பிராண்டட் ஆடைகள், பங்களா, 20 விருதுகள்; ஆண்டுக்கு 30 லட்சம் வரி செலுத்தும் ‘ஹைடெக் விவசாயி’
நம் நாட்டில் லட்சக்கணக்கான விவசாயிகள், வறட்சியால் விவசாயமின்றி அழுது புலம்பி, விரக்தியில் பலர் அவர்களை மாய்த்துக் கொள்கின்றனர். வறட்சியின் தாக்கத்தினால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுள்ளன. ஆனால் மறுபுறம், ராம்சரண் வர்மா போன்ற பல விவசாயிகள், விவசாயத்தில் செழித்து வளர்ந்து, நல்லதொரு வருமானம் ஈட்டி மக்களின் கவனங்களையும் பெற்றுவருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
உத்தரபிரதேசத்தின் பராபங்கி மாவட்டத்தின் டவுலத்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராம்சரண் 300 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து, ஆண்டுக்கு ரூ.30 லட்சம் வருமானவரி தாக்கல் செய்யும் ‘வாழை கிங்’ விவசாயி. பிராண்டட் ஆடை உடுத்தி பங்களா வீட்டில் வாழ்ந்தாலும், அவருடைய பிளாஷ்பேக் போராட்டங்கள் நிறைந்ததே!
பால்ய வயதில் ராம்சரண் கல்வி கனவுகளைக் கொண்டிருந்தார். 10ம் வகுப்புக்குப் பிறகு உயர் படிப்பைத் தொடர வேண்டும் என்பதே அவரது விருப்பம். ஆனால் வீட்டிலிருந்த பொருளாதாரநிலை அவரை கலப்பையை பிடிக்க செய்து விவசாயத்தை மேற்கொள்ளத் தள்ளியது.
இப்போது, 50 வயதினை கடந்துள்ள அவர் 300 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து மாதத்திற்கு ரூ.3-4 லட்சம் வருமானம் ஈட்டி உ.பி.யின் ’ஹைடெக் விவசாயி’ என்று அழைக்கப்படுகிறார்!
‘ஜக்ஜீவன் ராம் கிசான் புருஸ்கர்’ உட்பட மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் 20 விருதுகளை பெற்றுள்ளார். டவுலத்பூரில் உள்ள அவருடைய விவசாய நிலத்தை காண இந்தியா முழுவதிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் குவிகின்றனர்.
ஒரு இளம் விவசாயியாக ராம் அவருடைய குடும்பத்தொழிலான விவசாயத்தில் முதன்முதலில் காலடி வைத்தபோது, பாரம்பரிய விவசாயியான அவருடைய தந்தை அரிசி மற்றும் கோதுமையுடன், கரும்பும், கடுகும் பயிரிட்டு வந்துள்ளார். உற்பத்தி செலவு அதிகம், அதற்குத் தேவையான உழைப்பும் அதிகம், ஆனால் வருமானமென எந்த லாபத்தையும் அவர் ஈட்டவில்லை.
பாரம்பரிய விவசாயத்திலிருந்து விலகி, விளைச்சலை அதிகரிக்க புதுமையான நுட்பங்களைப் உட்புகுத்த முடிவு செய்தார் ராம்சரண். இதற்காக, 1984ம் ஆண்டில், சிறுக சிறுக ரூ.5,000 சேகரித்து, விவசாயத்தில் வெற்றி அடைந்தோர்களையும், வேளாண் நிபுணர்களை சந்திக்கக் கிளம்பினார்.
ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு சென்று வெற்றிகரமான விவசாயிகள், விவசாய விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களுடன் கலந்து உரையாடினார். இருஆண்டு பயணத்திற்கு பின், சொந்த ஊர் திரும்பிய அவர் வாழைத் தோட்டம் அமைப்பது குறித்து அவருடைய தந்தையிடம் கூறியுள்ளார். ஆனால், ராமின் தந்தை அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. ஆயினும்கூட,
ராம்சரண் முனைப்புடன் ஒரு ஏக்கர் நிலத்தில் வாழைமரங்களை செய்ய முடிவு செய்தார். முதல் ஆண்டிலேயே, அவர் லாபம் சம்பாதிக்கத் தொடங்கினார். அத்துடன், திசு வளர்ப்பு வாழைப்பழ சாகுபடி செய்த மாநிலத்தின் முதல் விவசாயி என்ற பெருமையும் பெற்றார்.
நோய் தாக்காத தரமான தாய் மரத்தில் இருந்து எடுக்கப்பட்ட வாழைக்கன்றினை திசு வளர்ப்பு சோதனைக்கூடத்தில் கண்ணாடி குழாயில் குறிப்பிட்ட தட்பவெப்ப நிலையில் வைத்து, ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான கன்றுகளை உருவாக்குவது தான் திசு வளர்ப்பு முறை. திசு வளர்ப்பு முறையில் கன்றுகளை உற்பத்தி செய்து, நடவு செய்கையில் குறுகிய காலத்தில் அதிக மகசூலை பெற உதவுகின்றது.
