சூப்பர் ராண்டனரிங்
'சூப்பர் ராண்டனரிங்' என்று அழைக்கப்படும் மிதிவண்டி போட்டியை ஆடக்ஸ் கிளப் பாரிசியன் நடத்தி வருகிறது. ஃப்ரான்ஸ் நாட்டில் அமைந்துள்ள இந்த கிளப்பின் தலைமையகம் நான்கு வருடத்திற்கு ஒரு முறை நடத்தும் இப்போட்டியில், பாரிஸில் இருந்து பிரெஸ்ட் மற்றும் பிரெஸ்ட்டில் இருந்து பாரிஸ் வரை சைக்கிளில் பயணிக்க வேண்டும். இந்த 1250 கிலோ மீட்டர் பயணத்தை 'மாஸ்டர் ரைட்' என்று அழைக்கின்றனர். இதில் போட்டியாளர்கள் அவர்களுக்கு அளிக்கப்படும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பயணத்தை முடிப்பதே வெற்றியின் இலக்கு. 18 வயதிற்க்கு மேற்பட்டோர் பங்கேற்கும் இந்த மாஸ்டர் ரைட் போட்டியில் தேர்வு பெற ஒருவர் 'சூப்பர் ராண்டனராக' இருக்க வேண்டும். உலகம் முழுவதும் நடத்தப்படும் நான்கு நிலைகள் கொண்ட மிதிவண்டி ஓட்டத்தை கொடுக்கப்பட்டிருக்கும் நேரத்திற்குள் முடிக்கும் நபர் சூப்பர் ராண்டனர் ஆகிறார். அப்படிப்பட்ட 200கிமி, 300 கிமி, 400கிமி மற்றும் 600கிமி என்ற நான்கு நிலைகளையும் வெற்றியோடு முடித்து இன்று சூப்பர் ராண்டனர் என்ற சான்றிதழை பெற்றுள்ளனர் சென்னையைச் சேர்ந்த அனு மற்றும் அவரது கணவர் ஸ்ரீராம்.
இந்த மகிழ்ச்சியான செய்தியை தமிழ் யுவர்ஸ்டோரியுடன் பகிர்ந்து கொண்ட அனு, தனது சைக்கிள் பயணத்தின் கதையை பகிர்ந்து கொண்டார்.
அனுவின் முதல் நெடுதூர சைக்கிள் ஓட்டம்:
அனு, தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர். ஜனவரி 2014ம் ஆண்டு தனது உடல்நிலையை சீராக வைத்துக்கொள்ள சைக்கிள் வாங்கினார். வார இறுதி நாட்களில் நண்பர்களுடன் இணைந்து இவர் துவங்கிய மிதிவண்டி பயிற்ச்சி 30கிமி தொலைவு வரை சென்றடைந்தது. ஒரு நாள் இவர் மற்றும் இவரது நண்பர்கள் அனைவரும் இணைந்து புதிய சைக்கிள் பயணம் ஒன்றை மேற்க்கொள்ளத் திட்டமிட்டனர். அதே ஆண்டு சுதந்திர தினத்தன்று 120கிமி தொலைவு கொண்ட பயணத்தை மகாபலிபுரம் வரை மேற்கொள்ள முடிவு செய்தனர். சுதந்திர தினத்தன்று அனு பயணித்த 120கிமி சைக்கிள் பயணம், அவருக்குள் மேலும் நூறு கிலோமீட்டர் தொலைவை தாண்டி பயணிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது.
நண்பர்கள் அளித்த ஊக்குவிப்பு:
ஆகஸ்ட் 15ம் தேதி 2014ம் வருடம், நூறு கிலோமீட்டர் பயணத்திற்கு பிறகு மேலும் சாதிக்க வேண்டும் என்ற கொள்கையும், உடலை சீராக தக்கவைத்துக்கொள்ளவும் உடற்பயிற்சி மையத்தில் இணைந்தார் அனு. அங்கு முன்பே இணைந்து பயிற்சி மேற்கொண்டு வந்த இரண்டு ராண்டனர்கள் மற்றும் பல்வேறு நாட்டு வீரர்களுடன் நட்புறவானார். அங்கு பயிற்சியாளர் மற்றும் நண்பர்கள் அனுவை ஊக்குவித்து சூப்பர் ராண்டனர் போட்டியில் பங்கேற்குமாறு கூறினர்.
“பயிற்சியாளர் மற்றும் நண்பர்கள் எனக்கு கொடுத்த ஊக்குவிப்பும் பயிற்சியாலும் நான் சூப்பர் ராண்டனர் ஆகனும் என்ற உத்வேகம் என் மனசில் ரொம்ப ஆழமாக பதிஞ்சிது.” என்கிறார் அனு.
