தொடர்பற்ற தண்ணீர் குழாய் உருவாக்கிய பெங்களூரு மாணவன்!
பெங்களூருவில் 8ம் வகுப்பு படிக்கும் கோவர்தன் என்கிற மாணவன் ஊரடங்கு சமயத்தில் தனது நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட்டு இணையம் மூலம் கற்றுக்கொண்டு புதுமையாக உருவாக்கியுள்ளார்.
நெருக்கடியான சூழலே புதுமைகளுக்கு வழிவகுக்கிறது. கொரோனா வைரஸுடன் நாம் வாழ பழகி வரும் சூழலில் தொழில்நுட்பம் இந்த மாறுபட்ட வாழ்க்கைக்கு பேருதவியாக இருக்கிறது.
உலக சுகாதார நிறுவனமும் இந்திய அரசாங்கமும் சுகாதாரமான வாழ்க்கைமுறையை மக்கள் கடைப்பிடிக்க ஊக்குவிக்கிறது. அடிக்கடி கைகளை சோப்பு போட்டு சுத்தம் செய்வதை வழக்கமாக்கிக்கொள்ள தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. எனினும் ஒருவர் தொட்டு பயன்படுத்திய குழாயை அடுத்தவர் தொட்டு கைகளை சுத்தம் செய்யும்போது தொற்று ஏற்படக்கூடும்.
கைகளைச் சுத்தம் செய்யும்போது தொற்று ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவும் வகையில் மாணவர் ஒருவர் புதிய கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளார். பெங்களூரு கிழக்கு பகுதியில் உள்ள சன்னசந்திரா அரசு உயர் தொடக்கப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் கோவர்தன் என்கிற மாணவன் Tippy Tap என்கிற தொடர்பற்ற தண்ணீர் குழாயை உருவாக்கியுள்ளார். இணையத்தில் பார்த்தபோது இதை உருவாக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதாக அவர் தெரிவிக்கிறார்.
இதில் தண்ணீர் குழாயைத் தொடாமல் கால்களால் பெடல் செய்து சானிடைசரைப் பெறலாம்.
“கோவிட்-19 பரவும் இன்றைய சூழலில் எதையும் தொடாமல் இருப்பதே பாதுகாப்பானது. எனவே இது பற்றி யோசித்தேன். பெடல் மூலம் இயங்கும் Tippy Tap பற்றி படித்தேன். அதைப் பார்த்தபோது தயாரிப்பது எளிது என்றே தோன்றியது. எனவே என் அப்பாவின் உதவியுடன் இதை உருவாக்கினேன்,” என்று கோவர்தன் சோஷியல்ஸ்டோரி-இடம் தெரிவித்தார்.
அக்ஷய பாத்ரா ஃபவுண்டேஷனில் உள்ள தனது ஆலோசகர் ஊரடங்கு சமயத்தில் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள ஊக்குவித்ததாக கோவர்தன் தெரிவிக்கிறார். இதன் காரணமாகவே இந்த புதிய கண்டுபிடிப்பு உருவாகியுள்ளது. இவரது அப்பா கிருஷ்ணப்பா சலவை செய்யும் கடை வைத்துள்ளார். இவரது அம்மா கலாவதி இல்லத்தரசி.
இதைத் தயாரிக்க ஒரு ரூபாய்கூட செலவு செய்யவில்லை என்கிறார் கோவர்தன். எண்ணெய் கேன், சில தீக்குச்சிகள் என வீட்டில் எளிதாகக் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு இதைத் தயாரித்துள்ளதாகத் தெரிவிக்கிறார்.
வானியல் நிபுணர் ஆகவேண்டும் என்பதே கோவர்தனின் கனவு.
“நான் வானியல் நிபுணர் ஆக விரும்புகிறேன். நாசாவுடன் பணியாற்றி விண்கலங்களை உருவாக்கவேண்டும். விண்வெளியில் சுவாரஸ்யான விஷயங்களைக் கண்டுபிடிக்க விரும்புகிறேன்,” என்றார்.
கட்டுரை: THINK CHANGE INDIA