200 சதுர அடியில் துவங்கி இன்று 1 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் பேக்கரி உரிமையாளர்!
மரியம் மொஹ்தீனின் ’பேக்கர்ஸ் ட்ரீட்’ மங்களூருவின் மதர் தெரசா சாலையில் உள்ளது. 90 பேர் அமரக்கூடிய வசதியுடன்கூடிய 2,200 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த ரெஸ்டாராண்டில் 19 பேர் கொண்ட குழு செயல்படுகிறது. தினமும் சுமார் 150 வாடிக்கையாளர்கள் இங்கு வருகை தருகின்றனர்.
கர்நாடகாவின் மங்களூரு அதன் தனித்துவமான கடல் உணவு வகைகளுக்குப் பெயர் போனது. கடல் உணவு வகைகள், கோரி ரொட்டி, நீர் தோசை, மங்களூரு பன், மங்களூரு பஜ்ஜி போன்றவை இந்த நகரில் கட்டாயம் சாப்பிடவேண்டிய உணவு வகைகளாகும்.
இந்த பாரம்பரிய உணவு வகைகள் தொடர்ந்து பிரபலமாக இருப்பினும் இன்றைய தலைமுறையினரின் உணவு விருப்பங்கள் மாறி வருகிறது.
இன்றைய தலைமுறையினர் மேற்கத்திய உணவு வகைகளின் மோகத்தால் பர்கர், பாஸ்தா, பீட்சா, கேக் போன்றவற்றை அதிகம் நாடிச் செல்கின்றனர். 48 வயது மரியம் மொஹ்தீன் இந்த போக்கினை மங்களூருவில் கவனித்தார். தன்னுடைய பேக்கிங் திறமையைக் கொண்டு சொந்த வணிக முயற்சியைத் துவங்க அதுவே சரியான தருணம் என்பதை உணர்ந்தார்.
”நான் துபாயில் பல ஆண்டுகள் நிர்வாகப் பிரிவில் பணிபுரிந்த பிறகு என்னுடைய சொந்த ஊரான மங்களூரு திரும்பினேன். எனக்கு சரியான வாய்ப்பு கிடைக்காத நிலையில் என்னிடம் இருந்த பேக்கிங் திறனைப் பயன்படுத்தி கஃபே துவங்கத் தீர்மானித்தேன்,” என்றார்.
2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 'பேக்கர்ஸ் ட்ரீட்' துவங்கினார். இந்த பேக்கரி வீட்டிலேயே பேக் செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தது. ”அது 200 சதுர அடி கொண்ட சிறிய இடம். அங்குதான் பேக்கிங் செய்து விற்பனை செய்தோம்,” என்று எஸ்எம்பி ஸ்டோரியிடம் மரியம் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “அனைத்தும் சரியான நேரத்தில் சிறப்பாக நடந்தது. மூன்றாண்டுகளில் கிட்டத்தட்ட முழுவீச்சில் செயல்படும் கஃபே உருவானது,” என்றார்.
2017-ம் ஆண்டு மரியம் ஏறக்குறைய 20 லட்ச ரூபாய் முதலீடு செய்து பேக்கர்ஸ் ட்ரீட்டை மங்களூருவில் உணவு வகைகளில் மாறிவரும் விருப்பத்திற்கு ஏற்ப கேக், கப்கேக், பர்கர், பாஸ்தா, மில்க்ஷேக் போன்றவற்றிற்கான ரெஸ்டாரண்டாக மாற்றினார். தனது சொந்த சேமிப்பைக் கொண்டும் குடும்பத்தின் மூலம் கிடைத்த தொகையைக் கொண்டும் முதலீடு செய்தார்.
பேக்கர்ஸ் ட்ரீட் அணுகுமுறை
இன்று மரியமின் வணிகம் மங்களூருவின் மதர் தெரசா சாலையில் 90 பேர் அமரக்கூடிய வசதியுடன்கூடிய 2,200 சதுர அடி பரப்பளவு கொண்ட ரெஸ்டாராண்டாக இயங்குகிறது. 19 பேர் கொண்ட குழுவாக செயல்படுகின்றனர். தினமும் சுமார் 150 வாடிக்கையாளர்கள் இங்கு வருகை தருகின்றனர். மரியமின் ஓரியோ நியூடெல்லா சீஸ்கேக்ஸ், ப்ரௌனீஸ், கப்கேக்ஸ் போன்றவை வாடிக்கையாளர்கள் விரும்பி உண்ணும் உணவுவகைகளாகும்.
