பு குறைவாக இருக்கும்,” என்கிறார் பங்கஜ்.
Patni Computers நிறுவனத்தில் பணியாற்றியபோது அமெரிக்கா செல்லும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்தது. ஆனால் இவருக்கு அதில் விருப்பமில்லை. எனவே வேலையை விட்டுவிட்டார். 2009ம் ஆண்டு இவரது நண்பரின் SalesDekho.com என்கிற ஸ்டார்ட் அப்பில் வேலை செய்தார்.
அகமதாபாத் பகுதியில் தள்ளுபடிகளை வழங்கும் நிறுவனங்களைப் பட்டியலிடும் பணியில் இந்த போர்டல் ஈடுபட்டிருந்தது. அடுத்த இரண்டாண்டுகளில் மொபைல் ஆக்சசரீஸ் பிரிவில் சந்தையில் மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதை உணர்ந்தார்.
“முக்கியத் தயாரிப்பான மொபைல் எளிதாகக் கிடைக்கிறது. ஆனால் சரியான விலையில் தரமான ஆக்சசரீஸ் கிடைக்கவில்லை,” என்கிறார் பங்கஜ்.
ஆக்சசரீஸ் பிரிவில் 65-70 சதவீதம் லாபம் கிடைக்கும் என்பதையும் அவர் அறிந்திருந்தார். 2012ம் ஆண்டு SalesDekho.com வளங்களை DailyObjects நிறுவனத்திற்கு மாற்றினார்.
ஆரம்பத்தில் தனது தளத்தில் மற்ற பிராண்டுகளின் ஆக்சசரீஸ்களையும் விற்பனை செய்தார். இருப்பினும் தனியார் லேபிள் இருக்கவேண்டியதன் அவசியத்தை அவர் விரைவிலேயே உணர்ந்தார். 2014-ம் ஆண்டு பங்கஜ் தனது தளத்தில் இருந்த மற்ற பிராண்டுகளை நீக்கிவிட்டு சொந்த உற்பத்தியையும் விற்பனையையும் தொடங்கினார்.
“சொந்தமாக தொழிற்சாலை அமைப்பதால் தரம், தயாரிப்புச் செலவுகள், விநியோகச் சங்கிலி போன்றவற்றை கட்டுப்படுத்த முடியும்,” என்கிறார் பங்கஜ்.
டெய்லிஆப்ஜெக்ட்ஸ் தயாரிப்புகளில் 70% இதன் சொந்த தொழிற்சாலையிலேயே தயாரிக்கப்படுகிறது. மீதமுள்ளவை இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியா மூலப்பொருட்களான மிகச்சிறந்த சந்தை என்கிறார் பங்கஜ்.
வளர்ச்சி மற்றும் சவால்
வணிக பயணம் சவால் நிறைந்ததாகவே இருந்தது என்கிறார் பங்கஜ். தரத்தில் முழு கவனம் செலுத்தியவாறே வளர்ச்சியடைவது கடினமாக இருந்தது என்கிறார். இந்நிறுவனம் Unilazer Ventures, Seedfund ஆகிய நிறுவனங்களிடமிருந்து நிதி திரட்டியுள்ளது.
இதுதவிர பெருமளவு ஒழுங்குபடுத்தப்படாத இந்தச் சந்தையில் செயல்படுவதும் சவாலாக உள்ளது. இன்றைய டிஜிட்டல் உலகில் தொழில்நுட்ப செயல்பாடுகள் அவசியம் என்பதை வலியுறுத்தியிருக்கிறார் பங்கஜின் நண்பர் ஒருவர்.
2017-ம் ஆண்டு iOS மற்றும் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சொந்த செயலியை அறிமுக்கப்படுத்தியது டெய்லிஆப்ஜெக்ட்ஸ். இந்த செயலி கூகுள் பிளேஸ்டோரில் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக பதிவிறக்கங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் 50 சதவீதம் ஆப்பிள் பயனர்கள். 2020 நிதியாண்டில் 24 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இந்த ஆண்டு 40 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளது.
2023-ம் ஆண்டில் இந்தியாவில் மொபைல் ஆக்சசரீஸ் சந்தை 252.80 பில்லியன் ரூபாயை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் 2025-ம் ஆண்டில் இந்திய பேக் மற்றும் ஆக்சசரி துறை 12 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்துடன் 5.886 பில்லியன் டாலர் சந்தை மதிப்புடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிறுவனத்தின் 35 சதவீத வருவாய் சந்தைப்பகுதிகளில் இருந்தும் 65 சதவீதம் வலைதளம் மூலமாகவும் கிடைப்பதாக பங்கஜ் குறிப்பிடுகிறார்.
“மற்ற சந்தைப்பகுதிகளில் விற்பனை செய்யும்போது அதற்கே உரிய சிக்கல்கள் இருக்கும். 100 சதவீதம் இதை மட்டுமே நம்பி செயல்படமுடியாது,” என்கிறார்.
வருங்காலத் திட்டம்
கோவிட்-19 பெருந்தொற்றால் ஒட்டுமொத்த உலகமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் டெய்லிஆப்ஜெக்ட்ஸ் செயல்பாடுகளும் தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. ஆனால் விரைவில் மீண்டெழுந்தது.
கடந்த சில மாதங்களில் ஹோம் கலெக்ஷன் பிரிவில் விற்பனை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவிக்கிறார். சாதனங்களில் கிருமிநீக்கம் செய்யப் பயன்படுத்தப்படும் யூவி-சி பாக்கெட் ஸ்டெரிலைசர் அறிமுக்கப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஆன்லைன் மாதிரியில் மட்டுமே செயல்பட்டு வரும் இந்நிறுவனம் விரைவில் ஆஃப்லைன் மாதிரியிலும் செயல்பட திட்டமிட்டுள்ளது. தென்னிந்தியாவில் 30 ஆப்பிள் ஸ்டோர்களுடன் இணைந்துள்ளது. உலகளவில் விரிவடைய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக நிதி திரட்டவும் உள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: பவ்யா கௌஷல் | தமிழில்: ஸ்ரீவித்யா