இந்தமுறையில் வரும் பழங்கள் எந்தவித புள்ளிகளோ, கீறல்களோ, அழுகலோ இல்லாமல், பார்ப்பதற்கு பளபளப்பாகவும் ஒரே அளவுடனும் இருக்கும். அதனால், மார்க்கெட்டிலும் திசு வாழைப் பழங்களுக்கு நல்ல மவுசு. விவசாயிகள் அவற்றை ஏற்றுமதி செய்வதன் மூலம் கூடுதல் லாபத்தையும் ஈட்ட முடியும்!.
ஒரு ஏக்கர் வாழைத்தோட்டத்தில் 400 குவிண்டால் வாழைப்பழங்கள் கிடைத்துள்ளன. ஒரு லட்ச ரூபாயை ஆரம்ப முதலீடாகக் கொண்டு வாழையை பயிரிட்ட அவருக்கு 14 மாதங்களின் முடிவில் ஆரம்ப முதலீட்டை விட நான்கு மடங்கு அதிகமாக ரூ.4 லட்சத்துக்கு மேல் லாபம் கிடைத்துள்ளது.
தவிர, புரதம், நார்ச்சத்து மற்றும் சர்க்கரை குறைவாக உள்ள சிவப்பு வாழைப் பழங்களையும் வளர்க்கத் தொடங்கினார். தென் மாநிலங்களில் செவ்வாழை பிரபலமாக இருந்தாலும், ராம் அவற்றை உத்திர பிரதேசத்தில் முதலில் வளர்க்க முயன்றார். அவர் 2012ம் ஆண்டில் அவரது தோட்டத்தில் செவ்வாழை ரகத்தில் 1,000 வாழைக்கன்றுகளை நட்டுள்ளார். செவ்வாழை காய் காய்ப்பதற்கு 18 மாதங்கள் எடுத்து கொண்டாலும், மார்க்கெட்டில் ஒருகிலோ பழம் 80-100 ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.
வழக்கமான மஞ்சள் நிற வாழை 14 மாதங்களிலே காய்த்தாலும், அதன் பழம் ஒரு கிலோவுக்கு ரூ.15 மட்டுமே விலைக்கு போகியது. ராம்சரணின் தோட்டத்தில் செவ்வாழையின் மகசூல் குறைவாக இருந்தபோதிலும், ஒரு கிலோவிற்கு அவருக்கு கிடைத்த லாபம் பாரம்பரிய வகையின் வருவாயை விட அதிகமாக இருந்துள்ளது. இதனால் இளம் விவசாயி நிறுத்தவில்லை; அவர் தனது சோதனைகளைத் தொடர்ந்தார்.
லாபகரமான விவசாயத்திற்கு மனிதன் உறுயளித்து பரிந்துரைக்கும் ஒரு விவசாயமுறை என்றால், அது பயிர் சுழற்சி. தொடர்ச்சியான பருவங்களில் ஒரே பகுதியில் வெவ்வேறு வகையான பயிர்களை வளர்க்கும் நுட்பமாகும் அது. இது மண் அரிப்பைக் குறைப்பது மட்டுமல்லாமல் மண்ணின் வளத்தையும் பயிர் விளைச்சலையும் அதிகரிக்கும். ராம்சரணும் பயிர் சுழற்சியை மேற்கொண்டார்.
வாழைப்பழங்களை அறுவடை செய்தபின் அவர் 90 நாட்களுக்கு உருளைக்கிழங்கையும், அதன்பிறகு 120 நாட்களுக்கு கலப்பின தக்காளியையும், பின்னர் 90 நாட்களுக்கு புதினாவையும் வளர்த்துள்ளார். இந்த சுழற்சி இன்றுவரை தொடர்ந்து மேற்கொள்கிறார். தொழில்நுட்பம், தரம், பயிர் சுழற்சி - இவையே பள்ளிப் படிப்பினை முடிக்காத வெற்றிகர விவசாயின் மூன்று மந்திரங்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐந்து பயிர்களைச் சுழற்றி முறையில் பயிரிட்டுள்ளார் அவர். இதுதான் ஒரு பயிரில் எந்த மந்தநிலையையும் தடுக்கவும் அவருக்கு உதவி உள்ளது.
“நீங்கள் ஐந்து வெவ்வேறு பயிர்களை வளர்த்தவுடன், ஏற்றத் தாழ்வுகளை தானாகவே கவனித்துவிடலாம். உதாரணமாக, வாழைப்பழத்தின் விலை குறைந்துவிட்டால், உருளைக்கிழங்கின் விலை உயர்ந்திருக்கும். அதேபோல், தக்காளியின் அதிக மகசூல் அதன் விலையில் வீழ்ச்சியை சந்திக்க போதுமானதாக இருந்தது,” என்று அவர் விளக்குகிறார்
தற்போது, ராம்சரண் 125 ஏக்கரில் ஹைடெக் முறையில் தக்காளி பயிரிட்டு வருகிறார். ஒரு ஏக்கருக்கு சுமார் 4 நூறு குவிண்டால் தக்காளி உற்பத்தி செய்து ஏக்கருக்கு ரூ.2,00,000 ரூபாய் வருமானம் ஈட்டுகிறார். ராம்சரண் குடும்பத்திற்கு வெள்ளை மாளிகை போன்ற ஒரு மாளிகையும் உள்ளது.
