Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

அரிசி டூ ஔடதம் ஹோம் டெலிவரி: சிதம்பரம், கடலூர் சுற்றி 40 ஊர்களில் வெற்றிகரமாக செயல்படும் Zaaroz

உணவு முதல் மருந்துகள் வரை அனைத்தையும் டெலிவரி செய்து பெருந்தொற்று காலமான 3 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட கிளைகளோடு செயல்படுகிறது சிதம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் Zaaroz செயலி.

அரிசி டூ ஔடதம்  ஹோம் டெலிவரி: சிதம்பரம், கடலூர் சுற்றி 40 ஊர்களில் வெற்றிகரமாக செயல்படும் Zaaroz

Thursday February 10, 2022 , 5 min Read

வெற்றிகள் வந்து சேர்வதற்கென்று தனியாக நேரம் எதுவும் இல்லை. விடாமுயற்சியோடு செயல்படுகின்றவர்களிடத்தில் எந்த நேரத்திலும் வெற்றிகள் வந்து சேரும்.

கொரோனா பாதிப்பால் தொழில் நஷ்டம் என்று புலம்புபவர்கள் மத்தியில் சவாலான காலத்தில் புதிய தொழில்முனைவில் அடியெடுத்து வைத்தாலும் விடாமுயற்சியால் 3 ஆண்டுகளில் சிற்றூர்களில் 40க்கும் மேற்பட்ட கிளைகளைப் பரப்பி வெற்றி கண்டுள்ளனர் சிதம்பரத்தைச் சேர்ந்த இளைஞர்கள்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த ராம்பிரசாத் மற்றும் ஜெயசிம்மன் பள்ளிப்பருவ நண்பர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவத்துடன் 2018ல் சொந்த ஊரில் புதிய தொழில்முனைவைத் தொடங்கி அதில் எப்படி ஜெயித்தார்கள் என்பதை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள்.

ஒரு மாலை வேளையில் நம்மிடம் பேசினார்கள் Zaaroz நிறுவன நிறுவனர் ராம் பிரசாத் மற்றும் இணை நிறுவனர் ஜெயசிம்மன்.

சரோஸ்

ராம்பிரசாத் (வலது), ஜெயசிம்மன் (இடப்பக்கம்), Zaaroz நிறுவனர்கள்

“நானும் சிம்மனும் பள்ளிப்பருவ நண்பர்கள், வெவ்வேறு கல்லூரிகளில் என்ஜினியரிங் முடித்து விட்டு பின்னர் இருவரும் இணைந்தே அயல்நாடுகளில் பணியாற்றினோம். சுமார் 10 ஆண்டுகாலம் பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவத்துடன் சொந்த ஊரிலேயே புதிதாக தொழில் தொடங்கலாம் என்ற எண்ணம் இருவருக்கும் எழுந்தது. அயல்நாடுகளுக்கு சிதம்பரத்தில் இருந்து மென்பொருள் ஆதரவு தரும் நிறுவனம் தொடங்க முடிவு செய்து, முதன்முதலில் 2018ம் ஆண்டில் தொழில்முனைவில் அடியெடுத்து வைத்தோம்.

அதன் பின்னர், உள்ளூரில் டெலிவரி செய்வதற்கான தேவை இருக்கிறது என்பதை நண்பர்கள் மற்றும் ஹோட்டல் நடத்துபவர்கள் மூலம் தெரிந்து கொண்டோம். இதற்குத் தீர்வு காணும் விதமாகவே Zaaroz செயலியை உருவாக்கினோம், என்று சிற்றூருக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆப் பற்றி மகிழ்ச்சியுடன் பகிர்ந்தார் ராம் பிரசாத்.

Zaaroz-இன் சேவை சிதம்பரம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. 7 மாதங்களிலேயே உள்ளூர் மக்களின் நன்மதிப்பைப் பெற்றது மேலும் உற்சாகத்தை அளித்தது.

2 மாதங்களாக உணவு டெலிவரி சேவையை மட்டும் வழங்கி வந்த நிலையில், அதன் பின்னர் படிப்படியாக மளிகைப் பொருட்கள், காய்கறி, பழங்கள், இறைச்சி, மீன் என்று வீட்டுக்குத் தேவையான அனைத்து பொருட்களை டெலிவரி செய்யும் All in one செயலியாக Zaaroz செயல்படத் தொடங்கியது.

கொரோனா பரவல் அதிகரிப்பால் வீட்டை விட்டு வெளியே வரவே மக்கள் அச்சப்பட்ட நிலையில், விடுபட்ட மற்ற பொருட்களான stationary, மருந்துகள் உள்ளிட்டவற்றின் டெலிவரியையும் தொடங்கினோம். சிதம்பரத்தில் பெற்ற உற்சாக வரவேற்பை அடுத்து அருகில் இருக்கும் சிற்றூர்களுக்கும் Zaarozன் செயல்பாட்டை விரிவாக்கம் செய்ய முடிவு செய்து 2019ல் விருத்தாசலம், 2020 ஜனவரியில் பண்ருட்டி என அடுத்தடுத்த வளர்ச்சிகளை நோக்கி பயணிக்கத் தொடங்கினோம் என்கிறார் ராம்.

டெலிவரி ஆட்கள்

Zaaroz விரிவாக்கம் மற்றும் வளர்ச்சி

2020 மார்ச் மாதத்தில் முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்படவே, அந்த சமயத்தில் மற்ற சிற்றூர் மக்களுக்கும் தேவை இருப்பதை உணர்ந்து கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சீர்காழி என மேலும் சிறிய ஊர்களில் Zaaroz சேவையைத் தொடங்கினோம்.

”வீட்டுத் தேவைக்கான பொருட்களை டெலிவரி செய்வதற்கான தேவை இருந்து கொண்டு இருக்கிறது என்பதை அறிந்து படிப்படியாக பொதுமுடக்க காலத்தில் 40 ஊர்களில் Zaaroz செயல்படத் தொடங்கி இருக்கிறது. மேலும் 10 ஊர்களில் தொடங்குவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

2022 மார்ச் மாதத்துடன் Zaaroz தொடங்கிய 3 ஆண்டுகளில் 50 ஊர்களையும் இந்த ஆண்டு இறுதிக்குள் 100க்கும் மேற்பட்ட ஊர்களில் Zaaroz ஆப் செயல்பாட்டை கொண்டிருக்கும் திட்டத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம், என்றார் ராம்.

சிதம்பரம் சுற்று வட்டாரத்தில் உள்ள சிற்றூர்கள், நகரங்களில் Franchisee முறையில் Zaarozஐ செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். அந்தந்த ஊர்களில் இருக்கும் கடைகளுடன் இணைந்து மக்களுக்குத் தேவையான பொருட்கள் டெலிவரி செய்யப்படுகிறது, என்று விரிவாக்கம் பற்றி பகிர்ந்தார்.

செயலியின் முழு செயல்பாடுகளும் சிதம்பரத்தில் உள்ள அலுவலகத்தில் இருந்து எங்கள் கட்டுப்பாட்டில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. Franchisee-களைப் பொறுத்தவரையில் உள்ளூர்களில் எங்களுக்கான ஆதரவு அளிப்பது, டெலிவரி ஆட்களை ஒருங்கிணைத்தல் உள்ளிட்டபணிகளை செய்து வருகின்றனர். வாடிக்கையாளர்கள் மற்றும் கால் சென்டர் சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளும் சிதம்பரத்தில் இருந்தே செயல்படுகின்றன. அப்போது தான் தரத்தை ஒரே மாதிரியாக கொண்டிருக்க முடியும் என்பதோடு வீண் செலவுகளையும் தவிர்க்கமுடியும் என்று கூறுகிறார் ராம்.

பூஜ்யத்தில் இருந்து தான் Zaaroz செயல்படத் தொடங்கியது என்றாலும் நாங்கள் மனம் தளரவில்லை விடாமுயற்சியால் 6 மாதத்தில் சுமார் 6ஆயிரம் வாடிக்கையாளர்களைப் பெற்றோம், பின்னர், படிப்படியாக உயர்ந்து தற்போது 2.5 லட்சம் வாடிக்கையாளர்கள் Zaaroz-ஐ பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இதுவரை சுமார் 14 லட்சம் டெலிவரிகள் Zaaroz மூலம் செய்யப்பட்டுள்ளது.

Playstoreல் இருந்து Zaaroz செயலியை பதிவிறக்கம் செய்து எளிதில் பயன்படுத்தலாம், என்கிறார் ராம்.

டெலிவெரி

சிறிய ஊர்களிலும் செயலிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், மக்கள் எளிதில் பயன்படுத்தும் விதமாக Zaaroz வடிவமைக்கப்பட்டுள்ளது மக்களின் அபிமானத்தை பெறுவதற்கு மிகவும் உதவியாக இருந்தது என்பதும் எங்களின் வெற்றிக்கான மற்றொரு ரகசியம், என்றார்.

நானும் ராமும் முதல் தலைமுறை தொழில்முனைவர்கள் இருவரின் தந்தைகளும் அரசு ஊழியர்கள், எங்களின் அனுபவத்தின் மீது நம்பிக்கை வைத்து எங்கள் குடும்பத்தினர் எங்களின் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சிக்குத் துணையாக இருந்தனர்.

எங்களுடைய சொந்த சேமிப்பான ரூ.30 லட்சத்தை முதலீடாகப் போட்டே தொழில்முனைவைத் தொடங்கினோம். தொழிலில் லாபம் என்பதைத் தாண்டி சொந்த மண்ணில் மக்களிடம் நல்ல பெயரை எடுக்க வேண்டும், தொழிலில் நேர்த்தி, திருப்தி, மரியாதை இருக்க வேண்டும் என்பதையே இலக்காகக் கொண்டு செயல்படத் தொடங்கினோம்.”

