Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

இனி 10 நிமிடத்தில் பிரிண்ட்- அவுட் வீடு தேடி வரும் - Blinkit நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

Zomato-க்குச் சொந்தமான Blinkit தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் பிரிண்ட்அவுட் டெலிவரி சேவையைத் தொடங்குகிறது.

இனி 10 நிமிடத்தில் பிரிண்ட்- அவுட் வீடு தேடி வரும் - Blinkit நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

Monday August 22, 2022 , 3 min Read

Zomato-க்குச் சொந்தமான Blinkit தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் பிரிண்ட்அவுட் டெலிவரி சேவையைத் தொடங்கியுள்ளது.

எலெக்ட்ரானிக்ஸ், ஸ்மார்ட் போன், டிரஸ், வீட்டு உபயோக பொருட்கள், மளிகை சாமான்கள், காய்கறிகள், பழங்கள், மருந்து மாத்திரைகள், இறைச்சி வகைகள் என அனைத்துமே இப்போது ஆன்லைன் மூலம் டெலிவரி கிடைக்கிறது. அங்கே, இங்கே என அலையாமல் வீட்டிலிருந்த படியே அதிரடி ஆஃபர்களுடன் விரல் நுனியில் பொருட்களை தேர்வு செய்தாலே போதும், பத்தே நிமிடத்தில் வீட்டு வாசலுக்கே வந்து டெலிவரி கொடுக்க அமேசானில் தொடங்கி ஜோமேட்டோ வரை ஏராளமான இ-காமர்ஸ் நிறுவனங்கள் உள்ளன.

குறிப்பாக கொரோனாவுக்கு பிறகு ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவோரின் எண்ணிக்கையும் கணிசமான அளவு அதிகரித்து வருகிறது. இதுவரை வீட்டு உபயோக பொருட்கள், மளிகை சாமான்கள், சாப்பாடு, காய்கறி ஆகியவை வீடு தேடி வந்தது போலவே இனி பிரிண்ட் அவுட்டும் வீட்டுக்கே வர உள்ளது.

Blinkit

இந்தியர்களிடையே பிரபலமான ஆன்லைன் டெலிவரி நிறுவனமான ஜோமேட்டோவின் ஆன்லைன் மளிகை டெலிவரி செய்யும் நிறுவனமான Blinkit இனி வீடுகளுக்கு பிரிண்ட் அவுட் டெலிவரி செய்யும் சேவையை தொடங்கியுள்ளது.

பிளிங்கிட் பிரிண்ட்அவுட் டெலிவரி:

Grofers, 2013 இன் பிற்பகுதியில் ஆன்லைன் மளிகைக் கடையாகச் செயல்படத் தொடங்கி யூனிகார்ன் அந்தஸ்தை அடைந்தது. இதன் மதிப்பு சுமார் $1 பில்லியன் (ரூ. 7588 கோடி) அடைந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் Blinkit என பெயர் மாற்றப்பட்டது.

இதனையடுத்து, ஜோமேட்டோ நிறுவனம் ஜூன் 24ம் தேதி அன்று பிளிங்கிட் நிறுவனத்தை 4,447 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.

ஆன்லைன் மளிகை செயலியான Blinkit, டெல்லி-NCR இன் சில பகுதிகளுக்கு 11 நிமிடங்களில் பிரிண்ட்அவுட் டெலிவரி செய்யும் சேவையை வழங்கி வருகிறது. சோதனை முறையில் இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் புதிய சேவையை தொடங்குவது தொடர்பாக பிளிங்கிட் நிறுவனத்தின் தயாரிப்பு மேலாளர் ஜிதேஷ் கோயல் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது லிங்கிடு இன் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,

"பிளிங்கிட்டில் நாங்கள் இப்போது ஒரு சில பகுதிகளில் நிமிடங்களில் பிரிண்ட் அவுட் வழங்கும் சேவையை செய்து வருகிறோம். எல்லாருடைய வீட்டிலும் எப்போது பிரிண்டர் இருப்பது கிடையாது. ஒருவேளை நீங்கள் பிரிண்ட்அவுட் எடுக்க வேண்டும் என்றால், இன்டர் நெட் சென்டர், நூலகம், ஆபீஸ் அல்லது பக்கத்து வீடுகளுக்கு தான் செல்ல வேண்டிருக்கும். எப்போதுமே சிரமமான இந்த வேலையை இப்போது நாங்கள் எளிமையாக்கியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

வீட்டை விட்டு பிரிண்ட்அவுட் எடுக்க கடைக்குச் சென்றாலே அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஆகும் நிலையில், பிளிங்கிட் நிறுவனம் வெறும் 11 நிமிடங்களில் வீட்டு வாசலுக்கு கொண்டு வந்து பிரிண்ட்அவுட்டை வழங்கிவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளாக் அண்ட் ஒயிட் பிரிண்ட்அவுட்களுக்கு ஒரு பக்கத்துக்கு ரூ.9, கலர் பிரிண்ட்அவுட்டுகளுக்கு ரூ.19 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆர்டருக்கும் 25 ரூபாய் டெலிவரி கட்டணம் ஆகும்.

இந்தச் சேவையானது, பயனர்களின் ஆவணங்களை அச்சிடப்பட்டு, பிளிங்கிட் பயன்பாட்டில் பதிவேற்றுவதன் மூலம், அவர்களின் இருப்பிடத்திற்கு விரைவாக வழங்குவதற்கு உதவும்.

Blinkit இல் பிரிண்ட் அவுட் சேவைகள் காலை 6 மணி முதல் 12 மணி வரை கிடைக்கும் என்றும், இந்த புதிய சேவைக்கு இதுவரை குறைந்தபட்ச ஆர்டர் தேவை இல்லாததால், பிரிண்ட் அவுட்களைப் பெற வாடிக்கையாளர்கள் மொத்தமாக ஆர்டர் செய்ய வேண்டியதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Blinkit

அச்சிடப்பட்டவுடன், பதிவேற்றப்பட்ட ஆவணங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக Blinkit சேவையகத்திலிருந்து நீக்கப்படும் என்று நிறுவனம் உறுதியளித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்களின் நம்பகத் தன்மையை அதிகரிப்பதற்காக , Blinkit, சீல் செய்யப்பட்ட உறையில் பிரிண்ட்களை வழங்க உள்ளது.

வழங்கப்பட்ட இணைப்பில் பதிவேற்றும் முன் வாடிக்கையாளர்கள் தங்கள் பகுதியில் சேவை கிடைக்கிறதா என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். பிளிங்கிட் பயன்பாட்டில் உள்ள "கோப்பைப் பதிவேற்று" பொத்தானைப் பயன்படுத்தி ஆவணங்களைப் பதிவேற்றலாம். jpeg, jpg, png மற்றும் pdf போன்ற அனைத்து முக்கியமான வடிவத்தில் உள்ள கோப்புகளையும் பதிவேற்றம் செய்து, பிரிண்ட்அவுட்டாக பெற முடியும்.

பிரிண்ட்அவுட் எப்படி வர என்பதை வாடிக்கையாளர்கள் தீர்மானிப்பதற்காக பிளாக் அண்ட் ஒயிட், கலர், சிங்கிள் பேஜ், மற்றும் டபுள் பேஜ் என பல ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அனைத்து கோப்புகளும் பாதுகாப்பானவைமற்றும் GDPR வழிகாட்டுதல்களின் படி தயாரிக்கப்பட்டவை என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் வாடிக்கையாளர்கள் உடனடியாக சாட் மூலமாக வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும், உடனடியாக தீர்வு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொகுப்பு - கனிமொழி