பைக் டாக்சி சேவை Rapido-க்கு தமிழகத்தில் தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
பைக் டாக்சி சேவை தொடர்பான சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் 4 மாத கால அவகாசம் வழங்கியுள்ளது.
இணைய பைக் டாக்சி சேவையான 'ரேபிடோ' (Rapido) சென்னை உயர் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. மாநில அரசு பொருத்தமான புதிய சட்டம் இயற்றும் வரை இந்த செயலி தமிழகத்தில் செயல்பட முடியாது.
ரேபிடோ சேவை தமிழகத்தில் செயல்படுவதன் சட்டப் பூர்வமான தன்மை குறித்து மாநில போக்குவரத்து ஆணையம் மற்றும் காவல்துறை கேள்விகள் எழுப்பியதை அடுத்து உயர்நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை பிறப்பித்துள்ளது.
யுவர்ஸ்டோரி வசம் உள்ள, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகலில் கூறப்பட்டுள்ளதாவது,
“சட்டம் இயற்றப்படும் வரை, மனுதாரர் செயல்பாடுகளை தமிழ்நாடு மாநிலத்தில் செயல்பட முடியாது மற்றும், நான்காவது பதில் மனுதாரரான காவல்துறை, ரேபிடோ செயலியை தமிழக மக்கள் அணுக முடியாத வகையில் கட்டுப்படுத்துவது தொடர்பாக, ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனத்திற்கு தகவல் தொடர்பு செய்ததில் எந்த தவறையும் நீதிமன்றம் காணவில்லை,” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், ஆப்பிள் இந்த செயலியை விலக்கிக் கொண்டுள்ளது. மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வரவில்லை என்பதால் தமிழக அரசு ரேபிடோ சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்தது. எனினும்,
”சட்டம் இயற்றுவதை மாநில அரசு பரிசீலித்து வருவதாகவும், நான்கு மாதங்களுக்குள் சட்டம் இயற்றப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அது வரை, மனுதாரர் தமிழகத்தில் செயல்பட முடியாது,” என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான பதில் பெற ரேபிடோவை யுவர்ஸ்டோரி தொடர்பு கொண்டும், வெளியிடும் நேரம் வரை பதில் கிடைக்கவில்லை. விதிகளை மீறியதாக, மாநிலத்தில் பல இடங்களில் ரேபிடோ வாகனங்கள் போக்குவரத்து ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ரிஷிகேஷ், பவன் குண்டபள்ளி மற்றும் அரவிந்த சங்காவால் 2015ல் துவக்கப்பட்ட ரேபிடோ பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டுள்ளது. நாட்டின் பல்வேறு நகரங்களில் அது 60,000 மேல் வாகனங்களை கொண்டுள்ளது.
ஆங்கிலத்தில்: திம்மையா புஜாரி | தமிழில் : சைபர்சிம்மன்