Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

‘நூற்பு’ - ஐ.டி பணியை விட்டு, கைத்தறியை மீட்டு நெசவுத் தொழிலை உயிர்ப்பிக்கும் ஈரோடு சிவகுருநாதன்!

பாரம்பரிய கைத்தறியை மீட்க தனது ஐ.டி. பணியை விட்டு 'நூற்பு' என்னும் நெசவு தொழிலை தொடங்கியதோடு, இன்று கைத்தறிக்கென ஒரு தனிப்பள்ளியே உருவாக்கிய சமூக தொழில் முனைவரான சிவகுருநாதனின் கதை இது!

‘நூற்பு’ - ஐ.டி பணியை விட்டு, கைத்தறியை மீட்டு நெசவுத் தொழிலை உயிர்ப்பிக்கும் ஈரோடு சிவகுருநாதன்!

Saturday October 19, 2024 , 5 min Read

'கைத்தறி'‌ ஓசை ஒரு காலத்தில் ஊர் முழுக்க கேட்ட சத்தம்... உடலோடு சேர்த்து மூளைக்கும் பயிற்சி தரக்கூடியது. நம் பாரம்பரியத்தின் அடையாளமாய் இருந்த ஓன்று. ஆனால், இன்றோ "தறி ஓட்டி தறிக்கெட்டு போயிறாத..." என்று நெசவாளர்களே கூறுகிற நிலை.

ஆயினும்கூட, முன்பு எப்போதும் பார்த்திடாத வகையில் கைத்தறியை மீட்க சில சாதகமான சூழல்கள் தென்படுவதுதான் இதில் ஆச்சரியமே. அந்த சின்னஞ்சிறிய நம்பிக்கையைப் பற்றிக்கொண்டு போராடும் ஒவ்வொரு மனிதரும் இந்த நூற்றாண்டின் முன்னுதாரண முகங்கள் எனலாம்.

அப்படி ஒரு பெரும் லட்சியத்துடன் பாரம்பரிய கைத்தறியை மீட்க தனது ஐ.டி. பணியை விட்டு விலகி 'நூற்பு' என்னும் நெசவுத் தொழிலை தொடங்கியதோடு, இன்று கைத்தறிக்கென ஒரு தனிப்பள்ளியே உருவாக்கிருக்கிற சமூக தொழில் முனைவரான சிவகுருநாதனின் கதையே இது! 

Nurpu Founder - SivaGurunathan

Nurpu Founder - SivaGurunathan

சிவகுருநாதன் பின்னணி: 

ஈரோடு மாவட்டம் துடுப்பதி கிராமத்தைச் சேர்ந்த சிவகுருநாதன், நெசவு குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை சின்னச்சாமியின் ஒரே விருப்பம், தன் மகனாவது நன்றாகப் படித்து வேறு வேலைக்கு செல்ல வேண்டும் என்பதே!  அதன்படியே, கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங் முடிச்சுட்டு எம்.பி.ஏ படிப்பையும் முடித்த சிவகுருநாதன், கை நிறைய சம்பளத்துடன் ஐ.டி பணியில் சேர்கிறார்.

"அந்த வயசுல இருந்த பெரிய கனவுனா… பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் வாங்கணும் அவ்வளவு தான்! கல்வி முறை அப்படித்தானே நம் மனதில் பதியவைத்திருக்கிறது? சம்பாதிப்பதை மட்டும்தானே வாழ்க்கை என்று போதித்திருக்கிறது? அப்படித்தான் நானும் இருந்தேன்," என்கிறார் சிவகுருநாதன்.

"வெளியூர், வெளி மாநிலம் என பயணம் செய்து எந்தவொரு அச்சமும் இல்லாமல் செலவு செய்பவனாய் மாறினாலும். மனதின் ஓரம் இந்த எந்திர தனமான வேலையில் ஒரு வித வெறுமையும், நிரந்தரமற்ற தன்மையையும் உணர்ந்தேன். மேலும், சுயமாக மனதுக்கு நிறைவான எதாவது ஒரு வேலையை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் ஒரு பக்கம் ஓடிக்கொண்டே, இருந்ததாக," கூறுகிறார் சிவகுருநாதன்.

நெசவுக் குடும்பத்தில் பிறந்து தறிகளின் மத்தியிலே வளர்ந்த சிவகுருநாதனுக்கு, நாளடைவில் கிராமத்தில் ஏற்பட்ட கைத்தறி சப்தங்களின் குறைவு அவரது மண்டைக்குள் குடைச்சலை ஏற்படுத்தியது. உழைப்புக்கேற்ற ஊதியமின்மை, கடின உழைப்பு, நீண்ட நேரம் என நெசவாளர்கள் கைத்தறியினை கைவிடுவதற்கு காரணங்கள் அடுக்காகயிருந்தன.

