Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

அதிகம் அறியப்படாத 8 சுதந்திரப் போராட்ட வீர மங்கைகள்...

இந்திய சுதந்திர போராட்டத்தில் துணிச்சலாக பங்கேற்ற அதிகம் அறியப்படாத 8 வீரப்பெண்கள் யார் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

அதிகம் அறியப்படாத 8 சுதந்திரப் போராட்ட வீர மங்கைகள்...

Thursday August 15, 2019 , 5 min Read

இந்திய நாடு 74வது ஆண்டாக சுதந்திரக் காற்றை சுவாசித்த தினத்தை கோலாகலமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்திய சுதந்திர வரலாற்றுப் பக்கங்களை தங்களது செங்குருதியால் எழுதிவிட்டுச் சென்றுள்ளனர் போராட்ட வீரர்கள். அந்த பொக்கிஷமான வரலாற்றுப் பக்கத்தில் இருந்து சுதந்திரப் போராளிகளின் பங்களிப்பை தோண்டி எடுத்து வந்துள்ளோம். தன்மானத்திற்காக மனம் தளராமல் மரண ஆபத்திலும் சுதந்திரப் போராட்டத்தில் துணிச்சல் மிக்க பெண்களாக இருந்துள்ளனர் அந்த வீரமங்கையர்.


காலனித்துவ இந்தியாவில் பெண்களின் கோபத்தின் வெளிப்பாடு 19ம் நூற்றாண்டில் சமூக சீர்திருத்த காலத்திலிருந்து வந்தவை என்பதைக் காட்டுகிறது. சுதந்திர போராட்டங்கள் பெரும்பாலும் ஆண்களால் தொடங்கப்பட்டாலும், பாலின பாகுபாடு பற்றிய ஆர்வமுள்ள விவாதத்தை பெண்கள் மேற்கொண்டனர். அந்த காலகட்டத்தில் பெண்களால் தொடங்கப்பட்ட இயக்கங்கள் பூமிக்கு அடியில் புதைந்து கிடப்பதைப் போல இருந்தாலும் 1920களில் பெண்கள் தங்களின் சக்தியை ஒன்றுதிரட்டி மாபெரும் இயக்கமாக உருவாக்கத் தொடங்கினர். பல சுதந்திரப் போராட்டங்களில் பெண்கள் தீவிர ஈடுபாட்டுடன் பங்கேற்றனர்.


நீங்கள் இதுவரை கேள்விப்படாத பெண் சுதந்திர போராளிகளின் பட்டியல் இங்கே.


பரபதி கிரி

வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு மகாத்மா காந்தி அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, பரபதி கிரி தனது 16வது வயதில், மேற்கு ஒடிசா பிராந்தியத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். காலனித்துவ எதிர்ப்பு நடவடிக்கைகளில் பங்கேற்றதால் இரண்டு ஆண்டுகள் இவர் சிறையில் அடைக்கப்பட்டார். தாய்நாட்டின் மீது இருந்த அளவு கடந்த தேசப்பற்றால் 10 வயதில் பள்ளி படிப்பை உதறிவிட்டு இந்திய தேசிய காங்கிரசுக்கு பிரச்சாரம் செய்யத் தொடங்கினார் பரபதி.


ஒடிசாவில் உள்ள கிராமங்கள் முழுவதும் பயணம் செய்து, காங்கிரஸ் மற்றும் காந்தியின் புகழை பரப்பினார். ‘மேற்கு ஒடிசாவின் அன்னை தெரசா’ என்று அழைக்கப்பட்ட பரபதி கிரி ஒரு ஆதரவற்றோர் இல்லத்தைத் தொடங்கி ஆதரவின்றி தவித்தோருக்கு தொண்டு செய்வதற்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

