‘தமிழக வங்கிகளில் இனி தமிழ் மொழியில் பரிவர்த்தனை’ - நிர்மலா சீதாராமன் உறுதி!
தமிழகத்தில் உள்ள வங்கிகளில் தமிழிலேயே பரிவர்த்தனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள வங்கிகளில் தமிழிலேயே பரிவர்த்தனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இக்கூட்டத்தொடரில் பேசிய மக்களவை எம்.பி. தமிழிச்சி தங்கபாண்டியன், ஒன்றிய அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பெரும்பாலான பொதுத் துறை வங்கிகள் 2023-2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் தனியார் மயமாகும் அல்லது அந்த வங்கிகளில் அரசின் முதலீடு விளக்கிக் கொள்ளப்படும் என்று வெளியாகியுள்ள தகவல் குறித்து மத்திய நிதி அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
தமிழகத்தில் குறிப்பாக கிராமப் பகுதிகளில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் தமிழ் மொழியறிவு பெற்றவர்களை நியமிக்க மத்திய அரசு எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது? எனவும் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், தமிழகத்தில் உள்ள வங்கிக் கிளைகளில் தமிழிலேயே பணப்பரிவர்த்தனை செய்ய வழிவகை செய்யப்படும் என உறுதியளித்தார். இதுகுறித்து பேசிய நிர்மலா சீதாராமன்,
“தமிழ் மொழி மூலம் வங்கிகளில் பரிவர்த்தனை செய்ய விரும்புபவர்களுக்கு தமிழ் மொழியிலேயே பரிவர்த்தனை செய்ய ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்தார். அதேபோல், தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநிலத்தவர்களுக்கு தமிழில் பேச பயிற்சி அளிக்கப்படும்,” என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள வங்கிக் கிளைகளில் உள்ள படிவங்கள் மற்றும் தகவல்கள் தமிழிலும் இருக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், ஏடிஎம்களிலும் தமிழிலேயே பரிவர்த்தனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் காரத் அளித்துள்ள விளக்கத்தில், தமிழகத்தில் வங்கி பரிவர்த்தனைகளில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை விளக்கியுள்ளார்.
1. வங்கிகளின் அனைத்து கவுண்ட்டர்களிலும் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் அத்துடன் தமிழ் மொழிப் பலகைகள் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
2. மொபைல் பேங்க், இன்டர்நெட் பேங்க் மற்றும் கால் சென்டர்கள் உள்ளிட்ட ஸ்மார்ட் பேங்க் வழிமுறைகள் அனைத்தும் உள்ளூர் மக்கள் பயன்படுத்தும் மொழியில் இருத்தல் வேண்டும்.
3. வங்கிச் சேவை தொடர்பான விவரங்கள் மற்றும் சேவைகள் அடங்கிய வசதிகள் குறித்த கையேடுகள் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
4. வாடிக்கையாளர்களுக்குத் தேவையான வங்கிக் கணக்கு துவங்குவதற்கான விண்ணப்பங்கள், பாஸ் புத்தகங்கள் மற்றும் இதர விவரங்கள் அனைத்தும் தமிழ் உள்ளிட்ட மூன்று மொழிகளில் அச்சடிக்க வேண்டும்.
6. தமிழகத்தில் உள்ள அனைத்து ஏடிஎம் மையங்களிலும் அதனை பயன்படுத்து தொடர்பான வழிமுறைகள் தமிழில் இடம் பெற வேண்டும்.
தொகுப்பு - கனிமொழி