டாக்டர் ஆக்க ஆசைப்பட்ட அப்பா இன்று இல்லை; சோகத்திலும் நீட் தேர்வில் சாதித்த ஈரோடு மாணவி!
மருத்துவ படிப்பிற்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டில் கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியை சேர்ந்த அரசு பள்ளி மாணவி 518 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மருத்துவப் படிப்பிற்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டில் கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி 518 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
சாதனை படைத்த நெசவுத்தொழிலாளி மகள்:
அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் மருத்துவப் படிப்புற்காக 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கோபி அருகே உள்ள பொம்மன்பட்டியை சேர்ந்த வேலுச்சாமி, கோடீஸ்வரி தம்பதியரின் மகன் தேவதர்ஷினி. வேலுச்சாமி கைத்தறி நெசவு தொழிலும், அவரது தாய் கோடீஸ்வரி அய்யம்பாளையத்தில் உள்ள அங்கன்வாடி மைய உதவியாளராகவும் வேலை செய்து வருகின்றனர்.
தேவதர்சினி கவுந்தப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2020-21 ம் ஆண்டு 12ம் வகுப்பு படித்துள்ளார். மகளை மருத்துவராக்கி பார்க்க வேண்டும் என்பது வேலுச்சாமியின் நீண்ட கனவாக இருந்து வந்துள்ளது.
எனவே, தனது மகளை பெயர் சொல்லி அழைக்காமல், ‘டாக்டர்’ என்றே அழைத்து வந்துள்ளார். அதேபோல், தன்னை கஷ்டப்பட்டு படிக்க வைக்கும் தனது தந்தையின் ஆசை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் தேவதர்ஷினியும் கடுமையாக படித்து வந்துள்ளார்.
இன்ஜினியரிங் படிப்பு:
2021ம் ஆண்டு 12ம் வகுப்பு தேர்வெழுதிய தேவதர்ஷினி 576 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இதனையடுத்து, அதே ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 180 மதிப்பெண்கள் பெற்றதால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காமல் போனது.
எனவே, இன்ஜினியரிங் படிக்க முடிவெடுத்து, கோவைத் தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். கொரோனா காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டிருந்ததால் வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலமாக வகுப்புகளிலும் பங்கேற்றுள்ளார்.
ஆனால் தந்தையின் கனவை நிறைவேற்ற முடியவில்லையே என்ற வருத்தம் தொடர்ந்து இருந்து வந்துள்ளது. இதனிடையே, தேவதர்ஷினி படித்த பள்ளியின் ஆசிரியர்களும் தொடர்ந்து முயற்சி செய்தால் அடுத்த முறை நிச்சயம் மருத்துவ படிப்பதற்கான சீட் கிடைக்கும் என ஊக்கமளித்துள்ளனர்.
எனவே, பொறியியல் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, நாமக்கல்லில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்துள்ளார். இதுகுறித்து தேவதர்ஷினி கூறுகையில்,
“அம்மா தறி நெசவு செய்து தான் என்னை படிக்க வைச்சாங்க. இந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள அப்பா இல்லை என்பது வருத்தமாக இருந்தாலும், அவருடைய ஆசியால் தான் எனக்கு மருத்துவராகும் வாய்ப்பு கிடைத்ததாக நினைக்கிறேன். நான் மருத்துவரான பிறகு என்னைப் போல் கஷ்டப்படும் குடும்பத்தைச் சேர்ந்த ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவுவேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
தந்தையின் மரணம்:
நீட் பயிற்சி வகுப்பு மட்டுமின்றி தினமும் 15 மணி நேரத்திற்கும் மேலாக படித்து, நன்றாக தயார் ஆன தேவதர்ஷினி இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை எழுதியுள்ளார். நேற்று நீட் தரவரிசைப் பட்டியல் வெளியான நிலையில், 518 மதிப்பெண்கள் பெற்று அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
ஆசிரியர்களின் சொல்லைத் தட்டாமல் முயற்சி செய்து சாதித்துக்காட்டிய மாணவியை அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சக மாணவிகள் ஆரத்தழுவி பாராட்டியுள்ளனர்.
தேவதர்ஷினியின் தாயார் கோடீஸ்வரி கூறுகையில்,
“என் பொண்ணு நீட் தேர்வில் 518 மதிப்பெண்கள் பெற்று அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் முதலிடம் பிடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. காலையில் அங்கன்வாடி வேலை, மாலையில் தறி நெசவு என இரண்டையும் செய்துதான் பிள்ளைகளை வளர்த்து வருகிறேன். இன்று என் மகள் படைத்த சாதனைக்கு அவளுடைய அப்பாவின் ஆசீர்வாதம் தான் காரணம்,” என்கிறார்.
ஆனால், மகளை மருத்துவராக்க வேண்டும் என்ற ஆசையுடன் காத்திருந்த தேவதர்ஷினியின் தந்தைக்கு தான் அதனைக் கொண்டாடும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது. கடந்த 6 மாதத்திற்கு முன்பு மாராடைப்பால் காலமாகிவிட்டார்.
இன்று தர வரிசைப்பட்டியலில் மாநில அளவில் முதலிடம் பெற்று மருத்துவப் படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டாலும், அதை பார்க்க தந்தை இல்லை என்பதை நினைத்து தேவதர்ஷினி கண் கலங்கினாலும், அவரது ஆசையை நிறைவேற்றப்போவதை எண்ணி மகிழ்ச்சி அடைந்துள்ளார்.