Handloom

Handloom

அவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டேயிருந்த சிவகுருநாதன், இந்த நேரத்தில்தான் ‘குக்கூ’ சிவராஜை சந்தித்தார். இச்சந்திப்பே வாழ்வின் திருப்புமுனையாக மாறுகிறது. இதைப் பற்றி சிவகுருநாதன் நினைவுக்கூர்கையில், 

"நம் வாழ்க்கையில் பல மனிதர்களை காண்கிறோம், அதில் சிலர் நாம் யார் என்று நமக்கே அறிமுகப்படுத்திவிட்டு, சாதாரணமாக கடந்து செல்வார்கள். அப்படிப்பட்டவர் தான் சிவராஜ் அண்ணா. எனக்கான துறையை அடையாளம் காண உதவியவர்," என்கிறார்.

சிவராஜ் அண்ணனின் பரிந்துரையின்படி, காந்தியை பற்றியும் , குமரப்பாவை பற்றியும் நிறைய படிக்கத் தொடங்கினேன். இவர்களது புத்தகங்கள் வாழ்க்கை மீதான எனது புரிதலை மேலும் விசாலமாக்கியது. நான் எதையெல்லாம் பெரிது என்று கோட்டை கட்டி வைத்திருந்தேனோ , அவைகள் அனைத்தையும் உடைத்தெறிந்தது காந்திய சிந்தனை..!

'வாழ்வின் வளர்ச்சி' என்று இந்த உலகம் மதிப்பிட்டு வைத்திருப்பது என்ன? அதிக சம்பளம் அவ்வளவுதானே? அதை காட்டிலும் மிக முக்கியமானது, எந்த செயலைக் கொண்டு அந்த பணத்தை சம்பாதிக்கிறோம் என்பதில் இருக்கிறது வாழ்வின் அர்த்தம்..! எனவே, ஐடி பணியை தாண்டி மனதிற்கு நிறைவான, சமூகத்திற்கும் தேவையான பணியில் ஈடுபட விரும்பினேன்.
SivaRaj

SivaRaj

என்ன செய்யலாம்... இதுவா; அதுவா என நண்பர்களுடன் கலந்தாலோசித்த போதுதான் மின்னல் வெட்டியது. என் குடும்பம் தலைமுறை தலைமுறையாக செய்து வந்த நெசவுத்தொழிலை இக்காலத்தில் நாம் ஏன் மீட்டெடுக்கக் கூடாது?

ஆனால், மனத்திற்குள் ஒரு வித தயக்கம் எழுந்து கொண்டே இருந்தது. நெசவுத் தொழிலை என்னால் கற்க முடியுமா..? இதற்கான பதிலை என்னிடம் நான் கேட்கவில்லை. மாறாக என் மனைவி ரூபாவிடம் கேட்டேன். மனம்விட்டு அவரிடம் உரையாடினேன்.

"ஐடி துறைக்கு அப்பால் என் கனவுகள் விரிந்து வருவதை அவருக்கு புரியவைத்தேன். இயற்கை சார்ந்த வாழ்வியலில் நாட்டம் பிறந்திருப்பதை  அவருக்கு எடுத்துச் சொன்னேன். பொறுமையாககேட்ட ரூபா. 'உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள்... நிச்சயம் உங்களால் முடியும், பக்கபலமாக நான் நிற்கிறேன்...' என்றார். 

ஒரு கணவனுக்கு இதைவிட வேறென்ன வேண்டும்? களத்தில் இறங்கினேன். சிவராஜ் அண்ணனின் வழிகாட்டலின்படி, கர்நாடகாவில் கைத்தறிதுணிகளை உற்பத்தி செய்யும் மேல்கோட்டை கிராமம் குறித்து அறிந்தேன். 

உடனடியாக அங்கு சென்றேன். காந்திய சிந்தனையாளரும்‌, காதி இயக்க ஆதரவாளருமான சுரேந்திர கௌலாகி அய்யா என்னை வரவேற்றார். ‘இதற்குப் பொறுமை அவசியம். மெதுவாகத்தான் செல்ல முடியும். ஆனால், நிறைவான வாழ்க்கையைத் தரும்...' என்று சொன்னதுடன் தன் அனுபவங்களின் வழியே, தான் கற்றதை எனக்கு எடுத்துச் சொன்னார்.

அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் என் மனதில் ஆழமாகப் பதிந்தது, வாழ்க்கை குறித்த அச்சம் விலகியது. முழு மனதுடன் ஐடி வேலையை ராஜினாமா செய்தேன், என்கிறார் சிவகுருநாதன்.

நூற்பு பயணம்:

2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி 'நூற்பு' என்னும் பெயரில் கைத்தறி நெசவு சங்கத்தைத் தொடங்கினார். 'நூற்பு' என்றால் ஒரு சாதாரண பஞ்சிலிருந்து பயனுள்ள நூலை உருவாக்குதலாகும். அதாவது, ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்துக்கு பயன்படும் வகையில் மாற்றுவது.

Nurpu

என் வாழ்க்கையும் 'நூற்பு' தானே? ஐடி பணியாளனாக இருந்தவன் இப்பொழுது நெசவுத் தொழில் செய்பவனாக மாறியிருக்கிறேனே! சிவராஜ் அண்ணா, நம்மாழ்வார், நண்பன் ஸ்டாலின் என பலரால் நெய்யப்பட்டவன் தானே? அதனால் தான் 'நூற்பு' என்ற பெயரைத் தேர்வு செய்தேன்..." என பெருமையுடன் குறிப்பிடும் சிவகுருநாதன், வேலையை விட்ட செய்தி அறிந்ததுமே தன் அப்பாவும் அம்மாவும் அதிர்ச்சி அடைந்ததாக குறிப்பிடுகிறார்.

"அதுவும் நெசவுத் தொழில் செய்யப் போகிறேன் என்பதை அவர்களால் ஏற்கவே முடியவில்லை. 'இதில் சம்பாதிக்க முடியாது' என்று அறிவுரை சொன்னார்கள். ஆனால்,  நான் உறுதியாக இருப்பதை கண்டு மொத்த குடும்பத்தினரும் எனக்கு உறுதுணை அளித்தார்கள்."

குடும்பத்தினரின் ஆசிர்வாதத்தோடு நூற்பு பணியை தொடங்கினேன். அப்போது சென்னிமலை 1010 காலனி பற்றி தெரியவந்தது. கைத்தறி நெசவாளர்களுக்காக பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஆயிரத்து பத்து வீடுகள் கொண்ட காலனி அது. ஒரு காலத்தில் அங்கு எப்பொழுதும் கைத்தறிச் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்குமாம். இன்று பத்து வீடுகளில் தான் அந்த சத்தம் கேட்கிறது. பலரும் வேறு தொழிலுக்கு சென்றுவிட்டார்கள்.

அங்கு சத்தியார்த்தி என்னும் நண்பர் அறிமுகமானார். அவரிடம் என் கனவை சொன்னதும் 'சிறப்பா செய்யுங்கள் என வாழ்த்தினார். அங்குள்ள நெசவாளர்களிடம் பேசினேன். முதலில் தயங்கியவர்கள் ‘தொடர்ந்து வேலை தருகிறேன்' என்றதும் மலர்ந்தார்கள். மேலும் நம்பிக்கையுடன் கைகோர்த்தனர், என்று மன நிறைவுடன் கூறினார் சிவகுருநாதன்.
Sivagurunathan's Family

Sivagurunathan's Family

நெசவாளர்களுக்கு நிலையான வேலைவாய்ப்பை வழங்கி பொருளாதாரத்தில் மேம்பட செய்யவும், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தன்னிறைவு வாய்ந்த கைத்தறி ஆடைகளை வழங்கவும் தொடங்கப்பட்ட‌ நூற்பு. தற்போது https://nurpu.in/ என்ற இணையதளம் மூலம் தூய பருத்தி நூலால் ஆன கைத்தறி வேட்டி, சட்டை, சேலை, துண்டுகளை நெசவு செய்வதோடு, இயற்கை முறையிலேயே சாயம் ஏற்றிய துணிகளையும் ஆன்லைன் வழி விற்பனை செய்து வருகிறார் சிவகுருநாதன்.

பாலியஸ்டர் என்பது பொதுவாக பெட்ரோலியத்திலிருந்து பெறப்படும் ஒருவகை செயற்கை நூல். ஆனால், உற்பத்தி செலவை குறைக்க சந்தைகளில் பாலியஸ்டர் கலந்த துணிகளே பருத்தி ஆடை என்கிற பெயரில் பெரும்பாலும் விற்கப்படுகிறது. இவை சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்ககூடியவை. அதுவே கைத்தறி பருத்தி ஆடைகளை அணிந்தால் நாசி மட்டுமல்ல நம் உடலே சுவாசிக்கும்.