சூப்பர் ராண்டனர் போட்டியின் முதல் ஓட்டம்:
2014ம் ஆண்டு இவர் சூப்பர் ராண்டனர் என்ற பட்டத்தை பெறுவதற்கான முதல் அடியை எடுத்து வைத்தார். "மெட்ராஸ் ராண்டனர்" நடத்திய 200 கிலோ மீட்டர் தொலைவு பயணத்தில் அனு பங்கேற்றார். மேலும் இந்த 200கீமி பயணத்தை 13 மணி நேரம் 5 நிமிடத்தில் முடித்தார். பயணத்திற்கிடையே அமைக்கப்படும் சோதனைச்சாவடிகளுக்கு சென்றடையவும் நேர எல்லை விதிக்கபட்டது. இந்த பயணத்தை மேற்கொண்ட அனு, தனது முயற்சியை திருவினையாக்கினார். சில நாட்களுக்குப் பிறகு 300கிமி தொலைவு பயணத்தை கோவையில் முடித்தார்.
அனுவின் முதல் ஜோடிப் பயணம்:
தனது அடுத்தக்கட்ட நிலையான 400கிமி சைக்கிள் ஓட்டத்திற்கு தயாராகும் நிலையில் தான் அனுவின் வாழ்க்கைத் துணையான ஸ்ரீராம் இவரது ஆர்வத்திலும் வெற்றித் துணையானார். ஜூன் மாதம் 2015ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அனுவின் லட்சியத்தை அடைய உறுதுணையாக இருந்த ஸ்ரீராம் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடக்க இருக்கும் 400கிமி சைக்கிள் ஓட்டத்தில் அனுவுக்கு உதவி கரம் நீட்டினார். திருமணத்திற்கு பிறகு அனுவின் பயிற்சியின் பொழுதும் போட்டியின் போதும் தனது முழு ஆதரவை அளித்தார். போட்டியின் விதிமுறைப்படி 400கிமி தொலைவு பயணங்களின்போது பெண் போட்டியாளர்கள் தங்களின் பாதுகாப்பிற்கு ஒருவரை அழைத்துக்கொள்ளலாம். ஆனால் பாதுகாப்புக்கு அழைத்து வரப்படும் நபர் போட்டியாளரை குறிப்பிட்ட தூரத்தில் இருந்தே பின் தொடர்ந்து வர முடியும். ஸ்ரீராம் அவ்வாறு அனுவை இரவு நேரப்பயணத்தில் குறிப்பிட்ட தொலைவில் இருந்து பின் தொடர்ந்தார்.
“எங்களோட கல்யாணம் ஜூன் 2015 நடக்க இருந்தது. ஆனால் சவால் என்னவென்றால், அதே வருஷம் ஆகஸ்ட் மாதம் 400கிமி போட்டியும் இருந்தது. கல்யாணத்துக்குத் தயார் ஆகுர நேரத்தைவிட நாங்க பயிற்சியில் தான் அதிக நேரம் இருந்தோம்” என்றார் அனு.
இறுதி பயணத்தில் நிகழ்ந்த சோதனை:
இதுவரை தனியாக பயணித்த அனு அடுத்த நிலையான 600கிமி சைக்கிள் ஓட்டத்திற்கு தனது கணவருடன் இணைந்து பயணிக்க முடிவு செய்தார். ஸ்ரீராமுக்கு நெடுதூரம் சைக்கிள் பயணங்கள் புதிதாக இருந்த நிலையில் அனு அவருக்கு அளித்த தன்னம்பிக்கை அவரையும் போட்டியில் பங்கேற்க வைத்தது. எதிர்ப்பாராத விதமாக பயணத்தின் போது இருவரின் உடல்நிலையும் சிரற்றுப்போனதால் ஸ்ரீராம் 320கிமி தொலைவிலும், அனு 480கிமி தொலைவிலும் போட்டியை விட்டு வெளியேறினர். சோதனையின் வடிவாக அந்த ஆண்டின் கடைசி போட்டி அதுவாக இருந்தது எனவே அவர்களால் 600கிமி பயணத்தை இரண்டாவது முறையாக முயற்சிக்க இயலவில்லை.
