Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

'சென்னை சூப்பர் கிங்க்ஸ்' – தடையிலும் தொடரும் வெற்றிக்கதை!

'சென்னை சூப்பர் கிங்க்ஸ்' – தடையிலும் தொடரும் வெற்றிக்கதை!

Thursday April 14, 2016 , 3 min Read

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி மைதானத்தில் பெற்ற வெற்றிகளை விட அதிகமாகவும் மக்கள் மனதில் பெற்ற வெற்றிக்கான காரணங்களையும், கிரிக்கெட் மீது பெரிதும் ஆர்வம் இல்லாதவர்களையும் இந்த அணி கவர்ந்தது எப்படி என்பதையும், இதன் மூலம் இன்றைய கார்ப்ரேட் நிறுவனங்கள் கவனிக்க வேண்டிய காரணிகளையும் விளையாட்டாக விவாதிப்போம்!

விளையாட தெரிந்த வியாபாரிகளின் வணிகம் – விளையாட்டு 

image


சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை பற்றியும், அது பங்குபெறும் ஐ பி எல் போட்டி பற்றியும், ஏன் கிரிக்கெட் பற்றியும் கூட அடுக்கடுக்கான விமர்சனங்களும் விவாதங்களும் ஒரு புறம் இருந்தாலும் உலக கிரிக்கெட் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு கிடைத்த வரவேற்பு வேறு எந்த அணிக்கும் கிடைத்ததாகக் கூற முடியாது. 

வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமோ அல்லது நட்சத்திர வீரர்களுக்காகவோ அணியை பின் தொடர்ந்திருந்தால் வீரர்கள் சிதறிச்சென்ற இந்நேரம் இந்த பதிவை எழுதுவதற்கு தேவையே இருந்திருக்காது. ஆனால் இன்றும் அணியின் வீரர்களையும் ரசிகர்களையும் இணைக்கும் வார்த்தை சென்னை சூப்பர் கிங்க்ஸ்.

கிரிக்கெட் மீது பெரிதும் ஆர்வம் இல்லாதவர்களையும் இந்த அணி கவர்ந்தது எப்படி என்பதையும் இதன் மூலம் இன்றைய கார்ப்ரேட் நிறுவனங்கள் கவனிக்க வேண்டிய காரணிகளையும் பார்ப்போம்.

ஆரோக்கியமான அணி அமைப்பு:

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் பெரும்பாலும் மாறாமல் இருந்தது, அதன் வெற்றியும் அந்த வெற்றிக்கான வீரர்களும் தான். எட்டு வருடங்களுக்கு முன்பு பால்ய முகங்களாக இருந்தவர்களை இன்று பழகிய முகங்களாக மாற்றியதில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு பெரும் பங்கு உண்டு.

Core Team என்று சொல்லப்படும் அசைக்க முடியாத அடிப்படை அணி வீரர்களை கொண்டதும் ஒரு முக்கியக் காரணம். வீரர்கள், ஆலோசகர்கள் முதல் மருத்துவர்கள் வரை காலம் தொட்டு நட்பு பாராட்டியதும் மிகப்பெரும் காரணம்.

அளவான அனுபவமும் அளவுகடந்த உற்சாகமும்:

அனுபவமும் உற்சாகமும் கலந்த வீரர்களின் கலவையும் இதன் தொடர் வெற்றிக்கு ஒரு காரணமும் கூட. அணியில் விளையாடிய வீரர்களே பயிற்சியாளர்களாக மாறியதும், அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஆலோசகர்களாக மாறி செயல்பட்டதும் வெற்றி அணிக்கு வித்திட்டது. மைக்கேல் ஹஸ்ஸி போன்ற வீரர்களிடம் ஆட்டத்திலுருந்து கற்றுக்கொள்வதை விட அருகில் இருந்து கற்றுக்கொள்ள நிறையவே உள்ளன.

வழி நடத்தும் தலைமை பண்பு:

அணி தலைவர் மகேந்திரசிங் தோனியை அணியில் தக்க வைக்க பெரிய தொகையையும் தருவதற்குத் தயார் என அணியின் மேலாளர் சொன்னதாக செய்தி உண்டு.

ஒரு செயலை செயல்படுத்தும் விதத்தில் தான் அந்த செயலுக்கான வெற்றியும், தலைமை பண்பின் வெற்றியும் இருக்கிறது. அப்படிப் பார்க்கையில் அணித்தலைவர் தோனி, அணியின் வெற்றிப்பயணத்தில் பலமுறை தோணியாக இருந்து உதவியிருக்கிறார்.

image


மக்களுக்கு நெருக்கமான கலாச்சாரம்:

மக்களின் மொழியை வீரர்கள் பிரதிபலித்தது அணியின் மீதும் வீரர்கள் மீதும் நல் தொடர்பை ஏற்படுத்த உதவியது. உதாரணமாக விசில் போடு என்பதும், தமிழ்நாட்டு கலாச்சாரமான வேட்டியை வெளிநாட்டு வீரர்கள் உடுத்தியதும் உள்ளூர் வீரர்களாக அவர்களை உணர்த்தியது.

