Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

100 சதுர அடி அலுவலகத்தில் துவங்கி 300 கோடி ரூபாய் மதிப்பு வணிகத்தை உருவாக்கியுள்ள சகோதரர்கள்!

பல பிரபல ஆடம்பர ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் குளியலறைப் பொருட்கள் மற்றும் விருந்தினர்களின் வசதிக்காக வழங்கப்படும் இதர பொருட்களைத் தயாரிக்கும் இந்தூரைச் சேர்ந்த நிறுவனம்.

100 சதுர அடி அலுவலகத்தில் துவங்கி 300 கோடி ரூபாய் மதிப்பு வணிகத்தை உருவாக்கியுள்ள சகோதரர்கள்!

Monday March 11, 2019 , 6 min Read

மேரியட், ஹில்டன், ஷெரட்டன் ஆகிய ஹோட்டல்களில் தங்கியபோது உங்களுக்கு கொடுக்கப்பட்ட சிறிய சோப்பு, ஷவர் ஜெல் ஆகியவற்றை பயன்படுத்தியது நினைவிருக்கிறதா? இந்த ஹோட்டல்களின் குளியலறைப் பொருட்களைத் தயாரித்தவர்கள் இந்தூரைச் சேர்ந்த Kimirica Hunter நிறுவனமாகவே இருக்கக்கூடும்.

இந்த ஸ்டார்ட் அப் ஆடம்பர ஹோட்டல்களுக்கான குளியலறைப் பொருட்களைத் தயாரிக்கிறது. அத்துடன் உலகம் முழுவதும் விருந்தோம்பல் பிரிவில் செயல்படும் வாடிக்கையாளர்களும் இந்நிறுவனத்துக்கு உள்ளனர். எனவே நீங்கள் பணி நிமித்தமாக அடிக்கடி பயணம் செய்பவர் எனில் நிச்சயம் Kimirica தயாரிப்புகளைப் பயன்படுத்தியிருப்பீர்கள்.

சகோதரர்களான 34 வயதான ரஜத் ஜெயின் மற்றும் 31 வயதான மோஹித் ஜெயின் இருவரும் 2013-ம் ஆண்டு இந்நிறுவனத்தை அறிமுகப்படுத்தியபோது 100 சதுர அடி கொண்ட அறையில் இருந்தே செயல்படத் துவங்கினர். இவர்களுக்கு கடன் இருந்தது. மிகப்பெரிய நிதி நெருக்கடியில் இருந்தனர். அத்தகைய கடினமான சூழலில் தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து ஆடம்பர ஹோட்டல்களுக்கான குளியலறை பொருட்களைத் தயாரிக்கும் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ச்சியடைவார்கள் என்பதை அப்போது அவர்கள் அறிந்திருக்கவில்லை.

Kimirica Hunter தற்போது 300 கோடி ரூபாய் மதிப்புடைய நிறுவனமாகும். கிட்டத்தட்ட 90 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. மேரியட், ஸ்டார்ட்வுட், ஹில்டன், ஜுமைரா, ஹையாத், சோபிடெல், புல்மேன் போன்ற பல்வேறு கிளைகளைக் கொண்ட ஹோட்டல்கள் மற்றும் பல தனிப்பட்ட ஆடம்பர ஹோட்டல்களுக்கு சேவையளிக்கிறது.

2017-ம் ஆண்டு விருந்தோம்பல் துறைச் சார்ந்த பொருட்கள் தயாரிப்பாளரான ’ஹண்டர் அமெனிட்டீஸ்’ நிறுவனத்துடன் Kimirica கூட்டு முயற்சிக்கு கையொப்பமிட்டது. இதன் வாயிலாகவே கிமிரிகர் ஹண்டர் என்கிற பெயர் வைக்கப்பட்டது.

இந்த சகோதரர்களின் குடும்பத்தினர் ஆயுர்வேத மருந்துகள் தொடர்பான வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன் வாயிலாக உந்துதல் பெற்று இவர்கள் வெற்றியடைந்து இருக்கலாம். அல்லது ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் குளியலறைப் பொருட்கள் துறையில் இருக்கும் இடைவெளியை நிரப்பமுடியும் என்கிற நம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் செயல்பட்டதும் இவர்களது வெற்றிக்குக் காரணமாக அமைந்திருக்கலாம். பல்வேறு காரணிகள் சரியான நேரத்தில் ஒருசேர அமைந்ததால் விருந்தோம்பல் பிரிவில் இந்தச் சகோதரர்களின் தொழில்முனைவு முயற்சி சிறப்பித்தது.

