Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

தோல்வியில் பாடம் கற்று வெற்றியை நோக்கி முன்னேறுவது எப்படி?

தோல்வியில் பாடம்  கற்று வெற்றியை நோக்கி முன்னேறுவது எப்படி?

Friday April 06, 2018 , 6 min Read

தோல்வி என்பது தொழில்முனைவு பயணத்தின் ஒரு அங்கம் என்பதால் அதன் வகைகள் மற்றும் காரணங்களை அறிந்து கொள்வது மற்றும் தோல்வி, வெற்றியடைந்த தொழில் உதாரணங்களில் இருந்து எப்படி கற்றுக்கொள்வது என அறிந்து கொள்வதும் பயனுள்ளதாக இருக்கும்.

இது சற்று நீளமான புத்தகம் என்றாலும், பல வகையான தோல்விகளில் கவனம் செலுத்தும் புத்தகமாக இருக்கிறது. ’தி அப்சைடு ஆப் டவுன்’; ’வை பெயிலிங் இஸ் தி கீ டு சக்சஸ்’, எனும் இந்த புத்தகத்தை எழுதிய மேகன் எம்க் ஆர்டல் (Megan McArdle) வாஷிங்டன் போஸ்ட் பத்தியாளர் மற்றும் அதற்கு முன், தி அட்லாண்டிக் மற்றும் தி எக்கனாமிஸ்ட் இதழ்களில் செய்தியாளராக இருந்தவர்.

image


பத்து அத்தியாயங்கள் கொண்ட இந்த 300 பக்க புத்தகம், வர்த்தக ஊழல்கள், திரைப்பட தோல்விகள், தொழில் தோல்விகள், கல்வி குறைபாடுகள் மற்றும் தண்டனைச்சட்டம் ஆகியவறை பற்றி பேசுகிறது. பொருளியல் வல்லுனர்கள், உளவியல் வல்லுனர்கள் மற்றும் மானுடவியலாளர்கள் நடத்திய ஆய்வுகளை அடிப்படையாக கொண்டு புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

தோல்வி வகைகள் மற்றும் அவற்றை எதிர்கொள்வது தொடர்பாக புத்தகம் உணர்த்தும் எட்டு முக்கிய அம்சங்கள்:

வேகமான, இணைக்கப்பட்ட மற்றும் சிக்கலான உலகம் பரிசோதனை, சுய ஆய்வு, முடிவு எடுத்தல் ஆகியவற்றில் மேம்பட்ட திறனை கோருகிறது என்கிறார் மேகன். வெற்றிக்கு நடுவே அடிக்கடி தவறுகள் ஏற்படுவது வழக்கம் தான். செயல்திறன் வாய்ந்தவர்கள், ஆரம்பத்திலேயே, அடிக்கடி, அதிக பாதிப்பில்லாமல், கண்ணியமாக ஏன் மகத்தானதாகவும் தோல்வி அடைகின்றனர்.

1. தோல்வியில் இருந்து மீள்வது

பல வர்த்தக ஜாம்பான்கள் தோல்வியை சந்தித்துள்ளன. சில நேரங்களில் பிரம்மாண்டமாகவும் சந்தித்துள்ளன. ஆனால் சில நிறுவனங்கள், நியூட்டன் சாதன தோல்விக்கு பின் ஆப்பிள் வெற்றி பெற்றது போல, அவற்றில் இருந்து வெற்றிகரமாக மீண்டு வந்துள்ளன.

பின்னடைவுகளில் இருந்து மீண்டு வருவது தொழில்முனைவோர்களை வெற்றிக்கான புதிய பாதையில் பயணிக்க வைக்கிறது. கர்னல் சாண்டர்ஸ் நெடுஞ்சாலை பணி காரணமாக தனது டிரெக் மையத்தை இழந்தாலும், அவர் பிரைடு சிக்கன் வர்த்தகம் பற்றி யோசித்து புகழ்பெற்ற கேஎப்சி வர்த்தத்தை துவக்கினார்.

