‘தையல் இயந்திரம் மிதித்த தாயின் கனவு’ - நீட் தேர்வில் பாஸ் ஆகி மருத்துவம் படிக்கப் போகும் அண்ணன் - தங்கை
வேதாரண்யம் அருகே நீட் தேர்வு எழுதிய அண்ணன், தங்கை இருவரும் ஒரே ஆண்டில் மருத்துவராகும் வாய்ப்புள்ள கிடைத்துள்ளது.
வேதாரண்யம் அருகே நீட் தேர்வு எழுதிய அண்ணன், தங்கை இருவரும் ஒரே ஆண்டில் மருத்துவராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தங்கை இருவரும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கான சீட் பெற்றுள்ளது சோசியல் மீடியாவில் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.
தையல் இயந்திரமும், தாயின் கனவும்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த நெய்விளக்கு கிராமத்தைச் சேர்ந்த வீராசாமி- ராணி தம்பதியரின் மகன் ஸ்ரீபரன், மகள் சுபஸ்ரீ அண்ணன், தங்கை இருவரும் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி முதல் முயற்சியிலேயே தேர்வு பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து உள்ளனர்.
பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள வீராசாமி, விவசாயக் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். 2016ம் ஆண்டு, மூட்டை தூக்கும் தொழில் செய்யும் போது விபத்து ஏற்பட்டு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்ததை தொடர்ந்து வீட்டிலேயே முடங்கியுள்ளார்.
இவரது மனைவி ராணி தையல் வேலை மற்றும் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு குடும்பத்தை நடத்தி வருகிறார். தனது ஒருவரது வருமானத்தைக் கொண்டே உடல் நலம் பாதிக்கப்பட்ட கணவன் மற்றும் பிள்ளைகளின் படிப்புச் செலவை கவனித்து வந்துள்ளார். ராணிக்கு தனது மகன், மகள் இருவரையும் மருத்துவராக்க வேண்டும் என்ற கனவு சிறுவயதில் இருந்தே இருந்து வந்துள்ளத.
வறுமையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட கணவனை பராமரித்து வருவதால் அந்த கனவை நனவாக்க கடுமையாக உழைக்க ஆரம்பித்துள்ளார். கடுமையான ஏழ்மை நிலையிலும் கூட பிள்ளைகள் இருவரையும் மருத்துவராக்க முயன்றுள்ளார்.
இரவு பகல் பாராமல் வீட்டில் உள்ள தையல் இயந்திரத்தல் மின் மோட்டாரை கூட சரி செய்ய முடியாத நிலையில், காலால் மிதித்து தைத்து அதில் வரும் சிறு வருமானத்திலும், ஆடுகள் வளர்த்தும் பிள்ளைகளின் படிப்பு செலவை பார்த்து வந்துள்ளார்.
ஏழ்மையிலும் சாதனை:
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை வீட்டுக்கு அருகில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியிலும் பின்பு தேத்தாகுடி தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று உள்ளனர். பின்பு ஆயக்காரன்புலம் பெண்கள் மேல்நிலைபள்ளியில் சுபஸ்ரீயும், பட்டுகோட்டை தனியார் பள்ளியில் ஸ்ரீ பரனும் படித்து உள்ளனர் .
ஸ்ரீபரன் நீட் தேர்வில் 438 மதிப்பெண்ணும், சுபஸ்ரீ 319 மதிப்பெண்ணும் பெற்று உள்ளனர். இதில், சுபஸ்ரீ 7.5 சதவீத இட ஒதுக்கிடு மூலம் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியிலும், ஸ்ரீபரன் கன்னியாகுமாரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது.
ஆடு வளர்ப்பும், தையல் தொழிலும் செய்து பிள்ளைகளை மருத்துவர்களாக்கிய இந்த பெற்றோரை நெய் விளக்கு பகுதி மக்களும், பள்ளி ஆசிரியர்களும் நேரில் வந்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
வசதி படைத்தவர்கள் குழந்தைகளுக்கு என தனி அறை ஒதுக்கி அதில் அனைத்து வசதிகள் அமைத்து கொடுத்து, கோச்சிங் செண்டரில் பயிற்சி கொடுத்தும் பல மாணவர்களால் நீட் தேர்வில் தேர்ச்சி அடைய முடியாத நிலையில், கிராமத்தில் கூரை வீட்டில் மழை நீர் வீட்டுக்குள் ஊற்றும் நிலையில் படித்து இரண்டு மாணவர்களும் ஒரே ஆண்டில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தது அனைத்து தரப்பினராலும் பாராட்டப்படுகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு வீசிய கஜா புயலில் வீராசாமியின் குடிசை வீடு சேதமடைந்தது அந்த வீட்டை கூட இன்னும் சரி செய்யாத நிலையில் உள்ளார்.
டாக்டர் ஆக்க ஆசைப்பட்ட அப்பா இன்று இல்லை; சோகத்திலும் நீட் தேர்வில் சாதித்த ஈரோடு மாணவி!