பரபதி கிரி

பரபதி கிரி(நடுவில் இருப்பவர்) | படஉதவி : ப்ளிக்கர்

மாதங்கினி ஹஸ்ரா

‘துப்பாக்கியைக் காட்டினாலே மிரண்டு போவார்கள் பலர். ஆனால் போலீசார் 3 முறை துப்பாக்கியால் சுட்ட குண்டு நெற்றியிலும், 2 கைகளிலும் துளைத்த போதும் மனம் தளராமல் மூவர்ணக் கொடியை கையில் ஏந்திய படி தன்னார்வலர்களைக் கடந்து சுதந்திரப் போராட்ட அணிவகுப்பில் முன்னேறிச் சென்று கொண்டிருந்தார்’. வங்கத்தின் தம்லுக்கில் 1942ம்ஆண்டு பிப்லபி செய்தித்தாள் இப்படி ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. இந்த செய்தியோடு தொடர்புடையவர் மாதங்கினி ஹஸ்ரா.


வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது தம்லுக் காவல் நிலையத்தை கையகப்படுத்த திட்டமிட்டிருந்த மாதாங்கினியை நோக்கி பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போதும் வந்தே மாதரம் கோஷமிட்டுக் கொண்டே இருந்தார். தனது கடைசி மூச்சு வரை மூவர்ணக் கொடியை நிலத்தில் சரிய விடாமல் வான் நோக்கி நிமிர்ந்து நிற்க வைத்திருந்தார். ஒரு ஏழை விவசாயியின் மகளான மாதங்கினி காந்தியவாதி. 1905ல் சுதந்திரப் போராட்டத்தில் இணைந்தவர் ஒத்துழையாமை இயக்கம் மற்றும் உப்புச் சட்டத்தை மீறியதற்காக கைது செய்யப்பட்டவர்.

மாதங்கினி

படஉதவி : மிட்நாபோர்

கமலாதேவி சட்டோபாத்யாய்

1930களில் பிரிட்டிஷ் சட்டத்திற்கு விரோதமாக உப்பு பாக்கெட்டுகளை மும்பை பங்குச் சந்தையில் விற்க நுழைந்ததற்காக ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்ட முதல் பெண்மணி கமலாதேவி சட்டோபாத்யாய். அவர் கிட்டத்தட்ட ஒரு வருடம் சிறையில் அடைக்கப்பட்டார். காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர் 1923ல் சுதந்திரப் போராட்டத்தில் இணைந்தார். இந்தியாவில் சட்டமன்றத் தொகுதிக்கு போட்டியிட்ட முதல் பெண்மணியும் கமலாதேவி தான்.


மெட்ராஸ் மாகாண சட்டமன்றத்தில் போட்டியிட்டவர் வெறும் 55 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார். பெண்கள் உரிமைகளுக்காகப் பணியாற்றத் தொடங்கிய இந்த துணிச்சல்காரப் பெண் 1927ல் அகில இந்திய மகளிர் மாநாட்டை (AIWC) நடத்தினார். இந்திய தேசிய கைவினைப் பொருட்கள், கைத்தறி மற்றும் சுதந்திர இந்தியாவில் காட்சி அரங்கங்கள் என்று மறுமலர்ச்சிக்கு பின்னால் ஒரு உந்து சக்தியாக விளங்கினார். ஸ்கூல் ஆஃப் டிராமா மற்றும் இந்திய கைவினைக் கவுன்சிலின் முதல் தலைவராகவும் கமலாதேவி இருந்துள்ளார்.

கமலாதேவி

படஉதவி : ஓபன் மேகசின்

தாரா ராணி ஸ்ரீவத்ஸவா

பீகாரில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த தாரா ராணி, சுதந்திரப் போராட்ட வீரராக இருந்த புலேண்டு பாபுவை மணந்தார். காலனித்துவ ஆட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்ட ஊர்வலங்களில் அவர் தனது கிராமங்களைச் சுற்றியுள்ள பெண்களை ஒழுங்கமைத்து, தனது கணவருடன் அணிவகுத்துச் சென்றார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது சிவான் காவல் நிலையத்தின் கூரையில் இந்தியக் கொடியை அவிழ்க்கத் திட்டமிட்டார் புலேண்டு. எதிர்ப்பு அமைதியாக நடந்துகொண்டிருந்தபோது, காவல்துறையினர் மூவர்ணக் கொடியை ஏற்றுவதைத் தடுக்க முயன்றனர்.


