தொடர்பற்ற தானியங்கி அழைப்பு மணி வடிவமைத்துள்ள டெல்லி மாணவர்!
வைரஸ் தொற்று பரவாமல் இருக்க, மனிதக் கரங்கள் படாமல் செயல்படக்கூடிய தானியங்கி டோர் பெல் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக உலக சுகாதார நிறுவனம், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் என பலரும் ஒன்றிணைந்து போராடி வருகின்றனர்.
இதுதவிர பல்வேறு தனிநபர்கள், ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்கள், கார்ப்பரேட்கள், ஸ்டார்ட் அப்'கள் என பலரும் இன்றைய நெருக்கடியான சூழலை எதிர்கொள்ள உதவும் பல்வேறு கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரிசோதனைகள் தொடர்பாகவும் தடுப்பூசி கண்டுபிடிப்பது தொடர்பாகவும் பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியைச் சேர்ந்த இளம் அறிவியலாளர் ஒருவர் புதுமையான ஒரு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மனிதக் கரங்கள் படாமல் செயல்படக்கூடிய அழைப்புமணியை (Door bell) இவர் உருவாக்கியுள்ளார்.
பொதுவாக இந்த வைரஸ் தொற்று பல்வேறு மேற்பரப்புகளில் பல மணி நேரம் வரையிலும் உயிர்வாழக் கூடியது. எனவே நோய்தொற்று பாதித்த ஒருவர் தொடக்கூடிய கதவின் கைப்பிடி, ஸ்விட்ச் போன்ற இடங்களை மற்றவர்கள் தொடும்போது அவர்களுக்கும் வைரஸ் கிருமி பாதிப்பு ஏற்படக்கூடும். ஏனெனில் இந்தப் பகுதிகள் பொதுவாக அடிக்கடி சுத்தப்படுத்தப்படுவதில்லை.
டெல்லியின் மாடர்ன் பப்ளிக் பள்ளியில் பதினோறாம் வகுப்பு படிக்கும் மாணவன் சர்தாக் ஜெயின். இவர் மனிதத் தொடர்பு அவசியமில்லாமல் செயல்படக்கூடிய அழைப்புமணியை வடிவமைத்துள்ளார்.
“அழைப்புமணி மூலம் நிச்சயம் நோய் தொற்று பரவக்கூடும். எனவே சமூக இடைவெளி பின்பற்றப்படுவதைக் கருத்தில்கொண்டு நான் ஒரு தானியங்கி பெல் ஒன்றை உருவாக்கி இருக்கிறேன். 50 சென்டிமீட்டர் தொலைவில் ஒருவர் வரும்போதே இதிலுள்ள அல்ட்ராசோனிக் சென்சார் கண்டறிந்து ஒலியெழுப்பும். மனிதக் கரங்கள் படவேண்டிய அவசியமில்லை,” என்று சர்தாக் தெரிவிக்கிறார்.
அடல் டிங்கரிங் லேப் (ATL) மாடர்ன் பப்ளிக் பள்ளி மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கிறது. சர்தாக் தனது திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஏடிஎல் ஆன்லைன் அமர்வு மூலம் மாணவர்கள் குழுவுடனும் வழிகாட்டியுடனும் கலந்துரையாடினார்.
“சர்தாக் எப்போதும் புதுமையான முயற்சிகளில் ஈடுபட்டு வருவார். தற்போது மனிதக் கரங்கள் படாமல் தானாக இயங்கக்கூடிய அழைப்பு மணியைக் கண்டுபிடித்துள்ளார். இதன் மூலம் மனிதர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு அறிவியல் ரீதியாக தீர்வு காணமுடியும் என்பதை நிரூபித்துள்ளார். அவரது புதுமையான சிந்தனையை நான் மனதார பாராட்டுகிறேன்,” என்கிறார் டெல்லி மாடர்ன் பப்ளிக் பள்ளி தலைமை ஆசிரியர் அல்கா கபூர்.
இந்தியா மக்கள்தொகை அதிகமுள்ள நாடு. இதுதவிர இங்கு போதிய சுகாதார வசதிகள் இல்லை. எனவே தற்போதைய நெருக்கடியான சூழலில் இருந்து விடுபட இதுபோன்ற புதுமையான கண்டுபிடிப்புகள் அவசியம். இந்திய அரசாங்கமும் இவற்றை ஊக்குவித்து ஆதரவளித்து வருகிறது.
கட்டுரை: Think Change India