புலம்பெயர் தொழிலாளர்களுக்கு களத்தில் இறங்கி உதவிய நிஜ ஹீரோ!
மும்பையில் உள்ள தனது உணவகத்தை சுமார் 25,000 புலம்பெயர் தொழிலாளர்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார் பாலிவுட் ஸ்டார் சோனு சூட்.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பலதரப்பட்ட மக்களுக்கு பலர் உதவி வருகின்றனர். இதில் பிரபலங்களும் அடங்குவர்.
அந்த வகையில் பாலிவுட் நடிகர் சோனு சூட் பல்வேறு அறக்கட்டளைகளுக்கு நன்கொடை வழங்கியுள்ளார். அத்துடன் ஜுஹூவில் உள்ள தனது உணவகத்தை சுமார் 25,000 புலம்பெயர் தொழிலாளர்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.
புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்ப உதவும் வகையில் 10 பேருந்துகளை ஏற்பாடு செய்து கொடுத்து உதவியுள்ளார். இந்தப் பேருந்துகளில் சுமார் 350 தொழிலாளர்கள் கர்நாடகாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
“எப்படி உதவுவது என்று தெரியவில்லை என பலர் கூறுகின்றனர். ஆனால் எத்தனையோ வழிகளில் உதவி செய்யமுடியும். குழந்தைகள், வயதானவர்கள், இளைஞர்கள் என நூற்றுக்கணக்கானோர் அதிக சுமைகளை சுமந்தவாறு நடந்து செல்வதைப் பார்த்தேன். நான் அவர்களைத் தடுத்து நிறுத்தினேன். என்னால் முடிந்த ஏற்பாடுகளை செய்யும்வரை காத்திருக்குமாறு அவர்களிடம் கேட்டுக்கொண்டேன். சிலர் காத்திருந்தனர். சிலர் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். அப்போதிருந்து இவர்கள் ஊர் திரும்ப ஏற்பாடு செய்வதற்கான வழிமுறைகளை ஆராய்ந்தேன்,” என்று சோனு 'இந்துஸ்தான் டைம்ஸ்’ இடம் தெரிவித்துள்ளார்.
சோனு தொழிலாளர்களுக்கு மதிய உணவு, இரவு உணவு, ஸ்நாக்ஸ் போன்றவற்றையும் வழங்கியுள்ளார்.
போக்குவரத்துத் தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் உள்ளூர் காவல் நிலையம், மஹாராஷ்டிரா அரசாங்கம், மற்ற மாநில அரசாங்கங்கள் போன்றவற்றுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்துள்ளார்.
தொழிலாளர்களை வீட்டிற்கு அனுப்புவதற்கான அனுமதியை முறையாகப் பெற்றார். இவர்கள் சிகப்பு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதை உறுதி செய்து முறையான மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகே இவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்துள்ளார்.
கட்டுரை: THINK CHANGE INDIA