ஆம், கைத்தறியில் நெசவுசெய்யும் பருத்தி ஆடையில்  இழைகளுக்கு நடுவே கண்ணறியாத சின்னச்சின்ன இடைவெளிகள் இருக்கும். நம்ம உடல் அந்த இடைவெளியில்தான் சுவாசிக்கும். தோலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் காற்றோட்டம் பாயும். இவையே நம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியவை, என அக்கறையுடன் கூறுகிறார் சிவகுருநாதன்.
'நூற்பு துணிகள்'

'நூற்பு துணிகள்'

மேலும், கொரோனா காலத்தில், நண்பரிகளிடமிருந்து நிதி உதவி பெற்று, பிறந்த குழந்தைகளுக்கு எவ்வித ரசாயனமும் சேர்க்காத தொட்டில் நெசவு துணிகளை ஈரோடு பகுதி அரசு மருத்துவமனைகளுக்கு இலவசமாக நெய்து கொடுத்திருக்கிறார் சிவகுருநாதன்.

கைத்தறி நெசவுக் கூட்டமைவு :

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பகுதி நேரமாக கைத்தறிப் பயிற்சி அளித்து வந்த சிவகுருநாதன், தற்போது நூற்பு, சென்னிமலையில் நெசவாளர்களின் திறன்களை வளர்க்கவும், புதிதாகவரும் தலைமுறையினருக்குக் உதவும் வகையில் "கைத்தறி நெசவுப் பள்ளி" ஒன்றைத் தொடங்கியுள்ளார். சிவகுருநாதனின் நீண்டகாலக் கனவான கைத்தறி நெசவுக் கூட்டமைவை கடந்த மாதம்  எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. 

கைத்தறி நெசவுக் கூட்டமைவு!

கைத்தறி நெசவுக் கூட்டமைவு :

"இங்கு, கைத்தறியின் நுணுக்கங்களில் ஆர்வமுள்ள எவரும் தங்கி, நெசவாளர்களிடமிருந்தே நேரடியாக நெசவு செய்ய கற்றுக்கொள்ளலாம். ஒரு நாள் கைத்தறி பயிற்சி வகுப்பு முதல் ஆறு மாதம் வரையிலான கைத்தறி பயிற்சி வகுப்புகள் வரை தற்போது நடைமுறையில் உள்ளது."

மற்ற கலை வகுப்புகளை போலவே நெசவு கலையும் தமிழக பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மீண்டும் கொண்டுவர வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைக்கிறார் சிவகுருநாதன். ஏனெனில், இக்கைத்தறி உடலோடு சேர்த்து மூளைக்கும் பயிற்சி தரக்கூடியது. ஆதலால் குழந்தைகளின் கவனிப்பு திறனைக் கூட்டி மன அழுத்தத்தை குறைக்கக்கூடியது.

‘நூற்பு நெசவுப் பள்ளி’

‘நூற்பு நெசவுப் பள்ளி’

இவரது அளப்பரிய செயலை பாராட்டி சிவகுருநாதனுக்கு இந்த ஆண்டு ஒரு லட்ச ரூபாய் தொகையும், பாராட்டு சான்றிதலும் அடங்கிய கே.கே.வி பசுமை விருதும் வழங்கியது தமிழ்நாடு அரசு.

"பல ஆயிரம் செலவு செய்து நம் உடலுக்கும், சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் துணிகளை வாங்கும் பழக்கத்தை விட்டு, இந்த தீபாவளிக்கு நம் பாரம்பரிய கைத்தறி ஆடைகளை தேர்வு செய்து, நம் கைத்தறி ஜீவன்களை காப்போமே! கைத்தறி மீட்டெடுப்பில் நம்முடைய பங்கு பெருமைமிக்கதாக மாறட்டும்!"

வாழ்விற்காக பணம் ஈட்டும் காலம் போய், வசதிக்காக பணம் ஈட்டிக் கொண்டிருக்கும் இச்சமூகத்தில், நெசவாளர்களின் நலனுக்காகவும், ஆரோக்கிய கைத்தறிக்காகவும் தொடர்ந்து போராடி கொண்டிருக்கும் சிவகுருநாதனின் 'நூற்பு' கனவு ஆலமரம் போல் விருட்சம் அடைய யுவர்ஸ்டாரியின் வாழ்த்துக்கள்..!



சிவகுருநாதன் தொலைபேசி எண்: 95786 20207