வேலை இழப்பு விரக்தியை தரலாம் என்றாலும் புதிய வாய்ப்புகளை தேட வைத்து, மேம்பட்ட வாழ்க்கைகான வழிகாட்டலாம். தொடர்ந்து வலைப்பின்னலை உருவாக்குவது, பகுதி நேர பணிகள் மற்றும் தன்னார்வ முயற்சிகள் புதிய வாய்ப்புகளை அளிக்கும்.

நல்ல வாய்ப்புகளை பெறுவதற்கு முன் பல தோல்விகளை சந்திக்கும் விற்பனை பிரதிநிதிகள் போன்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்வதும் பயன் அளிக்கும். இலக்கில் தெளிவு, செயல்பாடுகளை குறிப்பெடுப்பது, திட்டங்களை தயாரிப்பது ஆகியவை மூலம் நிராகரிப்பு அச்சத்தை வெல்லலாம்.

மேகன் இதற்காக புகழ்பெற்ற வாசகங்களை மேற்கோள் காட்டுகிறார். 

“அனுபவம் மூலமே சிறந்த முடிவுகளை எடுக்க முடியும். அனுபவத்தை மோசமான முடிவுகள் மூலமே பெற முடியும்.“ 

தோல்வி மற்றும் விபத்தில் இருந்து மீண்டு வருவது உறுதியான அடையாளமாக விளங்கும். இது தனிப்பட்ட பழக்கங்கள் மற்றும் மற்றவர்களுடனான உறவுக்கும் பொருந்தும்.

2. தடைகளை கண்டறிவது

திட்டமிடுதல் மற்றும் பரிசோதனை ஆகியவை தோல்வியை தவிர்ப்பதற்கான வழிகளாக கருதப்படுகின்றன. ஆனால் பரிசோதனைக்கு கூட எல்லை உண்டு. கோகோ கோலாவின் சோதனைகள் நியூ கோக் வெற்றி பெறும் என உணர்த்தினாலும் இந்த தயாரிப்பு 3 மாதம் மட்டுமே தாக்குபிடித்தது.

வெற்றிகரமான முன்னோட்ட திட்டத்தின் சாபத்திற்கான சரியான உதாரணம் இது என்கிறார் மேகன். நுகர்வோர் இலவச கோக் மாதிரிகளை விரும்பியதாக கூறினர். ஆனால் கடையில் காசு கொடுத்து வாங்கவில்லை.

வேறு ஒன்றில் கவனம் செலுத்துவதால் பளிச் என தெரியும் தவறுகளை கோட்டை விடும் கவனிக்காத பார்வையற்றத்தன்மை தோல்விக்கான மற்றொரு காரணமாகிறது. சிபிஎஸ் தொலைக்காட்சி குழுவான டான் ரேதர் மற்றும் மேர் மேப்ஸ் தங்கள் செய்தி ஒன்றுக்கு அடிப்படையாக கருதப்பட்ட ஆவணங்கள் போலியானவை என உணராத சம்பவம் இதற்கு நல்ல உதாரணம்.

ஜிஎம் நிறுவனம் கார் தயாரிப்பில் பல வகை மாதிரிகளை வெற்றிகரமாக அறிமுகம் செய்தி அவற்றுக்கான நிதி வாய்ப்புகளை அளித்தாலும், 2009 ல் நிதி நெருக்கடி காரணமாக கடின போட்டியை எதிர்கொண்ட போது ஊழியர் சலுகைகள் மற்றும் டீலர்கள் திட்டங்களை குறைக்க வேண்டியிருந்தது. வெற்றிகரமான நிறுவனங்கள் மாற்றத்தை கடினமாக உணர்ந்து தங்கள் வெற்றியின் பலிகடாவாகலாம்.

“நிலைமை சரியில்லாத போது எல்லாம் நன்றாக இருப்பதாக நினைத்துக் கொள்வதற்கு, சகஜநிலை சார்பு என உளவியல் வல்லுனர்கள் அழைக்கின்றனர் என்கிறார் மேகன். இது தோல்விக்கு வழி வகுக்கலாம்.”

மேலாளர்கள் தோல்வி திட்டங்கள் மீதான ஈடுபாட்டை அதிகமாக்கி, தங்கள் தவறுகளை விடாப்படியாக பிடித்துக்கொண்டிருக்கலாம். தோல்வி வெறுப்பு அல்லது தவறுகளை ஒப்புக்கொள்ள முடியாத தன்மை மனித இயல்பு தான். 

