நாட்டிற்காக உயிர்நீத்த 560 ராணுவ வீரர்களின் பெயர்களை பச்சைக் குத்தி அஞ்சலி செலுத்திய இளைஞர்!
புல்வாமா தாக்குதலில் பலியாகிய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பாலியானவர்களின் பெயர்களை முதுகில் பச்சைக்குத்தியுள்ளார் ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர். .
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டம், அவாந்திபோரா பகுதியில் கடந்த 14-ம் தேதியன்று பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்த சம்பவம் நாட்டை பெரும்துயருக்குள் ஆழ்த்தியுள்ளது. நாடு முழுவதுள்ள மக்கள் இறந்தவர்களின் குடும்பத்துக்கு உதவும் வகையில் நன்கொடையினை வழங்கி, தங்களுக்குச் சாத்தியமான ஏதொவொரு வழியில் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானெர் பகுதியைச் சேர்ந்த கோபால் சஹாரன் என்ற இளைஞர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 71 தியாகிகளின் பெயர்களை முதுகில் பச்சை குத்தியுள்ளார்.
பகத்சிங் இளைஞர் படையின் உறுப்பினரான சஹாரன், சமீபத்திய புல்வாமா தாக்குதலில் பலியாகிய ராணுவ வீரர்களின் பெயர்கள், பிற தாக்குதல்களில் பலியாகிய தியாகிகளின் பெயர்கள் என 71 ராணுவ வீரர்களின் பெயர்களை பின்புற முதுகில் வரிசையாய் பச்சைக்குத்தியுள்ளார். இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அவர் அளித்த பேட்டியில்,
“நாட்டிற்காக தங்கள் உயிர்களை தியாகம் செய்த வீரர்களுக்கு பல்வேறு விதங்களில் நாங்கள் அஞ்சலி செய்து வருகிறோம். புல்வாமா தாக்குதலுக்கு பிறகு, இறந்த தியாகிகளின் பெயர்கள் எப்போதும் நினைவுகூறும் வகையில் ஏதேனும் செய்திட வேண்டும் என்று முடிவெடுத்தேன். புல்வாமா தாக்குதலுக்கு பலியோனார் தவிர மற்ற தியாகிகளின் பெயர்களையும் சேர்த்து பச்சை குத்தினேன். நாட்டுமக்களிடையே ராணுவ வீரர்கள் மீதான மரியாதை அதிகரிக்கும் என நம்புகிறேன்” என்றார்.
8 நாட்களில் 560 பெயர்கள் பச்சைக் குத்தல்..!
சஹாரான் போன்றே உ.பி.யை சேர்ந்த 30 வயதான இன்டீரியர் டிசைனர் அபிஷேக் கவுதம், கார்கில் போரில் உயிர் நீத்த 560 தன்னலமற்ற தியாகிகளின் பெயர்களுடன், மகாத்மா காந்தி, நேதாஜி, பகத்சிங் உட்பட பல சுதந்திர போராட்ட வீரர்களின் முகத்தினையும் பச்சைக்குத்தி உள்ளார்.
டாட்டூ குத்தி தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் எண்ணம் எப்போது வந்தது என்பதை பற்றி அவர் இந்தியா டுடேவுக்கு கூறுகையில்,
“கடந்தாண்டு நான் லே லடாக் பகுதிக்கு பயணம் சென்றேன். இந்திய ராணுவத்தினர் எங்கள் நண்பர்களுள் ஒருவரை காப்பாற்றினார். மேலும், அந்தப்பயணம் முழுவதும் ராணுவத்தினர் உடன் இருந்ததால் வெகு பாதுகாப்பாக உணர்ந்தோம். அப்பொழுதிலிருந்தே அவர்களின் ஈடுஇணையற்ற பணிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். பிறகு, டாட்டூ போட்டுக் கொள்ளும் முடிவெடுத்தேன்,” என்றார்.