இன்றைய கார்ப்ரேட் உலகில் பல்வேறு நிறுவனங்கள் விளம்பரங்களில் அந்தந்த பகுதி மக்களுக்கு ஏற்றவாறு விளம்பரங்களை வடிவமைத்து தருவது போலத்தான் இதுவும்.

அணியாக விளையாடு:

குறிப்பிட்ட சில வீரர்களை மட்டும் சார்ந்திராத அணியின் வெற்றி இதன் தொடர் வெற்றிக்கு பக்க பலம்.

அணி விளையாட்டில் தனி விளையாட்டு என்று இருக்கும் அரசியல் கட்சி போல் இல்லாமல் ஒருவருக்கொருவர் உற்சாகப்படுத்தி ஓர் அணி ஓர் குடும்பம் என விளையாடியதும் கவனிக்கக் கூடிய காரணம். தனி ஒருவனாக விளையாடாமல் அணியில் ஒருவனாக விளையாடியது குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகள் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி fair play award வாங்கியது வீரர்களுக்கு ஆட்டத்தின் மீதும் எதிர் அணியினர் மீதும் கொண்ட மதிப்பிற்கு சான்றாகிறது.

தவறுகளில் தவறாமல் கற்றுக்கொண்டவை:

இளம் வீரர்களை இன்றைய நட்சத்திர வீரர்களாக மாற்றியதற்கு தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டதும் ஒரு காரணம், தொடரின் தொடக்கத்தில் தோல்விகளால் வரவேற்கப்பட்டாலும் முடிவில் வெற்றியோடு வெளியேறுவதற்கு இது ஒரு முக்கியக் காரணம்.

Picture:www.chennaisuperkings.com

Picture:www.chennaisuperkings.com


வெற்றி = தோல்வி :

வெற்றியும் தோல்வியும் அது கொண்ட எழுத்துக்களில் மட்டும் சமமல்ல, சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வீரர்கள் அவ்விரு வார்த்தைகள் மீது கொண்ட எண்ணங்கள் கூட சமமானது தான். தொடர்ச்சியான தோல்விகளில் இருந்து மீண்டு தொடர் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம்.

திறமையாளர்களை தக்க வைத்தல்:

திறமைகளை கையாளுவதிலும், திறமையானவர்களை தக்க வைப்பதிலும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி திறமையாக செயல்பட்டது. தொடர்ந்து வீரர்களை தக்க வைத்ததன் மூலமாக அணியின் மீது வீரர்களுக்கும், வீரர்கள் மீது ரசிகர்களுக்கும் அளவுகடந்த அன்பை உண்டாக்கியது.

அணியின் அடையாளமாக வீரர்கள் தோனி, அஷ்வின், ரெய்னா, ப்ராவோ மற்றும் பலர் மாறியதற்கு இதுவும் ஒரு காரணம். 

ஒவ்வொரு ஆண்டும் அணியின் தேவைக்கேற்ப செய்யப்பட்ட மாற்றங்கள் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது.

இறுதியாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி என்பது,

ரசிகர்களுக்கான அணி!

வீரர்களால் ரசிகர்களுக்காக விளையாடிய அணி!

image


வீரர்கள் வேறு அணிக்கு விளையாட சென்று விட்டாலும் அந்த வீரர்கள் இன்றும் விட்டுக்கொடுக்காமல் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை கொண்டாடுவதற்குக் காரணம் அந்த அணியின் நிஜ நாயகர்களான ரசிகர்கள் தான்.

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி என்பது பதினோரு வீரர்களை மட்டும் சார்ந்துள்ள அணி என்பதைவிட பல கோடி ரசிகர்களையும் சார்ந்துள்ள அணி என்பதே சரி.

வீரர்களும் ரசிகர்களும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட மதிப்புதான் சென்னை அணியை இந்த இடைக்கால தடையிலும் இடை விடாமல் நேசிக்க வைத்துள்ளது...

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

'பஞ்ச்' தந்திரம்: 'பில்லா 2' அஜித் தன்னம்பிக்கை வசனமும் நிச்சய வெற்றியும்! 

மொபைல் போன் பயன்பாட்டிற்கு அடிமை ஆகிவிட்டீர்களா? அதிலிருந்து விடுபட சில டிப்ஸ்!