ரத்தத் தானம் செய்ய 500 கி.மீ பயணித்துள்ள நல்லுள்ளம் படைத்தவர்!
பச்சிளம் குழந்தையைப் பெற்ற ஒரு தாயின் உயிரைக் காக்க அரிய வகை ரத்தத்தை தானம் செய்ய இந்த இளைஞர் எங்கிருந்து-எங்கு சென்றார் தெரியுமா?
ரத்தத் தானம் செய்வது ஒரு வகையான உன்னதமான செயலாகவே கருதப்படுகிறது. இந்தியாவில் அன்றாடம் உயிர் காக்கும் பொருட்டு பலர் முன்வந்து ரத்தத் தானம் செய்து வருகின்றனர். அந்த வகையில் ரூர்கேலா பகுதியைச் சேர்ந்த திலீப் பாரிக் சமீபத்தில் ரத்த தானம் செய்வதற்காக ஒடிசாவின் பெர்ஹாம்பூர் நகருக்குப் பயணித்துள்ளார். பச்சிளம் குழந்தையைப் பெற்ற ஒரு தாயின் உயிரைக் காக்க இவர் 500 கிலோமீட்டர் வரை பயணித்துள்ளார்.
சபிதா ரைதா என்பவர் ஒடிசாவின் கன்ஜம் மாவட்டத்தில் உள்ள மண்டசிங்கி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடிப் பெண். சமீபத்தில் இவருக்கு எம்கேசிஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிசேரியன் முறையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இவருக்கு மிகவும் அரிய வகையான ‘பாம்பே ஏ பாசிடிவ்’ வகை ரத்தம் தேவைப்பட்டது.
இவருக்கு பிரசவம் முடிந்ததும் அதிக ரத்தப்போக்குக் காரணமாகவும் ஹீமோகுளோபின் அளவு குறைந்ததாலும் இவரது நிலை மிகவும் மோசமானதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக ’தி இந்து’ குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையில் இவருக்குப் பிறந்த குழந்தையின் எடை குறைவாக இருந்ததால் அருகில் உள்ள சிறப்புப் பராமரிப்பு பிரிவில் குழந்தையை சேர்த்துள்ளனர்.
சபிதாவிற்கு சிகிச்சையைத் தொடங்கியபோது அவரது ரத்தம் அரிய வகையைச் சேர்ந்தது என்பதை மருத்துவர்கள் தெரிந்துகொண்டனர். அரிய வகை ரத்தம் என்பதால் அருகில் எங்கும் கிடைக்கவில்லை. இந்த மருத்துவமனையின் ரத்த வங்கிக்கு பொறுப்பு வகிக்கும் டாக்டர் ராஷ்மிதா பனிகிரஹி, சபிதாவிற்கு பொருத்தமான ரத்தத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டார்.
ரஷ்மிதா முதலில் நகர் முழுவதும் தேடினார். பலனில்லை. இருப்பினும் தன் முயற்சியை நிறுத்திக்கொள்ளாமல் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். சபிதாவிற்கு உதவுமாறு வாட்ஸ் அப் குழுக்களில் கேட்டுக்கொண்டார்.
இறுதியாக புவனேஷ்வரைச் சேர்ந்த ரத்த தான குழு ஒன்றின் உறுப்பினரான திலீப் பதிலளித்து பெர்ஹாம்பூர் விரைந்தார். அவர் மருத்துவமனையை வந்தடைந்ததும் ரத்த தானம் வழங்கினார். உடனடியாக சபிதாவின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த அரிய வகை ரத்தம் இருக்கும் 2,50,000 பேரில் திலீப்பும் ஒருவர். ஒடிசா போஸ்ட் உடனான உரையாடலில் திலீப் கூறும்போது,
“ரத்த தானம் வழங்கி ஒருவருடைய உயிரை என்னால் காப்பாற்ற முடிந்ததை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்,” என்றார்.
கட்டுரை: THINK CHANGE INDIA