பிறகு, ஒரு ஆண்டு முழுவதும் தியாகிகளின் பெயர்களையும் அவர்களது கதைகளையும் ஆராய்ந்து, சில ராணுவ வீரர்களின் வீடுகளுக்கும் சென்று குடும்ப உறுப்பினர்களையும் சந்தித்துள்ளார். அவர் டாட்டூ குத்திக் கொள்ள விரும்பும் ராணுவ வீரர்களின் பெயர் பட்டியலை தயார் செய்த பிறகு, டில்லியை சேர்ந்த டாட்டூ ஆர்டிஸ்டிடம் பெயர்களுக்கு ஏற்றவராரு வடிவமைத்து தருமாறு கூறியுள்ளார். பின், தொடர்ச்சியாய் எட்டு நாள்கள் டாட்டூ குத்தி அனைத்து பெயர்களையும் பச்சைக் குத்தியிருக்கிறார்.
“டாட்டூ குத்துவதற்கு முன்பாக டாக்டரை சந்தித்து பரிசோதித்துக் கொண்டேன். இந்த நீண்ட பெயர்பட்டியலை பச்சைக்குத்த அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதாலும், நீண்ட செயல்முறை என்பதாலும் தொடர்ச்சியாய் அமர்ந்து பச்சைக்குத்த வேண்டாம் என்று டாக்டர் அறிவுறுத்தினார்.” என்றார்.
அவரது மனைவி உட்பட அவரது குடும்ப உறுப்பினர்களே அபிஷேக் டாட்டூ போட்டுக் கொள்ளும் சேதி அறியார். “பச்சைக்குத்திய 15 நாட்களுக்கு பிறகு படித்து தெரிந்து கொண்டனர்”என்கிறார் அவர்.
“இப்போதெல்லாம், தேசப்பக்தி தற்காலிகமாகிவிட்டது. நம் நாட்டில் பலருக்கு ஆகஸ்ட் 15, ஜனவரி 26 மற்றும் இந்தியா - பாக்., கிரிக்கெட் பேட்டியின் போது மட்டுமே நாட்டுப்பற்று ஏற்படுகிறது. மற்ற நாட்களில் மறந்து விடுகிறார்கள். என்னால் இந்திய ராணுவத்தில் சேர இயலாது. ஆனால், ஒவ்வொரு நாளும் தேசப்பற்றை உணர விரும்பினேன். இந்த டாட்டூக்கள் அன்றாடம்
எனக்கு நினைவூட்டிக் கொண்டேயிருக்கும்” என்றார்.
ஒவ்வொரு நாளும் 6 மணி நேரம் டாட்டூ குத்துவதற்கு என்று ஒதுக்கி 8 நாட்களில் முழுமையாய் டாட்டூவை முடித்திருக்கிறார். அதுப்பற்றி மெயில் டுடேவுக்கு அவர் கூறியது,
“இந்தநாட்களில், அன்புக்குரியவர்களுக்காக டாட்டூ போட்டு கொள்வது என்பது அதிகப்பட்ச காதலுக்கான அன்பின் அடையாளமாக விளங்குகிறது. பெரும்பாலான மக்கள் அவர்களது துணைக்காக பச்சைக் குத்திக்கொள்கின்றனர். என்னை பொறுத்தவரை, தேசத்தின் மீது காதல் பிற அனைத்தையும் தாண்டியது. எங்களுக்காக இந்திய ராணுவம் எப்போதும் எல்லையில் காத்துக் கொண்டிருக்கிறது. எக்கச் சக்கமான வீரர்கள் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்துள்ளனர். அதனால், அவர்களுடைய பெயர்களை எனது முதுகில் பச்சைக் குத்தி கொள்வது என்பது அவர்களுக்கான எனது அஞ்சலி,” என்றார்.
தகவல் உதவி: ஸ்கூப்வூப் மற்றும் இந்தியா டுடே