1.15 லட்சம் கி.மீ. பயணம்; நாட்டிற்காக உயிர் நீத்த ராணுவ வீரர்கள் வீட்டு மண்ணை சேகரித்த இசைக் கலைஞர்!
தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, ராணுவ வீரர்களின் வீட்டு வாசலில் உள்ள மண்ணை சேகரிப்பதற்காக நீண்ட பயணம் ஒன்றை முடித்திருக்கிறார் முன்னாள் பேராசிரியர் ஒருவர்.
தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, ராணுவ வீரர்களின் வீட்டு வாசலில் உள்ள மண்ணை சேகரிப்பதற்காக நீண்ட பயணம் ஒன்றை முடித்திருக்கிறார் முன்னாள் பேராசிரியர் ஒருவர்.
மருத்தகத்துறை முன்னாள் பேராசிரியரும், இசைக்கலைஞருமான பெங்களூருவைச் சேர்ந்த உமேஷ் கோபிநாத் ஜாதவ் என்பவருக்குள் நாட்டுக்காக சீருடை அணியாவிட்டாலும், நம்மாலும் ஏதாவது செய்ய முடியும் என்ற எண்ணம் ஒலித்துக்கொண்டிருந்தது. அதற்காக பேராசியரியர் பணியை ராஜினாமா செய்த அவர், நாட்டிற்காக உயிர் நீத்த ராணுவ வீரர்களின் குடும்பங்களை காண இந்தியா முழுவதும் பயணம் மேற்கொள்ள முடிவெடுத்தார்.
பிப்ரவரி 14, 2019 அன்று புல்வாமா தாக்குதலை தொலைக்காட்சியில் பார்த்த உமேஷ் கோபிநாத் ஜாதவ் பேரதிர்ச்சி அடைந்தார். அந்த தியாகிகளின் குடும்பங்களைச் சந்தித்து அவர்களின் வீடுகளுக்கு வெளியில் இருந்து மண்ணைச் சேகரிக்க முடிவு செய்தார்.
ஏப்ரல் 9, 2019 அன்று தனது மனைவி மற்றும் மகன்களைப் பிரிந்து, கிரவுடு பண்டிங் மூலமாக சேர்த்த பணத்தை வைத்து தனது பயணத்தை தொடங்கினார்.
புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த 40 சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்தினரை மட்டுமின்றி, முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள், கார்கில் போர், ஊரி தாக்குதல், பதன்கோட் தாக்குதல், ஆபரேஷன் ரக்ஷக், கால்வான் மோதல், கடைசியாக நடந்த குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்தையும் நேரில் சந்தித்து, அவர்கள் வாழ்ந்த வீட்டின் மண்ணை சேகரித்துள்ளார்.
வீரர்களின் வீடுகளில் இருந்து மண்ணை சேகரித்து குறித்து உமேஷ் கோபிநாத் ஜாதவ் கூறுகையில்,
“புல்வாமாவில் தியாகிகளின் மண்ணைக் கொண்டு ஏற்கனவே ஒரு நினைவிடம் கட்டப்பட்டுள்ளது, இப்போது மற்ற தியாகிகளின் வீடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மண்ணும் டெல்லியில் மற்றொரு நினைவிடம் அமைக்க பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்படும்," எனத் தெரிவித்துள்ளார்.
இரண்டு பீல்ட் மார்ஷல்களான ஜெனரல் கே.எம். கரியப்பா மற்றும் ஜெனரல் சாம் மானெக்ஷா, 26/11 தியாகி மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் ஆகியோரின் வீடுகளில் இருந்து மண்ணை சேகரித்துள்ளார். ஜாதவ் மற்றும் அவரது நண்பர்கள் தியாகிகளுடன் அவர் நடத்திய உரையாடல்களை ஆவணப்படமாக எடுத்து அதனை, பாதுகாப்பு அமைச்சகத்திடம் கொடுக்க முடிவெடுத்துள்ளனர்.
தனது பயணத்தை முடித்துக்கொண்டு பெங்களூரு திரும்பியுள்ள உமேஷ் கோபிநாத் ஜாதவ், சாலை மார்க்கமாக 1.15 லட்சம் கிலோமீட்டர் பயணம் செய்து 144 தியாகிகளின் குடும்பங்களைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தகவல் உதவி: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் | தொகுப்பு: கனிமொழி