நம்முடைய தவறுகளில் உணர்வு பூர்வமாக ஒன்றி போய்விடுவது மோசமான வழக்கமாக இருக்கிறது என்கிறார் மேகன்.

தோல்விகளை ஒப்புக்கொள்ள மறுக்கும் தன்மை நிறுவனங்களுக்கும் உண்டு. இதை குருப்பிடிட்டி என்கிறார் மேகன். அதாவது குழு மடத்தனம். என்ன செய்வது மந்தை உணர்வும் மனிதர்களுக்கு இருக்கிறதே.

தோல்விக்கான காரணங்கள் சிக்கலானவை என ஒப்புக்கொள்வதற்கு பதில் ஆலோசனை நடத்துவது அல்லது பலிகடா தேடுவது என்பது தொடர்புடைய நிகழ்வாகும். 2009 நிதி நெருக்கடியின் போது மேட் ஹாட்டர்ஸ், மூச்சர்ஸ், கான்மென் மற்றும் கார்ப்பரேட் ஷில்ஸ் மீது கடுமையாக குற்றம் சாட்டப்பட்டன என்கிறார். ஒரு விளக்கத்தின் ஆறுதலை எதிர்நோக்குவது மனித இயல்பு தான்.

சதி பற்றிய காரணங்களை கூறுவதும் ஒரு வழக்கமாக இருக்கிறது.

சில நேரங்களில் மனிதர்கள் தங்களை தவறுகளை நியாயப்படுத்தும் வகையில் தகவல்கள் திரிக்கவும் செய்கின்றனர். இது உறுதிப்படுத்தல் சார்பின் விளைவாகிறது. இதன் காரணமாக சரியான ஆனால் கடின கேள்விகளை கேட்க தடையாக அமையலாம். மாற்று கோட்பாடு கொண்டவர்களின் விமர்சனங்களையும் நாம் நிராகரிக்கலாம். தவறுகளை ஒப்புக்கொள்ள துணிச்சல் தேவை. தவறான முடிவுகள் தார்மீக மீறலுக்கு வித்திடக்கூடாது.

நுகர்வோர் பழக்கங்களை கண்டறிவது மற்றும் மாற்றுவது கடினமானது என்பதாலும் தயாரிப்புகள் தோல்வி அடைகின்றன. பலர் ஆரோக்கிய உணவை விரும்பி, உடற்பயிற்சி செய்ய விரும்புவதாக கூறினாலும் நிஜம் வேறு விதமாக இருக்கலாம். இது பல லட்சிய திட்டங்களை தோல்வியில் ஆழ்த்தலாம்.

3. கலாச்சாரம், அரசியல்

“நிதி கொள்கை போலவே தார்மீக தன்மை மீதும் சந்தை அதிகம் சார்ந்திருக்கலாம். அமைப்பு போலவே சமூக பழக்கமும் முக்கியமானது என்கிறார் மேகன். சமூக பொருளாதார சூழலுடன், தனிப்பட்ட குணங்கள் மூலம் தோல்வியை கணிக்கலாம்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பா தோல்வி, ரிஸ்க் தொடர்பான மாறுபட்ட விதிகள் மற்றும் கலாச்சாரத்தை கொண்டுள்ளன. சிலிக்கான் வேலியின் தோல்வி என்பது பெருமையானது மற்றும் தொலைநோக்கு கொண்டவர்களின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. ஆனால் ஐரோப்பாவில் பொறுப்பற்றத்தன்மையாக கருதப்படலாம் என்கிறார் மேகன். அமெரிக்காவில் திவால் சட்டம் நிறுவனர்கள் புதிதாக ஆரம்பத்தில் இருந்து துவங்க வழி செய்கிறது.

“அமெரிக்கா உலகின் திவால் தலைநகராக விளங்குகிறது. மற்ற இடங்களில் எல்லாம் அது களங்கமாக, அவமானமாக பார்க்கப்படுகிறது என மேகன் விளக்குகிறார். 

