ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ்: தூங்குவதற்காக விடுமுறை கொடுத்த பெங்களூரு ஸ்டார்ட் அப் நிறுவனம்!
2023-ம் ஆண்டின் ‘சர்வதேச தூக்க தினம்’ அன்று தங்களது ஊழியர்கள் நன்றாகத் தூங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதற்காக பெங்களூரு ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று ஒருநாள் விடுமுறை அளித்து இணையத்தில் டிரெண்டிங் ஆனது.
மனிதர்கள், விலங்குகள், பறவைகள்... அட செடி, கொடிகள்கூட குறிப்பிட்ட நேரம் தூங்குவது நல்லது என்பதுதான் நமது வாழ்வியல் அமைப்பு. ஆனால், ஐந்தறிவு கொண்ட உயிரினங்கள் எல்லாம் தங்களது தூக்க விதியை அப்படியே கொண்டிருக்க, வழக்கம்போல் பகுத்தறியும் ஆறாம் அறிவையும் கூடுதலாகக் கொண்ட மனிதர்கள் மட்டும் தங்களது பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப தூங்கும் நேரத்தை, அளவை மாற்றிக் கொண்டுள்ளனர். இதனாலேயே மன மற்றும் உடல் சார்ந்த பல பிரச்சினைகளுக்கு அவர்கள் ஆளாக வேண்டி இருக்கிறது.
இப்போதெல்லாம் எந்தப் பிரச்சினைக்காக மருத்துவரிடம் சென்றாலும், அவர் முதலில் கேட்பது, ‘நைட்டு நல்லா தூங்குறீங்களா’ என்பதுதான். அந்தளவிற்கு மனிதர்களின் தூங்கும் நேரம் மாறி வருகிறது. இதற்கு மொபைல் போன், வேலை என ஆயிரத்தெட்டு காரணங்கள் சொன்னாலும், எதற்காகவும் தூக்கத்தை விட்டுக் கொடுத்து நீங்களாக நோய்களை வாங்கிக் கொள்ளாதீர்கள் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் சர்வதேச தூக்க தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
மார்ச் மாதம் முழுமையான இரண்டாம் வாரத்தில் வரும் வெள்ளிக்கிழமை சர்வதேச தூக்க தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான தூக்க தினம் மார்ச் 17-ல் கொண்டாடப்பட்டது.
வழக்கம் போலவே, தூக்க தினம் பற்றிய ஹேஷ்டேக்குகள் இணையத்தில் டிரெண்டிங் ஆக, கூடவே பெங்களூருவை தளமாகக் கொண்ட வேக் ஃபிட் சொல்யூஷன்ஸ் (Wakefit) நிறுவனம் அறிவித்த அதிரடி அறிவிப்பும் பேசுபொருளானது.
அதாவது, ஃபர்னிச்சர் மற்றும் மெத்தைகளை விற்பனை செய்து வரும் இந்த நிறுவனம் தன் ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் மெயில் ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், `சர்வதேச தூக்க தினத்தை மார்ச் 17 வெள்ளிக்கிழமை அன்று, வேக்ஃபிட் கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறது.
21 சதவீதம் பேர் வேலை நேரத்தில் தூக்கம் வருவதை உணர்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2022 முதல் 11 சதவீதம் மக்கள் சோர்வாகவே காலையில் எழுகிறார்கள். தூக்கத்தால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை கருத்தில்கொண்டு தூங்குவதற்காக விடுமுறை கொடுக்காமல் தூக்க தினத்திற்கு வேறு என்ன பரிசு கொடுத்துவிட முடியும்?!
எனவே, இந்த நாளை, ஊழியர்கள் விருப்ப விடுமுறையாக எடுத்துக் கொள்ளலாம். தூக்க ஆர்வலராகச் செயல்பட்டு வரும் நாம், தூக்க தினத்தை விழாவாகக் கொண்டாட வேண்டும். முக்கியமாக இந்த தினம் வெள்ளிக்கிழமையில் வந்தாலும் கொண்டாட வேண்டும். மற்ற விடுமுறைகளைப் போல, இந்த விடுமுறையையும் நீங்கள் ஹெச்ஆர் போர்ட்டலில் பெறலாம்’ என அந்த மெயிலில் வேக் ஃபிட் தெரிவித்திருந்தது.
பல நிறுவனங்களில் இப்போதெல்லாம் கேட்டாலும் விடுமுறை கிடைப்பதில்லை. அதிலும் குறிப்பாக திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை கிடைப்பது என்பது குதிரைக் கொம்புதான். அப்படி இருக்கையில் திடீரென தங்கள் நிறுவனமே இப்படி, ‘லீவு எடுத்துக்கோங்கப்பா...’ என மெயில் அனுப்பி இருந்ததைப் பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தனர் வேக் ஃபிட் நிறுவன ஊழியர்கள்.
தங்களது சந்தோஷத்தை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளும் வகையில், வேக் ஃபிட் ஊழியர்கள் பலரும் இந்த மெயிலை தங்களுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தனர். இந்த மெயிலைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுப் போன நெட்டிசன்கள், வேக் ஃபிட் நிறுவனத்தின் அறிவிப்பிற்கு பாராட்டுகளோடு, தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தனர்.
அதனால்தான், தூக்க தினத்தோடு சேர்ந்து வேக் ஃபிட் நிறுவனமும் சமூக வலைதளப் பக்கங்களில் பேசுபொருளாக இருந்தது.
வேக் ஃபிட் நிறுவனம் இப்படி அதிரடி அறிவிப்புகளை வெளியிடுவது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே கடந்த வருடம் வேக் ஃபிட் நிறுவனம், ‘ரைட் டு நாப்’ என்ற கொள்கையை அறிவித்து ஆச்சர்யப்படுத்தியது.
இது தொடர்பாக அந்நிறுவனத்தின் துணை நிறுவனரான சைதன்யா ராமலிங்ககவுடா அப்போது வெளியிட்ட அறிவிப்பில், ‘தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, மதியம் 2 - 2.30 மணி வரை குட்டித் தூக்கம் தூங்க அனுமதி அளிப்பதாக’ கூறியிருந்தார்.
மேலும், ‘நாசா மற்றும் ஹார்வர்டின் ஆய்வுகளைச் சுட்டிக்காட்டி மதிய வேளையில் சிறிது நேரம் ஓய்வெடுப்பது, உடலை ரீசார்ஜ் செய்துகொள்ள உதவுவதோடு, வேலையில் கவனம் செலுத்தவும், வேலையில் சுணக்கமின்றி செயல்பட ஒரு உந்துதலை ஏற்படுத்தும். இந்நிறுவனம் இதை துவக்கியதன் மூலம் மற்ற நிறுவனங்களும் தூக்கத்திற்கு விடுமுறை கொடுப்பதை பின்பற்றும் என்றும், அதனாலேயே இந்த தூக்கப் புரட்சிக்கு வித்திட்டுள்ளதாகவும்’ அந்நிறுவனம் அப்போது தெரிவித்திருந்தது.
இதுதவிர ஆண்டுதோறும் ஸ்லீப் இன்டர்ஷிப் (sleep intership) என்ற பெயரில் தூங்குவதற்கு போட்டி ஒன்றையும் நடத்தி, அதில் வெற்றிப் பெறுபவர்களுக்கு லட்சக்கணக்கில் பரிசுத்தொகையும் வேக் ஃபிட் அளித்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.