”ஓரியோ நட்டெல்லா சீஸ்கேக்ஸ், ஓரியோ ஃபட்ஜ் ப்ரௌனி, கப்கேப் வகைகள் போன்றவை எங்களது பிரபல உணவு வகைகளாகும். உணவகம் எப்போதும் மக்களால் நிரம்பி இருக்கும்,” என்றார்.
கடந்த ஆண்டு அதிகளவிலான வாடிக்கையாளர்களின் வருகையுடன் பேக்கர்ஸ் ட்ரீட் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை செய்துள்ளது.
”வேலையில்லாத திறன் இல்லாத பெண்களை என்னுடைய குழுவில் இணைத்துக்கொண்டேன். அவர்களது பேக்கிங் தொழிலைக் கற்றுக்கொடுத்தேன். அவர்கள் சுயாதீனமாக வருவாய் ஈட்டத் துவங்கியுள்ளனர்,” என்றார் மரியம்.
சந்தையின் தேவைக்கேற்ப விற்பனை செய்வதற்காக பேக்கர்ஸ் ட்ரீட் பரிந்துரை வாயிலாகவும் டிஜிட்டல் மார்கெட்டிங் வாயிலாகவும் செயல்படுகிறது. எனினும் மரியமின் அணுகுமுறை மாறுபட்டது. பேக்கர்ஸ் ட்ரீட் சமூக ஊடக பக்கங்களில் அவ்வப்போதைய தகவல்களையும் புகைப்படங்களையும் பதிவிடுவது தவிர வேறு வகைகளில் அவர் தீவிரமாக விளம்பரப்படுத்துவதில்லை.
சமூக ஊடகங்கள் மங்களூருவில் உள்ள இளைஞர்களைக் கவர உதவியது. இவர்கள் தங்களது அனுபவங்களை ஆன்லைனில் பதிவிட்டனர். இது மேலும் பலரை ஈர்த்தது. அதுமட்டுமின்றி பலர் அடுத்தவர்களுக்கு பரிந்துரைத்தனர். பேக்கர்ஸ் ட்ரீட் உணவகத்தின் உணவு மட்டுமின்றி நவநாகரீகமான, ஈர்க்கும் வகையிலான உட்பகுதி மற்றும் வசதியான சுற்றுச்சூழல் எப்போதும் கூட்டத்தை கவர்ந்தது,” என்றார்.
பேக்கர்ஸ் ட்ரீட் துவங்கிய காலம் முதல் உள்ளூர் சமூகத்தின் அங்கீகாரத்தை பெற்றுள்ளார் மரியம். 2019-ம் ஆண்டு ரெஸ்டாரண்ட் பிரிவில் சிறந்த சிறு நிறுவனத்திற்கான யுவர்ஸ்டோரி பிராண்ட்ஸ் ஆஃப் இந்தியா விருதினை பேக்கர்ஸ் ட்ரீட் வென்றது. மரியம் அதே ஆண்டு Yenfame Women entrepreneur விருதையும் வென்றார். பேக்கர்ஸ் ட்ரீட் பவர் பிசினஸ் எக்சலன்ஸ் சிறந்த ஸ்டார்ட் அப் விருதினையும் வென்றது.
சுயமாக பேக்கிங் கற்றார்
மரியம் தலைமையில் செயல்படும் பேக்கர்ஸ் ட்ரீட் பிராண்ட் மங்களூரு சந்தையில் பலரின் விருப்பத் தேர்வாக உருவாகியுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த வாடிக்கையாளர் மட்டுமல்லாது அருகாமையில் உள்ள நகரங்களில் இருந்தும் தொடர்ந்து ஆர்டர்கள் வந்து கொண்டிருப்பதாக மரியம் தெரிவிக்கிறார்.
”சில நாட்களில் அமெரிக்கா, துபாய் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் வருகை தந்து தங்களுக்குப் பிடித்தமான கேக் வகைகளை ஆர்டர் செய்கின்றனர். மாறிவரும் போக்கிற்கு ஏற்ப நாங்கள் உணவு வகைகளை வழங்குவதும் தனித்தேவைக்கேற்ற கேக் வகைகளை வழங்கி தனித்துவமாக செயல்படுவதுமே இதற்குக் காரணம் என்று கருதுகிறேன்,” என்றார்.
அனைத்து வகையான சிறப்பு தினங்களுக்காகவும் பேக்கர்ஸ் ட்ரீட் தயாரிக்கும் தனித்தேவைக்கேற்ற கேக் வகைகள் வாடிக்கையாளர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது என்கிறார்.
”ஒரு கிலோ கேக்கின் விலை சுமார் 1,000 ரூபாய். ஆனால் நாங்கள் தனித்தேவைக்கேற்றவாறு வழங்கும் விதமே எங்களை வேறுபடுத்திக் காட்டுகிறது. நாங்கள் முழுமையாக வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்றவாறே செயல்படுகிறோம்,” என்றார்.