தோல்வியின் விலையை குறைப்பதன் மூலம் திவால் சட்டம் ரிஸ்க் எடுப்பதை ஊக்குவிக்கிறது. தோல்விடைந்த வர்த்தகத்தின் செலவுகளில் இருந்து விடுவிப்பதன் மூலம் அவர்கள் புதிதாக முயற்சிக்க ஊக்கம் பெறுகின்றனர் என்கிறார் அவர்.

அலைந்து திரிதலில் இருந்து விவசாயம் சார்ந்த பரிணாம வளர்ச்சி சமூக போக்கு மற்றும் புதிய வகை ரிஸ்குகளுக்கு வித்திட்டது. வேட்டையாடியவர்கள் அதிர்ஷ்டத்தை அதிகம் சார்ந்திருந்தனர் என்றால் விவசாயிகள் அலைதலைவிட கடின உழைப்பை நம்பியிருந்தனர்.

ஆக, ஐரோப்பா தொழில்முனைவை விவசாயம் போல கருதுகிறது என்றால் அமெரிக்கா அதை வேட்டை போல கருதுகிறது என்கிறார் மேகன்.

4. தோல்வி மற்றும் கொள்கை

அமெரிக்காவில் பாரம்பரிய எண்ணம் கொண்டவர்கள் மற்றும் தாராளவாதிகள் மத்தியில் தோல்வி மற்றும் நியாமாக நடத்துவது தொடர்பாக அணுகுமுறை மாறுகிறது. தாராளவாதிகள் சமத்துவம் பற்றி கவலைப்படுகின்றனர் என்றால் பாரம்பரிய மனதினர் அளவு பற்றி கவலைப்படுகின்றனர். இது வரி விதிப்பு, பாதுகாப்பு திட்டம், வேலையில்லா காப்பீடு போன்ற சமூக நலத்திட்டங்கள் தொடர்பான அவர்கள் அணுகுமுறையையும் பாதிக்கிறது.

அமெரிக்காவில் கொள்கை மாற்றங்களை எதிர்கொண்ட அனுபவத்தின் அடிப்படையில், சமூக பரிசோதனைகளை நடத்துவது கடினமானது மற்றும் நீண்ட காலம் பிடிப்பது என எச்சரிக்கிறார் மேகன். ஒரே புள்ளிவிவரம் அரசியல் சார்புக்கு ஏற்ப வேறு விதமாக புரிந்து கொள்ளப்படலாம்.

5. திரைப்படங்கள்; வெற்றி, தோல்வி

ஆய்வு, வல்லுனர்கள், அனுபவம் உங்கள் வசம் இருந்தாலும் வெற்றி தோல்விகளை கணிப்பது எத்தனை கடினமானது என ஹாலிவுட் உணர்த்துகிறது. பெரும் பொருட் செலவில் உருவான டைட்டானிக் திரைப்படம் தோல்வி அடையும் என கணிக்கப்பட்டு, பின்னர் மெகா ஹிட்டானது. ஆனால் வாட்டர்வேர்ல்டு விஷயத்தில் நேர் எதிராக அமைந்தது. ஸ்டீவன் ஸ்பில்பெர்க் தொடர் வெற்றிகளை கொடுத்தாலும் தோல்வி படம் கொடுத்தார். 

“கடந்த கால வெற்றிகள் எதிர்கால பலனுக்கான உத்திரவாதம் அல்ல என்கிறார் மேகன். அதே நேரத்தில் மனித இயல்பு முற்றிலும் கணிக்க முடியாதது அல்ல. சிக்கலான அமைப்புகளுக்கு ஏற்ப மேலும் பரிசோதனைகள் தேவை என்றாலும், அவற்றுக்கு எல்லை உண்டு.

6. மருத்துவ தவறுகள்

தவறுகள், தோல்விகள் மற்றும் விபத்துகளை பகுத்துணர மருத்துவ உலகம் கற்றுத்தருகிறது. விபத்துகளை எதிர்பார்க்கவோ திட்டமிடவோ முடியாது. தவறுகளை எதிர் நோக்கலாம் ஆனால் மோசமானவை அல்ல. தோல்விகள் தீவிரமானவை. இவை தவறான கணிப்பு அல்லது பொறுப்பற்றத்தன்மையால் நிகழலாம்.

அமைப்பு வடிவமைப்பு, மருத்துவ செயல்முறைகள், மருத்துவ கருவிகள் மற்றும் மனித முடிவுகள் ஆகியவற்றில் தவறுகள் ஏற்படலாம். மேலும் பல காரணங்களினால் தவறுகள் நிகழலாம். மருத்துவ ஊழியர்கள் முறையான செயல்முறை பின்பற்றப்படாத போது தவறுகள் நிகழலாம்.

7. சந்தை தோல்விகள்

சந்தை நிர்வாக விதிகள் வகுக்கப்படும் விதத்தில் பிரச்சனைகள் தோன்றலாம். மோசமான எண்ணம் கொண்டவர்கள் ஒட்டைகளை பயன்படுத்தி ஏமாற்றலாம். என்ரான் விஷயத்தில் இப்படி தான் நடந்தது.

“எழுதப்பட்ட விதிகளுடன் எழுதப்படாத விதிகளும் வலுவாக இருக்கும் போது சந்தை செயல்பாடு சிறப்பாக அமைகிறது,” என்கிறார் மேகன். 

வழக்கமான பொருளாதாரத்தைவிட, பரிசோதனை பொருளதாரம் போன்ற உத்திகள் இத்தகைய சந்தையை உருவாக்க உதவி, தவறுகளை முன்னதாகவே உணர உதவலாம்.

8. நீண்ட கால எதிர்வினை

image


அறிவியல் மற்றும் இலக்கிய வெற்றியில் தான் கல்வி அதிக கவனம் செலுத்துகிறது. ஆனால் வெற்றிக்கு முந்தைய போராட்டங்களில் அல்ல. திறமை மட்டும் அல்லாமல் கடின உழைப்பும் வெற்றிக்குக் காரணம் என்கிறார் மேகன். மாணவர்கள் தோல்வி அடைய மற்றும் மீண்டு வர வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்கிறார். ஏழை பள்ளிகள் இந்த வாய்ப்புகளை அளிப்பதில்லை.

இந்த புத்தகத்தின் இறுதி அத்தியாயம், குற்றவாளிகள் குணத்தை மாற்றுவதில் தண்டனை அமைப்பில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுகிறது. கடின தண்டனைகள் அல்லது பழிவாங்கல் பதிலாகாது. சரியான மாற்று நடவடிக்கைகளே பொருத்தமாக இருக்கும். பெற்றோர் காட்டும் கடின அன்புடன் இதை மேகன் ஒப்பிடுகிறார்.

தவறுகள், தோல்விகள், விபத்துகள், பேரழிவுகள் ஆகியவற்றை வகைப்படுத்த இந்த புத்தகம் வழிகாட்டுகிறது. கணிப்புத்தன்மை, தாக்கம், மறுசீரமைப்பு வாய்ப்பு, எதிர்கால திட்டமிடல் தாக்கம் ஆகிய அம்சங்களை இது கொண்டிருக்கிறது. மற்ற நாடுகளில் தோல்வி குறித்த கலாச்சார பழக்கங்களும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

முறையான ஆவணப்படுத்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் மூலம் துறைகளுக்கு ஏற்ப தோல்வி அனுபவத்தை வகைப்படுத்த முடியும். உதாரணமாக ஸ்டார்ட் அப் அல்லது என்.ஜி.ஒ அமைப்புகளுக்கான வர்த்தக மாதிரி கண்டறியப்பட்டு பலவீனமான அம்சங்களை கணித்து, தோல்வி வாய்ப்புகளையும் முன்கூட்டியே கணிக்கலாம்.

“உறுதியான சமூகம் தோல்வியை அனுமதித்து அதன் தாக்கம் அந்த கணத்தில் மட்டுமே இருக்க அமைகிறது. இது மீண்டு வர வழி செய்து அதன் பலனை அனைவருக்கும் அளிக்கிறது என்கிறார் மேகன்.

ஆங்கிலத்தில்: மதன்மோகன் ராவ் | தமிழில், சைபர்சிம்மன்