இ-சிகரெட் உற்பத்தி மற்றும் இறக்குமதிக்கு தடை: மத்திய அரசு அறிவிப்பு!
மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் இ-சிகரெட்களுக்கு தடைவிதிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இ-சிக்ரெட் எனப்படும் எலக்ட்ரானிக் சிகரெட்களை தயாரிப்பது, இறக்குமதி செய்வது, விநியோகிப்பது மற்றும் விற்பனை செய்வதை தடை செய்யும் மற்றும் இதை மீறுபவர்களுக்கு சிறை தண்டனை அளிக்க வழி செய்யும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
முதல் முறை இந்தத் தடையை மீறுபவர்கள் ஒராண்டு வரை சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். தொடர்ந்து தவறு செய்தால், மூன்று ஆண்டு வரை சிறை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
இந்த விவகாரம் தொடர்பான அமைச்சர்கள் குழு கூட்டத்திற்கு தலைமை வகித்த நிர்மலா சீதாராமன், மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்கள் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் இ-சிகரெட் போன்ற பொருட்களுக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
புகையிலையை விட இ-சிகரெட்கள் தீங்கு குறைந்தவையா எனும் விவாதம் இந்த விஷயத்தில் பயனற்றது என்று மத்திய சுகாதார செயலர் பிரித்தி சூடன் தெரிவித்தார்.
“ இது அதிக தீங்கானாதா, குறைவான தீங்கானதா எனும் விவாதம் எதற்கு? இதை தடை செய்வது நல்லது,” என அவர் கூறினார்.
இது ஒரு தடுப்பு நடவடிக்கை, மருத்துவ விஷயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையே ஏற்றது என்று மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் தெரிவித்தார்.
குடியரசுத்தலைவர் அனுமதி அளித்ததும் இந்த அவசரச் சட்டம் அமலுக்கு வரும். நாடாளுமன்றத்தில் அடுத்த கூட்டத்தில் இது மசோதாவாக தாக்கல் செய்யப்படும். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இந்தியாவில் இல்லை என்பதால் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இ-சிகரெட்கள் விற்பனைக்குத் தடை விதிக்கப்படும் முடிவை அடுத்து சிகரெட் பங்குகள் 5.5 சதவீதம் உயர்ந்தன.
மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, இ-சிகரெட் போன்ற பொருட்களின் ஆன்லைன் விற்பனை, தயாரிப்பு, வர்த்தகம், இறக்குமதி அல்லது விளம்பரத்தை அனுமதிக்கக் கூடாது என மாநில மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் கடிதம் எழுதியது.
செய்தி: பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்