வாடிக்கையாளர்கள் முகம் சுளிக்காமல் செயல்படுவதற்கும் டெலிவரி ஆட்களுக்குப் பயிற்சி கொடுத்தோம். 6 மாதங்களில் வருமானம் பார்க்கத் தொடங்கினோம், இப்போது வரை சொந்த முதலீடு லாபத்தில் இருந்து தொழில் விஸ்திகரிப்பு என்றே செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

தேவையற்ற செலவுகளைக் குறைத்து மக்கள் குறைந்த செலவில் டெலிவரி பெற்றுக் கொள்வதை உறுதி செய்கிறோம். அதே சமயம் தரத்தில் சமரசம் செய்து கொள்ளாமல் தரமான, பாதுகாப்பான டெலிவரி பைகள், டெலிவரி ஆட்களுக்கான காப்பீடு, மருத்துவச் செலவுகள் என வாடிக்கையாளர்கள் முதல் எங்களிடம் பணியாற்றுபவர்கள் வரை அனைவருக்கும் திருப்தி அளிக்கும் விதத்தில் சிறப்பான திட்டமிடலுடன் செயல்படுகிறோம் என இணை நிறுவனர் ஜெயசிம்மன் கூறினார்.

zaaroz

Zaaroz குழுவினர்

10 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.50 செலவில் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு விடும், அதுவே அவர்கள் நேரில் வந்து வாங்கிச் சென்றால் அதை விட அதிக செலவு ஆகும். வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு சந்தா அடிப்படையிலான டெலிவரியை தொடங்கி இருக்கிறோம்.

இதன் படி, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத விதத்தில் எலக்ட்ரிக் பைக்குகளைக் கொண்டு பொருட்கள் டெலிவரி மேற்கொள்ளப்படுகிறது. முதற்கட்டமாக 50 இ-பைக்குகள் செயல்பாட்டில் இருக்கும் நிலையில், மார்ச் மாதத்திற்குள் 200 இ-பைக்குகளில் டெலிவரியானது செய்யப்படும்.

இருசக்கரை வாகனம் ஓட்டத் தெரிந்தவர்கள் லைசென்சுடன் வந்தால் போதும் Zaaroz-இல் முழு நேர மற்றும் பகுதி நேரமாக பணியாற்றலாம். டெலிவரி பாய்களுக்கு வாகனமோ பெட்ரோல் செலவோ கிடையாது நிறுவனத்தின் பைக்குகளில் டெலிவரி செய்யலாம்.

முதலில் இந்தப் பணிக்கு ஆட்கள் கிடைப்பது சற்றே சிரமமாக இருந்தது, எனினும் இப்போது மக்களுக்கு எங்கள் மீது மரியாதை ஏற்பட்டதன் விளைவாக பொருட்கள் டெலிவரி செய்வதை கவுரவக் குறைச்சலான பணி என்று கருதும் மனப்பான்மையானது நீங்கி இருக்கிறது, இதையும் எங்களுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறோம் என்கிறார் ராம்.

தமிழ்நாட்டில் அனைவரும் அறிந்த செயலியாக Zaarozஐ மாற்ற வேண்டும் என்பதே நீண்ட காலத் திட்டம். வருமானமானது ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியைத் தந்து கொண்டிருப்பதால் வெளியில் இருந்து முதலீடுகளை எதிர்பார்க்காமல் லாபத்தையே மறுமுதலீடாக்கி விரிவாக்கம் செய்து கொண்டிருக்கிறோம், என்றனர் நிறுவனர்கள்.

விரைவிலேயே ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்டவற்றையும் இந்த செயலியிலேயே புக் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்த உள்ளோம் என்று எதிர்காலத் திட்டங்களை பட்டியலிடுகிறார்கள் ராம் மற்றும் ஜெயசிம்மன்.

இளம் தொழில்முனைவர்களாக மட்டுமின்றி சமூக அக்கறையுடனும் செயல்படும் இவர்கள் ஊழியர்கள், வாடிக்கையாளர்களிடம் நன்கொடை பெற்று கொரோனா முதல் அலையின் போது சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவுட்டிகளை வழங்கியுள்ளனர்.

இதே போன்று பயன்படுத்தாத ஆடைகளை பொதுவான ஒரு இடத்தில் சேகரித்து தேவை இருப்பவர்களுக்கு உதவும் விதத்தில் அளித்தல் மற்றும் வீணாகும் உணவுப் பொருட்களை பொதுஇடத்தில் சேகரித்து உணவு கிடைக்காமல் கஷ்டப்படுபவர்கள் எடுத்துக் கொள்ள உதவுதல் போன்ற சமூக நல திட்டங்களும் இவர்களின் தொழில்முனைவுக் கனவில் முக்கிய இடம்பெற்றுள்ளன.