மரியம் பேக்கிங் குறித்து சுயமாகவே கற்றுக்கொண்டுள்ளார். 2013-ம் ஆண்டு முதல் 600க்கும் மேற்பட்டோருக்கு சமையல் வகுப்புகள் எடுக்கிறார். அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து இலவச வகுப்புகளும் எடுத்துள்ளார். விற்பனையின் மூலம் வரும் லாபத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
”பேக்கர்ஸ் ட்ரீட் சமையலறையில் தயாரிக்கப்படும் எந்த ஒரு உணவு வகையையும் நியாயமான முறையில் தயாரிக்கப்படுவதால் இந்த வணிகம் நம்பகத்தன்மையை பெற்றுள்ளது. இதுவே வாடிக்கையாளர்கள் மத்தியிலும் சமூகத்திலும் பேக்கர்ஸ் ட்ரீட் ஏற்படுத்தியுள்ள தாக்கத்திற்கு சான்றாகும்,” என்றார்.
மரியம் சுயமாக கற்றுக்கொண்டவர் என்பதால் அவரது தகுதி குறித்த பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார். ஒருவர் சுய முயற்சியில் சாதனை படைக்கும்போது மற்றவர்கள் அதைப் பாராட்டுவதில்லை என்கிறார் மரியம்.
”ஒரு தனிநபரின் நம்பகத்தன்மையையும் தகுதியையும் தீர்மானிக்க மக்கள் சான்றிதழ்களை கேட்கின்றனர். ஒரு தொழில்முனைவராக என்னுடைய வளர்ச்சி தற்போது நடைமுறையில் உள்ள முறைகளைச் சார்ந்ததல்ல. எனினும் சந்தையில் மென்மேலும் வளர்ச்சியடைவதிலும் தொழிலாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதிலும் தொடர்ந்து சவால்கள் இருக்கும்,” என்றார்.
அடுத்தகட்ட திட்டம்
மங்களூருவில் இன்றைய தலைமுறையினர் இருப்பினும் புதிய விஷயங்களுக்கு இந்தப் பகுதி பொதுவாக பழக்கப்படவில்லை என்கிறார் மரியம். அவரைப் பொறுத்தவரை வளர்ச்சியடைய அதிக வாடிக்கையாளர்களைச் சென்றடைவது ஆபத்தாகவே கருதப்படுவதால் சற்று நிதானமாக செயல்படவே விரும்புகிறார்.
”தற்சமயம் பல்வேறு விஷயங்களில் ஈடுபட விரும்பவில்லை. மங்களூருவிற்கு வெளியே இருந்து வருபவர்கள் விரைவாகவே பேக்கர்ஸ் ட்ரீட்டை ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே தற்போது விரிவடையும் எண்ணம் இல்லை,” என்றார்.
விரிவடையும் திட்டம் இருப்பினும் அவற்றை பின்னர் திட்டமிட உள்ளார் மரியம். தற்போது அருகாமையில் இருக்கும் மணிப்பால் பகுதியை இலக்காகக் கொண்டுள்ளார். பெங்களூரு போன்ற மெட்ரோ நகரங்களில் செயல்படுவதற்கு அவர் முன்னுரிமை அளிக்கவில்லை.
”பல்வேறு நகரங்களில் பேக்கர்ஸ் ட்ரீட் செயல்படவேண்டும் என்பது நீண்ட கால அடிப்படையிலான கனவு. தற்போது இங்குள்ள செயல்பாடுகளில் கவனம் செலுத்துகிறேன். புதிய இயந்திரங்களிலும் பல்வேறு உணவு வகைகளிலும் தொடர்ந்து முதலீடு செய்யவேண்டியுள்ளது. தற்போதைய நிலையை நினைத்து நான் நிறைவடைகிறேன்,” என்றார்.
முழு கவனத்துடன் ஒரு விஷயத்தை கையிலெடுத்து முறையாக திட்டமிட்டு சிறப்பாக செயல்படவேண்டும் என்பதே வணிகம் தொடர்பான அவரது மந்திரம் ஆகும்.
“ஒவ்வொரு நாளும் புதிது என்பதால் சவால்களை ஏற்றுக்கொள்ளவேண்டும். அன்றாட அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளவும் அவற்றிலிருந்து வாழ்க்கைப் பாடங்களைப் பெறவும் திறந்த மனதுடன் தயாராக இருக்கவேண்டும்,” என்றார்.
ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: ஸ்ரீவித்யா