தடைகளையே வெற்றிப்பாதைக்கு அடிக்கல்:
ஒரு வருடத்திற்குள் நடத்தப்படும் நான்கு நிலை தொலைவு பயணத்தில் ஒரு முறை தோல்வியுற்றால் இரண்டாம் முறை முயற்சிக்கும் வாய்ப்பு அளிக்கப்படும். ஆனால் காலண்டர் வருடத்தின் (நவம்பர் - அக்டோபர்) கடைசி போட்டியில் தோல்வியை தழுவினால் மீண்டும் முயற்சிக்க இயலாது என்பதும் போட்டியின் விதிமுறையாகும். எனவே போட்டியாளார் அடுத்த வருடம் மீண்டும் நான்கு நிலைகளிலும் புதிதாக பங்கேற்று வெற்றிப்பெற வேண்டும். இருப்பினும் தடைகளே வெற்றிப்பாதைக்கான அடிக்கல் என கருதி தன்னம்பிக்கையை தளரவிடாது, 2015 ஆம் ஆண்டு புதிய காலண்டர் வருடத்தில், நவம்பர் மாதம் தொடங்கி 2016 பிப்ரவரி மாதத்திற்குள், மீண்டும் அனைத்து நிலைகளையும், அதாவது 200கிமி, 300கிமி, 400கிமி மற்றும் 600கிமி தொலைவு பயணங்களை குறித்த நேரத்திற்குள் முடித்து வெற்றிக் கனியை ஈட்டி சூப்பர் ராண்டனர்கள் என்ற பட்டத்தை அனுவும் அவரது கணவர் ஸ்ரீராமும் பெற்றனர்.
இறுதியாக 2016ம் ஆண்டின் வெற்றிப்பாதையின் புள்ளிவிவரம்:
200கிமி தொலைவை 13 மணி நேரம் 9 நிமிடத்திலும்
300கிமி தொலைவை 17 மணி நேரம் 28 நிமிடத்திலும்
400கிமி தொலைவை 25 மணி நேரம் 56 நிமிடத்திலும்
இறுதி நிலையான 600கிமி தொலைவை 39 மணி நேரத்தில் முடித்து வெற்றிப்பெற்றனர்.
பெரும்பாலான நிலைகளில் இரவு பயணம் இருக்கும் வாய்ப்புகள் அதிகம். மேலும் ஒருநாள் முழுவதும் அவர்கள் சைக்கிள் மிதிக்கும் காரணத்தினால் உடல் சோர்வு ஏற்படும் என்றும் இரவு நேரங்களில் தூக்கத்தை கட்டுப்படுத்தி ஓட்டும் நிலையும் ஏற்படும் என்று கூறினர். இருப்பினும் அனைத்து தடைகளையும் மீறி அவர்கள் போட்டு வைத்திருக்கும் திட்டத்தின்படி செயல்பட்டு வெற்றி இலக்கை எட்டியுள்ளனர் இந்த தம்பதி.
சூப்பர் ராண்டனர் ஆக வேண்டும் என்ற அனுவின் கனவிற்கு துணையாக இருந்ததை ஸ்ரீராம் பெருமையாக கூறுகையில்,
“அனு எனது மனைவி, அவரின் அனைத்து கனவுகளையும் நிறைவேற்றுவது எனது விருப்பம் மட்டுமல்ல எனது கடமையும் கூட. உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் நான் அவரை வெற்றி பாதையில் நிறுத்தவில்லை அவர் தான் என்னை வெற்றி பாதையில் கொண்டு நிறுத்தியுள்ளார்" என்றார்.
மேலும் தங்களின் அடுத்த முயற்சியாக 600 கிமி தூரத்தை இன்னும் விரைவில் முடிக்கும் முயற்சியை மேற்கொள்ள இருப்பதாகவும். அதன் பிறகு ”ரோட் பீஸ்ட்” என்று அழக்கப்படும் 1000கிமி தொலைவுப் பயணம். அதன் பின்பு ”பிலிஸ் இன் தெ ஹில்ஸ்” என்று அழைக்கப்படும் 1200கிமி தொலைவுப் பயணத்தை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தனர். 1200கிமி தொலைவு கொண்ட பயணம் மேற்கு தொடற்சி மலைகளில் அமைந்துள்ள 7 மலைகளை கடந்து செல்லும் பாதையாக இருக்கும் என்றும் அதை கடந்து மேலும் சாதனை படைக்கும் முயற்சியில் இறங்கப்போவதாகவும் மகிழ்ச்சியுடன் கூறினர்.
இறுதியாக அவர்கள் கூறுகையில், தங்களின் வெற்றிக்கு முயற்சி மட்டும் காராணமல்ல, அவர்களின் பயிற்ச்சியாளர்கள், நண்பர்கள் மற்றும் குடுப்பத்தினர் அளித்த ஊக்குவிப்பும் தான் காரணம் என்றனர்.
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்
தொடர்பு கட்டுரைகள்: