Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

10 நிமிடங்களில் வீட்டில் ஆல்கஹால் டெலிவரி சேவையை தொடங்கியுள்ள Booozie!

ஆல்கஹால் ஹோம் டெலிவரி செய்யும் ஹைதராபாத்தைச் சேர்ந்த Booozie தளம் 10 நிமிடங்களில் டெலிவர் செய்யும் சேவையைத் தொடங்கியிருக்கிறது.

10 நிமிடங்களில் வீட்டில் ஆல்கஹால் டெலிவரி சேவையை தொடங்கியுள்ள Booozie!

Tuesday June 21, 2022 , 3 min Read

ஹைதராபாத்தைச் சேர்ந்த Booozie தளம் டெலிவரிகளைத் தொகுத்து வழங்கும் சேவையில் ஈடுபட்டிருக்கிறது. ஆல்கஹால் ஹோம் டெலிவர் செய்யும் இந்நிறுவனம், 10 நிமிடங்களில் டெலிவர் செய்யும் சேவையைத் தொடங்கியுள்ளது. இதற்காக Swiggy, Zomato, Blinkit, Zepto போன்ற தளங்களுடன் இணைந்திருக்கிறது.

Booozie பிராண்ட் Innovent Technologies Private Limited நிறுவனத்தின் முக்கிய பிராண்ட். இதன் நிறுவனர் விவேகானந்த். இந்நிறுவனம், 2022ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி அதன் மின்வணிக செயல்பாடுகளைத் தொடங்கியிருக்கிறது.

20,000 பயனர்களைக் கொண்டுள்ள Booozie தளம் 2,000-க்கு மேற்பட்ட லேபிள்களைக் கொண்டுள்ளது. சமீபத்தில் 15 நாட்களில் 1,000-க்கும் மேற்பட்ட ஆர்டர்களைப் பூர்த்தி செய்துள்ளதாக இந்த ஸ்டார்ட் அப் தெரிவிக்கிறது.

1

விவேகானந்த் - நிறுவனர், Booozie

இதுவரையிலான பயணம்…

Booozie 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறுவப்பட்டது. கோவிட்-19 சமயத்தில் 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் சோஷியல் டிரிங்கிங் மற்றும் எண்டர்டெயிண்மெண்ட் தளம் தொடங்கப்பட்டது.

விவேகானந்த் விமானம் ஓட்ட தகுதி பெற்ற ஒரு பைலட். மக்கள் பொதுவாக மது அருந்துவது பற்றி பொதுவெளியில் வெளிப்படையாக பேசத் தயக்கம் காட்டுவார்கள். எனவே, பயனர்கள் தங்களது அனுபவங்களையும், ரெசிபிக்களையும் பகிர்ந்துகொள்ளவும் பார்டெண்டர்களுடன் தொடர்பில் இருக்கவும் உதவும் வகையில் ஒரு தளத்தை இவர் உருவாக்க முடிவு செய்து இந்த முயற்சியைத் தொடங்கியுள்ளார்.

”சமூகத்தில் மது அருந்துவது தொடர்பான ஒரு தவறான கண்ணோட்டம் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. சமூகப் பொறுப்புடன் மக்கள் மது அருந்துவது ஏற்புடையது என்பதே என் கருத்து,” என்கிறார் நிறுவனர் விவேகானந்த்.

Booozie ஆண்ட்ராய்ட் செயலியில் 15,000 பதிவிறக்கங்கள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், iOS வெர்ஷனில் கிட்டத்தட்ட 3,500 பயனர்கள் இருக்கின்றனர்.

1

ஊரடங்கு சமயத்தில் மது வாங்குவது மிகப்பெரிய சிக்கலாக மாறியது. எனவே ஆல்கஹால் ஆர்டர் செய்தால் வீடுகளுக்கு கொண்டு போய் டெலிவர் செய்யும் வகையில் மின்வணிக தளம் உருவாக்க முடிவு செய்தார் விவேகானந்த்.

சுயநிதியில் இயங்கும் இந்த ஸ்டார்ட் அப் 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொல்கத்தா உரிமத்திற்கு விண்ணப்பித்திருந்தது. 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் டெலிவரி செயல்பாடுகளைத் தொடங்கியது.

அரசாங்கத்தின் முறையான வழிகாட்டல் நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்படும் திறன் இருக்கிறதா என்பதை அரசாங்கம் சரிபார்த்ததாக விவேகானந்த் தெரிவிக்கிறது. இந்த சேவையைப் பயன்படுத்தியோர் மற்றவர்களுக்கும் பரிந்துரைக்க வாடிக்கையாளர் வட்டம் விரிவடைந்துள்ளது.

“மது சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றி மக்கள் கலந்துரையாட Booozie உதவுகிறது. டெலிவரி சேவையளிக்கும் மின்வணிக தளமாக இது செயல்படுகிறது. இது மதுவிற்கான பிரத்யேக ஃபேஸ்புக் மற்றும் அமேசான் எனலாம்,” என்கிறார்.

நிறுவனத்திற்குள்ளாகவே லாஜிஸ்டிக்ஸ் ஏற்பாடுகளை செய்து வரும் லாஜிஸ்டிகஸ் மேலாண்மை தளம் Gokea. இந்தத் தளம் 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது.

ஹைப்பர்லோக்கல் மற்றும் 3 PL டெலிவரி ஆதரவு வழங்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. டெலிவரி செயல்முறையின் இறுதிப் பகுதி டெலிவரியை (last-mile deliveries) திறம்பட நிர்வகிக்க, எந்த ஒரு தளத்துடனும் இதை இணைத்துக்கொள்ள முடியும். Booozie அதன் டெலிவரிக்கு Gokea தளத்தைப் பயன்படுத்திக்கொள்கிறது.

3

10 நிமிடங்களில் டெலிவரி மாதிரி

10 நிமிடங்களில் டெலிவரி செய்யும் மாதிரியானது சமீபத்தில் மிகவும் பிரபலமாகி வருகிறது. இருப்பினும் டெலிவரி பார்ட்னர்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்காத வகையில் முன்னேற்பாடுகள் சிறப்பாக செய்யப்படுவதாக விவேகானந்த் தெரிவிக்கிறார்.

"பயனர்கள் எந்த இடைவெளியில் வாங்குகிறார்கள் என்பனபோன்ற தரவுகளை செயற்கை நுண்ணறிவு மூலம் ஆய்வு செய்து கணிக்கிறோம். அதற்கேற்ப பில்லிங் உட்பட அனைத்தையும் தயார்நிலையில் வைத்திருப்போம். டெலிவரி பார்ட்னர்கள் எப்போதும் லிக்கர் ஸ்டோர்களின் வெளியில் தயாராக இருப்பார்கள். மேலும், செயல்பாடுகளில் உதவ, ஒவ்வொரு ஸ்டோரிலும் ஸ்டோர் மேலாளர் ஒருவர் இருப்பார்,” என விவரித்தார்.

அவர் மேலும் கூறும்போது,

“இதுபோன்ற ஏற்பாடுகளால் ஒரு நிமிடத்திற்குள்ளாகவே டெலிவரிக்கு அனுப்ப முடிகிறது. இதனால் 10 நிமிடங்களில் டெலிவரி என்பது சாத்தியமாகிறது. எந்த ஒரு காரணத்திற்காகவும் ஓட்டுநர்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்,” என்கிறார்.

அதுமட்டுமல்ல நுகர்வோர் சட்டப்பூர்வமாக மது அருந்தும் வயதை எட்டியிருப்பதையும் இந்த ஸ்டார்ட் அப் உறுதி செய்கிறது.

“அடையாளத்தை சரிபார்க்கும் Hyperverge என்கிற மென்பொருளை இணைத்திருக்கிறோம். வாடிக்கையாளரின் ஆதார் அட்டையை செக் செய்து முக அடையாளம் சரிபார்க்கப்படும். அதே நபரிடம் மட்டுமே ஆர்டர் டெலிவர் செய்யப்படும்,” என்கிறார் விவேகானந்த்.

வணிக மாதிரி

Booozie தினமும் 400-500 ஆர்டர் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக தெரிவிக்கிறது. கொல்கத்தாவில் 18 மதுபான ஸ்டோர்களுடன் இணைந்துள்ளது. 45 டெலிவரி பார்ட்னர்களுடன் ஒப்பந்தமாகியுள்ளது.

வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைக்கும் டெலிவரி சார்ஜ் மூலம் வருவாய் ஈட்டப்படுகிறது என்பது தவிர கூடுதல் தகவல்களை நிறுவனர் பகிர்ந்துகொள்ளவில்லை.

“சட்டப்படி டெலிவரி கட்டணத்திற்கு ஜிஎஸ்டி வசூலிக்கிறோம். வேறு எந்தவித மறைமுக கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை,” என்கிறார்.

ஸ்டோர்களில் விற்பனை அளவின் அடிப்படையில் 2-5 சதவீதம் வரை இந்த ஸ்டார்ட் அப் கமிஷன் பெறுகிறது. மேலும், செயலியில் பட்டியலிடப்படுவதற்கு முன்னுரிமை அளிக்க மதுபான பிராண்டுகளிடம் கட்டணம் வசூலிக்கிறது.

1
“எங்கள் சராசரி ஆர்டர் மதிப்பு 700 ரூபாய்,” என்கிறார் விவேகானந்த்.

நிதி மற்றும் வருங்காலத் திட்டங்கள்

ஆல்கஹாலிக் பானங்கள் சந்தையைப் பொறுத்தவரை உலகளவில் இந்தியா வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.

கொல்கத்தாவில் பீர், விஸ்கி ஆகியவை அதிகம் விற்பனை செய்யப்படுவதாக விவேகானந்த் தெரிவிக்கிறார். Diageo, Bacardi போன்ற தயாரிப்பாளார்களுடன் Booozie நெருக்கமாக இணைந்து செயல்படுகிறது.

மின்வணிக செயல்பாடுகள் தொடங்கப்பட்ட பிறகு குடும்பத்தினரிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் இந்த ஸ்டார்ட் அப் சமீபத்தில் நிதி திரட்டியுள்ளது. மாநில அரசாங்கங்களின் ஒப்புதலுடன் இந்தியா முழுவதும் விரிவடைய திட்டமிட்டிருக்கிறது.

“L-13 உரிமம் வழங்குவதற்கான அறிவிப்பை டெல்லி அரசாங்கம் வெளியிட்டதும் டெல்லியில் Booozie மின்வணிக செயல்பாடுகள் தொடங்கும். ஜூன் மாத இறுதிக்குள் ஒடிசாவில் செயல்பட உரிமம் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம்,” என்கிறார் விவேகானந்த்.

ஆல்கஹால் மட்டுமல்லாமல் ஆல்கஹால் அல்லாத பிற பானங்களையும் சொந்த பிராண்டின்கீழ் அறிமுகப்படுத்த Booozie திட்டமிட்டிருக்கிறது.

“எங்களுக்கு இந்தத் துறையில் இருக்கும் நிபுணத்துவமே எங்களை போட்டியாளர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது,” என்கிறார் விவேகானந்த்.

ஆங்கில கட்டுரையாளர்: த்ரிஷா மேதி | தமிழில்: ஸ்ரீவித்யா