கடன் மறுப்புக்கு வங்கிகள் பதில் சொல்லும் நிலை வர வேண்டும்!
வங்கிகள் ஒத்துழைப்பின்மை, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பதாகவும், இது தொடர்பாக நிதி அமைச்சகத்துடன் பேசி வருவதாகவும், எம்.எஸ்.எம்.இ துறை இணைய அமைச்சர் கூறியுள்ளார்.
தகுதி வாய்ந்த சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (Msme) கடன் மறுத்தால் அதற்கு வங்கிகள் பதில் சொல்ல வேண்டிய நிலை எதிர்காலத்தில் உருவாகலாம் என்று, எம்.எஸ்.எம்.இ துறை இணை அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி கூறியுள்ளார்.
வங்கிகள் ஒத்துழைப்பின்மை, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பதாகவும், இது தொடர்பாக நிதி அமைச்சகத்துடன் பேசி வருவதாகவும், எம்.எஸ்.எம்.இ துறை இணைய அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி கூறியுள்ளார்.
இத்துறை, குறைந்த மூலதனத்தில் உள்ளூர் அளவில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக அவர் தெரிவித்தார். அரசு மீதான குறைவான சுமை மற்றும் குறைந்த மூலதனம் காரணமாக, இந்நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவதில் உள்ள ரிஸ்கும் குறைவானது என்று அவர் கூறினார்.
”விவசாயத்திற்கு அடுத்த நிலையில், எம்.எஸ்.எம்.இ துறை தான் அதிக வேலைவாய்ப்புகளை வழங்குகிறது. எனினும், வங்கிகள் ஒத்துழைப்பின்மை காரணமாக இந்தத் துறையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சகத்துடன் இணைந்து மத்திய அரசு இதற்குத் தீர்வு காண முயன்று வருகிறது. எதிர்காலத்தில், தகுதி வாய்ந்தவர்களுக்கு கடன் வழங்க மறுத்தால் வங்கிகள் பதில் சொல்ல வேண்டிய நிலை வரும்,” என்றும் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநிலத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் எம்.எஸ்.எம்.இ துறையில் 14 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
“எம்.எஸ்.எம்.இ துறை, இந்தியா 5 லட்சம் கோடி பொருளாதாராமாக உருவாவதில் முக்கிய பங்காற்றும். பிரதமர் மோடி கனவு கண்டபடி, எம்.எஸ்.எம்.இ துறையால் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 14 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது,” என்று அவர் கூறினார்.
அதிக மனிதவளம் காரணமாக, உத்தரபிரதேச பொருளாதாரம், தேசத்தின் பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கிறது, எம்.எஸ்.எம்.இ துறை மாநில வளர்ச்சியின் முக்கிய பொறியாக இருக்கிறது,” என்றும் அவர் மேலும் கூறினார்.
”எம்.எஸ்.எம்.இ துறைக்கு உத்தரபிரதேசத்தில் நீண்ட பாரம்பரியம் இருக்கிறது. ஆனால் போதிய விளம்பரமின்மை மற்றும் சந்தை நிலைக்கேற்ற மாறுதல்கள் இல்லாத காரணத்தால், இந்தத் துறை தேய்கிறது. இந்த துறை புதுப்பிக்க, கடந்த ஆண்டு மாநில அரசு, ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டத்தை துவக்கியது,” என்றார்.
இந்தத் துறை சார்ந்தவர்களுக்கு மாநில அரசு பயிற்சி அளித்து வருவதோடு, பல்வேறு திட்டங்கள் கீழ் கடன் வழங்கி வருவதாகவும் முதல்வர் தெரிவித்தார்.
செய்தி: பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்