100 பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சியில் உருவான ப்ளூடூத் ஸ்பீக்கர்...
கலக்கிய லண்டன் ஸ்டார்ட்அப் இளைஞர்கள்!
பிளாஸ்டிக் சற்றுச்சூழலை அதிகம் பாதிக்கிறது என்பதை நாம் தினமும் கேட்டுக் கொண்டு இருக்கிறோம். நிலம் மட்டுமின்றி, நீர் நிலையங்கள், கால்நடைகள், நீர்வாழ் உயிரினங்கள் அதிக பாதிப்பு அடைகிறது. இதனால் பல மாநில அரசுகள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்தது. இருப்பினும் இன்னும் பிளாஸ்டிக்கை முழுமையாக ஒழிக்க முடியவில்லை. தினம்தோறும் ஏதொ ஒரு வகையில் பயன்பாட்டில் தான் இருக்கிறது.
பிளாஸ்டிக்கை எரித்தாலும் அந்த நச்சுப் புகையும் சுற்றுச்சூழலை மாசடையச் செய்யும். இதற்கு ஒரே தீர்வு முடிந்தவரை மறுசுழற்சி செய்வது தான். இதனால் லண்டனை சேர்ந்த கோமி என்னும் ஸ்டார்அப் டிசைன் ஸ்டுடியோ பிளாஸ்டிக்கை மறுச்சுழற்சி செய்து அதிலிருந்து ப்ளூடூத் ஸ்பீக்கரை உருவாக்கியுள்ளது.
இந்த ஸ்டார்ட்அப்’பின் நிறுவனர்களான டாம் மேட்ஸ், பவன் சுன்யா, ரிஷி குப்தா சுற்றுச்சூழலை பாதிக்காத எதோ ஒரு தொழிலை செய்ய வேண்டும் என்று விரும்பினர். இதனால் 2017 ’Gomi’ என்னும் நிறுவனத்தைத் துவங்கி, பயனில்லாமல் குப்பைக்கு செல்லும் பிளாஸ்டிக்குகளை வைத்து சிறிய உபயோகப்பொருளை தயார் செய்யும் முடிவுக்கு வந்தனர்.
குப்பைக்குச் செல்லும் பிளாஸ்டிக்குகளை பெற தங்களது யோசனைகளையும் திட்டங்களையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தில் சமர்ப்பித்து நிதி உதவி பெற்று அதன் மூலம் தொழில் நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் சேதாரமாகும் பிளாஸ்டிக் குப்பைகளை, தேவையில்லாத குப்பை என வீசப்படும் பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை சேகரித்து மறுசுழற்சி செய்துனர்.
இப்பொழுது அதிகபயன்பாட்டில் இருக்கும் ப்ளூடூத் ஸ்பீக்கரை முழுக்க முழுக்க மறுசுழற்சி செய்த பிளாஸ்டிக்கை வைத்து தயாரித்துள்ளனர்.
இவை அனைத்தும் மறுசுழற்சிக்கு தகுதி இல்லை என்று யுகே மறுசுழற்சி அமைப்பு நிராகரித்த பிளாஸ்டிக் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு ப்ளூடூத் ஸ்பீகர் 100 பிளாஸ்டிக் பைகளை வைத்து தயார்செய்யப்பட்டுள்ளது. அதாவது பிளாஸ்டிக் பைகளை உருக்கி, மார்பல் மாவு போன்ற தன்மைக்கு கொண்டுவந்த பின் ஸ்பீக்கரின் வடிவுக்கு மாற்றுகின்றனர். ஒரு ஸ்பீகர் செய்ய சுமார் 100 பிளாஸ்டிக் பைகள் தேவை என்றால் எவ்வளவு பிளாஸ்டிக் பைகள் குப்பைகளில் சேராமல் சூழலை பாதிக்காமல் இருக்கும் என பாருங்கள்.
அதுமட்டுமின்றி ஒவ்வொரு ஸ்பீகரும் தனித்தனியாக கையில் செய்யப்படுகிறது, இதனால் ஒவ்வொரு தயாரிப்பும் தனித்துவமானது. மேலும் இந்நிறுவனம் இலவச பழுதுப்பார்த்தல் மற்றும் எளிய ரிட்டர்ன் முறையையும் அறிமுகப்படுத்தியுள்ளது. சிறந்த சேவையும் அழகிய தோற்றமும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும். ஸ்பீகரின் பயன்பாடு முடிந்தபின் பாகங்களைப்பிரித்து மீண்டும் மறுசுழற்சி செய்யலாம். கடந்த ஆண்டு துவங்கி இப்போது ஆர்டர்கள் எடுக்கத் துவங்கிய நிலையில் இந்த ஸ்பீகருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர் நிறுவனர்கள்.
“இந்த ஸ்பீகரை உருவாக்க ஆடியோ வல்லுனர்கள், பொறியாளர்கள் என்று அனைவரோடும் இணைந்து 12 மாதம் உழைத்துள்ளோம். பார்ப்பதற்கு மட்டுமின்றி ஒலியிலும் எந்தவித குறைபாடும் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இறந்தோம்,” என designboomக்கு அளித்த பேட்டியில் தெரிவிக்கிறார் டாம்.
ஸ்பீகர்களோடு, போர்டபிள் பவர் பேங், வயர் இல்லா சார்ஜர்கள் ஆகியவற்றையும் மறுசுழற்சி பிளாஸ்டிக்கில் தயார் செய்ய உள்ளது இந்நிறுவனம். இதுபோன்று பூமிக்கு நன்மை தரும் ஸ்டார்ட் அப் சிந்தனை வரவேற்கத்தக்கது!
வலைத்தளம்: https://www.gomi.design/
கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின்