மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் நுட்பத் தீர்வுகள்: 2021ன் மகத்தான கண்டுபிடிப்புகள்!
2021ம் ஆண்டில் அறிமுகம் ஆன மிகச்சிறந்த தொழில்நுட்பங்கள் பலவேறு வகையான மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு தீர்வாக அமைந்த மனிதநேய தொழில்நுட்பங்கள் இவை.
தொழில்நுட்ப உலகில் புதுமைகளுக்கும் புதிய சேவைகளுக்கும் குறைவில்லை. செயலிகள் துவங்கி சாதனங்கள் வரை எண்ணற்ற புதுமையான சேவைகள் தொழில்நுட்பத்தின் பயனாக அறிமுகம் ஆகியுள்ளன. அந்த வகையில் 2021ம் ஆண்டின் சிறந்த தொழில்நுட்பங்களை பல்வேறு பிரிவுகளில் புகழ் பெற்ற டைம் பத்திரிகை பட்டியலிட்டுள்ளது.
இந்த பட்டியலில் மனிதர்கள் எதிர்கொள்ளும் அணுகல் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைந்துள்ள மனிதநேய தொழில்நுட்பங்களை இங்கே பார்க்கலாம்:
ஏ.ஐ வாசிப்பு
நம்மில் பலருக்கு வாசிப்பதற்குத் தேவையான பொறுமையோ, ஈடுபாடோ இல்லாமல் இருக்கலாம். ஆனால், புரிதல் சிக்கல், பார்வைக் குறைபாடு, கற்றல் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் பலர் வாசிக்க முடியாமல் தவிக்கலாம். இவர்களுக்கு எல்லாம் தொழில்நுட்பம் மூலம் எளிய வாசிப்பு தீர்வாக OrCam Read அமைந்துள்ளது.
இதன் விலை சற்று அதிகம் ($1,990) என்றாலும், செயற்கை நுண்ணறிவு உதவியுடன் இந்த சாதனம் எந்த எழுத்து வடிவையும் உரக்க வாசித்து காண்பிக்கிறது. பயனாளிகள் இந்த சாதனத்தின் பக்கத்தில் உள்ள லேசர் பிம்பத்தை தொட்டால், வாசிப்புக்கான மெனு தோன்றுகிறது. அதில் கிள்க் செய்தால் உள்ளடக்கம் வாசிக்கப்படுகிறது.
இயற்கையான குரலில் வாசிக்கப்படுவதோடு பல மொழி சேவையும் இருக்கிறது. விளம்பரங்களில் உள்ள தொலைபேசி எண் போன்றவற்றை வாசித்து காட்டுமாறு குரல் வாயிலாக உத்தரவிடலாம்.
மழலை நடை
குழந்தைகள் தத்தி தத்தி நடை பழகத்துவங்குவதே தனி அழகு தான். எனினும் ஏதேனும் குறைபாட்டினால் மெதுவாக நடைப் பழக நேரும் குழந்தைகள், இயந்திர உதவியுடன் நடக்கும் போது சிந்தனை வளர்ச்சி நோக்கிலும் சரி, சமூக நோக்கிலும் சரி நல்ல பலன் பெறுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆனால், இயந்திர நாற்காலிகள் குழந்தைகளுக்கு பொருத்தம் இல்லாமல் அமைகின்றன. இந்த பிரச்சனைக்குத் தீர்வாக ’பெர்மோபில்’ ’Permobil' நிறுவனத்தின் ’எக்ஸ்பிளோரர் மினி’ 'Explorer Mini' இயந்திர நாற்காலி அமைந்துள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த இயந்திரம், ஒன்று முதல் மூன்று வயதான குழந்தைகளுக்கு ஏற்றது. மழலைகள் மனதிலும், பெற்றோர் மனதிலும் மகிழ்ச்சியை கொண்டு வரும் தொழில்நுட்பம் இது.
தானியங்கி ஷூ
பெரியவர்களில் பலருக்கு ஷூவுக்கு லேஸ் கட்டுவதில் சிக்கல் இருக்கலாம். உடல்நலக் குறைபாடு ஏதேனும் இதற்குக் காரணமாக அமையலாம். Nike நிறுவனத்தின் GO FlyEase ஷூ ($120), இதற்குத் தீர்வாக அமைகிறது.
ஷூவில் இருக்கும் மைய பகுதி மூலம் அது தானாக திறந்து கொள்வதோடு, அதில் உள்ள விஷேச டியூபிங் தானாக மூடிக்கொள்கிறது. மூட்டு வலி துவங்கி பார்வைக் குறைபாடு வரை பலவித பிரச்சனை கொண்டவர்களுக்கு இந்த ஷூ உதவியாக இருக்கும்.
மடக்கு நாற்காலி
சக்கர நாற்காலி பயனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று அந்த நாற்காலி அதிக இடத்தை அடைத்துக்கொள்கிறது என்பதாகும். குறிப்பாக விமானப் பயணங்களின் போது சக்கர நாற்காலியை எடுத்துச்செல்வது சிக்கல் தான்.
ஃபெராரி கார் வடிவமைப்பு அனுபவம் கொண்ட ANDREA MOCELLLIN இதற்குத் தீர்வாக, மடக்கி வைத்து எடுத்துசெல்லக்கூடிய 'Revolve' சக்கர நாற்காலியை வடிவமைத்துள்ளார். வழக்கமான சக்கர நாற்காலியை விட இதற்கு 60 சதவீதம் குறைவான இடம் தேவை.