போராட்டத்தை சீர்குலைக்க தடியடி நடத்தியதோடு போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாதபோது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். புலேண்டு சுடப்பட்டு காயமடைந்தார், ஆனால் மனம் தளராத தாரா ராணி மூவர்ணக் கொடியை காவல் நிலையத்தில் ஏற்றும் முனைப்போடு தொடர்ந்து போராட்டத்தை தலைமை தாங்கி முன் எடுத்துச் சென்றார். போராட்டத்தின் முடிவில் தான் புலேண்டு துப்பாக்கிச் சூட்டில் வீரமரணமடைந்தார் என்பது தாரா ராணிக்கு தெரிய வந்தது. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கும் வரை காலனித்துவ ஆட்சிக்கு எதிராக தாரா தொடர்ந்து போராடினார்.

தாரா ராணி

தாரா ராணி ஸ்ரீவத்ஸவா ( நடுவில் இருப்பவர்) | படஉதவி : தேஷிநேமா

போகேஸ்வரி புகநாநி

'60 வயதான தியாகி 'என்று அழைக்கப்பட்டவர் போகேஸ்வரி. பர்ஹாம்பூரில் இந்திய தேசிய காங்கிரசை கைப்பற்ற முயற்சிக்கிறார் என்று கேப்டன் பினிஷ் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்தார். தனது பேத்தி ரத்னமாலாவுடன் போராடிக் கொண்டிருந்த போது கேப்டன் பினிஷ் ரத்னமாலாவைத் தாக்கி தேசியக் கொடியை அப்புறப்படுத்திய போது, போகேஸ்வரி கொடியின் கம்பத்தால் கேப்டனை தலையில் அடித்தார். பதிலுக்கு கேப்டன் போகேஸ்வரியை துப்பாக்கியால் சுட்டார்.


போகேஸ்வரி பல்வேறு பெண்கள் சார்ந்த அமைப்புகள் மற்றும் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு எதிராக பெரிய அளவிலான கிளர்ச்சிகளையும் போராட்டங்களையும் முன் நின்று வழிநடத்தினார். 1885ல் அசாமின் நாகோவன் மாவட்டத்தில் உள்ள பர்ஹாம்பூரில் பிறந்த போகேஸ்வரி இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். அவருக்கு ஆறு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் இருந்தனர், அவர்கள் அனைவரையும் சுதந்திரப் போராட்டத்தில் தன்னுடன் சேர வைத்த வீரத்தாய் இவர்.

போகேஸ்வரி

படஉதவி : கேஎச் பஸ்

கனக்லதா பருவா

புரட்சியாளர்களான மிருத்யு பாஹினி குழுவின் உறுப்பினரான கனக்லதா பருவா, 1942ம் ஆண்டில் வெளியேறு இந்தியா இயக்கத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அவருக்கு வயது 17. கனக்லதா ஆயுதங்கள் ஏதுமின்றி கிராமவாசிகள் குழுவை வழிநடத்தி, அசாமில் உள்ள ஒரு உள்ளூர் காவல் நிலையம் அருகே தேசியக் கொடியை ஏற்ற முடிவு செய்தார். அவர்கள் தங்கள் திட்டத்துடன் முன்னேறக்கூடாது என்ற காவல்துறையின் உத்தரவை மீறி, கனக்லதாவின் குழு முன்னோக்கி சென்று அதை நிறைவேற்றியது.