ஜாலியான வாழ்க்கைமுறையை பின்பற்றும் அவர் நாள்தோறும் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பிராண்டட் ஆடைகளையே அணிந்து கொள்கிறார். அவருடைய நிலத்தினையும், மாளிகையையும் பாதுகாப்பதற்காகவே, சிறந்த இனத்தைச் சேர்ந்த நாய்களையும் வளர்க்கிறார். லட்சங்களில் வருவாய் ஈட்டும் அவர், ஆண்டுக்கு 30 லட்சத்திற்கு வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்கிறார்.
1986ம் ஆண்டில் 1 ஏக்கர் நிலத்தில் தொடங்கி இன்று 150 ஏக்கரில் விவசாயம் செய்யும் அளவிற்கு வளர்ந்த அவருடைய மகத்தான வெற்றி, மாநிலத்தின் 50 மாவட்டங்களிலும் உள்ள விவசாயிகளின் கவனத்தை ஈர்த்தது. உதவி கேட்டு வந்த அனைவருடனும் அவர் செயல்படுத்தும் நுட்பங்களை பகிர்ந்து கொள்ள முடிவு செய்தார். அவருடைய கிராமத்தில் உள்ள பல விவசாயிகள் அவர்களது நிலங்களை ராமுக்கு குத்தகைக்கு விட்டுள்ளனர். அங்கு அவர் ஹைடெக் விவசாயத்திலிருந்து மற்றவர்களும் பயனடைய உதவுகிறார். கிடைக்கும் மகசூல் மற்றும் இலாபங்களை குத்தகைக்கு விட்டோர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்.
இம்முறையின் மூலம், அவரது அண்டை மாவட்டங்களில் உள்ள சுமார் 50,000 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விவசாயிகளுக்கு பயிற்சியும் வழங்குகிறார்.
“இன்று வரை எங்களது பண்ணையை பார்வையிட 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகை தந்துள்ளனர். ஆனால் எனது கிராமத்தில் உள்ளவர்கள் வேலை தேடி நகரங்களுக்கு குடிபெயரவில்லை என்பதே எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. அதற்கு பதிலாக, நகரங்களில் இருந்து மக்கள் வேலைக்காக எங்கள் கிராமத்திற்கு வருகிறார்கள். 150 ஏக்கரில் 20,000 ஆண்களும் பெண்களும் வேலை செய்கிறார்கள். தினமும் நல்ல ஊதியம் பெறுகிறார்கள். இது தவிர, எங்கள் நுட்பங்களைப் பயன்படுத்தும் பெரும்பாலான விவசாயிகள் லாபம் ஈட்டுகின்றனர்,” என்று தி பெட்டர் இந்தியாவிடம் தெரிவித்துள்ளார்.
அவருடைய சகாக்களை அவருடன் இணைத்துக் கொள்ளும் பொருட்டு, இத்தொழில்நுட்ப ஆர்வமிக்க விவசாயி http://www.vermaagri.com/ என்ற வலை தளத்தையும் தொடங்கினார். இதில் பல்வேறு விவசாய முறைகளும், உதவிக்குறிப்புகள் பற்றிய தகவல்களும் உள்ளன. இத்தளத்தினை ஒவ்வொரு நாளும் 1.5லட்சம் பேர் பார்வையிடுகின்றனர். உலகம் விவசாயிகளைப் பார்க்கும் விதத்தையும், விவசாயத்தை ஒரு தொழிலாக உலகத்தார் எவ்வாறு கருதுகிறார்கள் என்பதையும் மாற்றுவதை அவர் நோக்கமாகக் கொண்டுள்ளார்.
“உங்கள் கைகள் அழுக்காகுவதை எண்ணி வெட்கப்பட வேண்டாம். நாம் உழைக்கும்போது நன்மைகளை அறுவடை செய்கிறோம். பயிர் சுழற்சி மூலம் மண்ணின் தரத்தை பராமரிப்பது முக்கியம். உங்கள் பகுதியில் உள்ள காலநிலையைப் புரிந்து கொண்டு நல்ல தரமான, சொந்த வகை விதைகளைப் பயன்படுத்துங்கள். உங்களை நீங்கள் பரிசோதித்து கொள்ளத் தயார் என்றால், உங்களது 100சதவீத உழைப்பை விதையுங்கள் விவசாயம் உங்களுக்கு லாபத்தை மட்டுமே தரும்,” என்கிறார்.
தகவல் உதவி: thebetterindia.com