Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

தன் திருமண சேமிப்புப் பணத்தில் ஏழைகளுக்கு உணவளிக்கும் ஆட்டோ ஓட்டுனர்!

ஊரடங்கால் தவிக்கும் முதியவர்கள், கர்ப்பிணிகள் மருத்துவமனை செல்லவும் உதவி வருகிறார்.

தன் திருமண சேமிப்புப் பணத்தில் ஏழைகளுக்கு உணவளிக்கும் ஆட்டோ ஓட்டுனர்!

Wednesday May 27, 2020 , 1 min Read

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இரண்டு மாதங்களாகத் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த இரண்டு மாதங்களாகத் திட்டமிடப்பட்ட பல்வேறு நிகழ்வுகள் காலவரையின்றி தள்ளிவைக்கப் பட்டுள்ளன. சில நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


32 வயதான அக்‌ஷய் கோத்வாலே புனேவைச் சேர்ந்தவர். ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு இந்த மாதம் திருமணம் நடக்கவிருந்தது. ஊரடங்கு காரணமான பல்வேறு கட்டுப்பாடுகளாலும் சமூக விலகல் கடைப்பிடிக்கப்படுவதாலும் இவரது திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


அக்‌ஷய் தனது திருமணத்திற்காக இரண்டு லட்ச ரூபாய் சேமித்து வைத்திருந்தார். திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அவர் தான் சேமித்தத் தொகையைக் கொண்டு புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் ஏழை மக்களுக்கும் உணவளித்து வருகிறார்.

1

நண்பர்கள் உதவியுடன் தனது சேமிப்புத் தொகையை செலவிட்டு தினமும் சுமார் 400 பேருக்கு உணவு தயாரித்து வழங்குகிறார்.


அதுமட்டுமல்லாது முதியவர்கள், கர்ப்பிணிகள் போன்றோர் மருத்துவமனை செல்லவும் உதவி வருகிறார். ஆட்டோவில் ஒலிபெருக்கியைப் பொருத்திக்கொண்டு கொரோனா வைரஸை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

“ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து என்னுடைய திருமணத்திற்காக இரண்டு லட்ச ரூபாய் வரை சேமித்து வைத்திருந்தேன். ஆனால் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டதால் நானும் என் வருங்கால மனைவியும் திருமணத்தை ஒத்திவைக்கத் தீர்மானித்தோம்,” என்று பிடிஐ இடம் அக்‌ஷய் தெரிவித்தார்.

அக்‌ஷய் டிம்பர் மார்கெட் பகுதியில் வசிப்பவர். தனது நண்பர்களின் உதவியுடன் சமையலறை ஒன்றை அமைத்து சப்பாத்தியும் காய்களைக் கொண்டு செய்யப்படும் கறியையும் சமைத்து புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் ஏழை மக்களுக்கும் வழங்குகிறார்.

“பலர் ஒருவேளை உணவுகூட கிடைக்காமல் சாலைகளில் அவதிப்படுவதைப் பார்த்தேன். நானும் என் நண்பர்களும் தினக்கூலிகளுக்கும் ஏழை மக்களுக்கும் உதவ விரும்பினோம்,” என்று அக்‌ஷய் தெரிவித்ததாக என்டிடிவி குறிப்பிட்டுள்ளது.

கட்டுரை: THINK CHANGE INDIA