இந்த போராட்டத்தின் போது கனக்லதா சுடப்பட்டார், அவருடன் இருந்த போராளி முகுந்தா ககோட்டியும் வீரமரணம் அடைந்தார். பிரபாலா என்றும் அழைக்கப்படும் கனக்லதா, அசாமில் உள்ள போரங்காபரி கிராமத்தில் பிறந்தார். அவர் ஐந்து வயதில் தாயையும், 13 வயதில் தந்தையையும் இழந்தார். தனது உடன்பிறப்புகளை கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்காக மூன்றாம் வகுப்புக்குப் பிறகு படிப்பிற்கு முழுக்கு போட்டார்.

கனக்லதா

படஉதவி : ஃபுட்பிரிண்ட்

துர்காபாய் தேஷ்முக்

ஒரு முக்கிய சுதந்திர போராட்ட வீரர் என்பதைத் தாண்டி, துர்காபாய் தேஷ்முக் ஒரு அரசியல்வாதி, சமூக சேவகர், வழக்கறிஞர் மற்றும் இந்திய அரசியலமைப்பு சபை மற்றும் திட்ட ஆணையத்தின் உறுப்பினராகவும் இருந்தவர். துர்காபாய் சி.டி. தேஷ்முக் என்பவரை மணந்தார் . தேஷ்முக் 1950 மற்றும் 1956 காலகட்டத்தில் மத்திய அமைச்சரவையில் நிதி அமைச்சராக பணியாற்றியவர், மேலும் ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) முதல் இந்திய வம்சாவளி ஆளுநராகவும் இருந்தார். 1923ம் ஆண்டில் ஐ.என்.சி ஒரு மாநாட்டை நடத்தியபோது, துர்காபாய் மண்டபத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டார், ஜவஹர்லால் நேரு மாநாட்டிற்கு வந்த போது அவரிடம் நுழைவுச் சீட்டு இல்லாததால் நிறுத்தி வைத்த துர்காபாய் அமைப்பாளர்கள் நேருவிற்கான அழைப்புச் சீட்டை கொடுக்கும் வரை அவரை உள்ளே அனுமதிக்கவில்லை.


துர்காபாயின் இந்த நேர்மை குணத்தை ஜவஹர்லால் நேரு வியந்து பாராட்டினார். தீவிர காந்தி ஆதரவாளராக இருந்த துர்காபாய் 1930 மற்றும் 1933 க்கு இடைபட்ட காலத்தில் பல சிறைவாசங்களை அனுபவித்துள்ளார். பெண்கள் சத்தியாக்கிரக (சட்ட ஒத்துழையாமை) இயக்கங்களை துர்காபாய் நடத்தியுள்ளார். சிறைவாசங்களுக்குப் பிறகு விடுதலையான துர்காபாய் ஆந்திர பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் பெற்றார். 1942ல் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பிற்கான பட்டம் பெற்றார்.

துர்காபாய்

படஉதவி : தி இந்து


ராஜ்குமாரி குப்தா

ராஜ்குமாரி

படஉதவி : 99ஃப்ரீநேஷன்

சமூக சீர்திருத்தவாதியும் காந்தியின் ஆதரவாளருமான ராஜ் குமாரி குப்தா மத்திய அமைச்சரவை அமைச்சரான முதல் இந்திய பெண்மணி. 1919ம் ஆண்டு பஞ்சாபில் நடந்த ஜாலியன்வாலா பாக் படுகொலை சுதந்திரப் போராட்டத்தில் ராஜ்குமாரி குப்தா இணைய காரணமாக அமைந்தது. பிறப்பால் ஒரு இளவரசியான ராஜ் குமாரி குப்தா சுதந்திரத்திற்குப் பின்பு தனி மாநிலமாக இருந்த கபுர்தலாவை ஆண்ட ஒரு அரச குடும்பத்தில் பிறந்தவர்.


ராஜ் குமாரி உடல்நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தார். அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) அமைப்பதற்கான முக்கிய முடிவும் ராஜ்குமாரி மத்திய அமைச்சராக இருந்த போது எடுக்கப்பட்ட முடிவே.


கட்டுரை தமிழில் : கஜலட்சுமி