தொழில்முனைவு திட்டம் எப்படி உருவானது?

தொழில்முனைவு முயற்சியைத் துவங்குவதற்கு முன்பு மோஹித் இந்தியாவில் மூலிகைகள் கொண்டு உருவாக்கப்படும் சரும பாதுகாப்பு பிராண்டை அறிமுகப்படுத்துவது குறித்து ஆராய்ந்தார். ரஜத்திற்கு மருந்தகத்தின் பின்னணி இருந்ததுடன் இவர்களது குடும்பமும் ஆயுர்வேத வணிகத்தில் ஈடுபட்டிருந்தது. எனவே சொந்தமாக மூலிகை சார்ந்த சருமப் பராமரிப்புப் பொருட்களை தயாரிக்கலாம் என எண்ணினார்கள்.

”ஆரம்பத்தில் அனைத்தும் எளிதாக இருப்பது போல் தோன்றியது. ஆனால் பத்து மாதகால தீவிர ஆய்விற்குப் பிறகு சில்லறை வர்த்தக தளங்களில் அறிமுகப்படுத்த வேண்டுமானால் சருமம் மற்றும் தலைமுடி சாரந்த ஒவ்வொரு குறிப்பிட்ட பிரச்சனைக்கும் ஒவ்வொரு வகை தயாரிப்பு என பல்வேறு வகை தயாரிப்புகள் அவசியம் என்பதை உணர்ந்தோம்,” என்றார் Kimirica Hunter இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் ரஜத் ஜெயின்.

”எங்களுக்கு அதிக நேரமும் மார்கெட்டிங் நடவடிக்கைகளுக்கு அதிகளவு பணமும் தேவைப்பட்டது. போதுமான நிதி இல்லாத காரணத்தால் சிறியளவில் துவங்குவது குறித்து ஆராய்ந்து வந்தோம்,” என்றார்.

”தீவிர விவாவத்தில் ஈடுபட்டிருந்தபோது முன்பு நாங்கள் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தது எங்கள் நினைவிற்கு வந்தது. அங்கு நாங்கள் பயன்படுத்திய சிறியளவிலான குளியலறை பொருட்கள் குறித்து சிந்தித்தோம். உடனடியாக இந்தப் பிரிவில் செயல்படவேண்டும் என்கிற உந்துதல் ஏற்பட்டது,” என்றார் ரஜத்.

சகோதரர்கள் இருவரும் சந்தையை ஆய்வு செய்யத் தொடங்கினார்கள். இந்த செயல்முறையின்போது விருந்தினர்களின் வசதிக்காக சர்வதேச ஹோட்டல் பிராண்டுகள் வழங்கும் 70 சதவீதத்திற்கும் அதிகமான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதை கவனித்தனர்.

”இறக்குமதி செய்யும்போது பல்வேறு சவால்களை சந்திக்க நேரிடும் என்பதை ஹோட்டல்கள் நன்கறியும். நாணய மதிப்பில் ஏற்ற இறக்கம், இறக்குமதிக்கான அனுமதி தொடர்பான சிக்கல்கள், இறக்குமதிக்கான கட்டணம், குறைந்தபட்ச இருப்பு ஆர்டர்கள் போன்ற சிக்கல்கள் இதில் அடங்கும். உள்ளூரில் கிடைக்கும் பொருட்கள் பல்வேறு வகைகளில் இருப்பதால் ஹோட்டல்களுக்கு அவை திருப்தியளிப்பதாக இல்லை,” என்றார் ரஜத்.

மேலும் ஹோட்டல்களும் ரிசார்டுகளும் வெவ்வேறு அமைப்பையும் சூழலையும் கொண்டிருப்பதை இந்த சகோதரர்கள் கண்டனர். இத்தகைய வேறுபாடுகள் இருப்பினும் அனைத்து ஹோட்டல்களிலும் வழக்கமான பிராண்ட்களே இருப்பதையும் கவனித்தனர்.

இந்தப் பகுதியில் இடைவெளி இருப்பதை அவர்களால் தெளிவாக உணரமுடிந்தது. எனவே ஹோட்டல்களின் தனித்தேவைக்கேற்றவாறு பொருட்களை தயாரித்து பல கிளைகள் கொண்ட ஹோட்டல்களுக்கு விற்பனை செய்யத் தீர்மானித்தனர்.

“ஹோட்டலின் பிராண்ட் இமேஜ் மற்றும் பட்ஜெட்டிற்கு ஏற்றாற்போல செயல்படவேண்டும் என்பதே எங்களது நோக்கம். ஹோட்டல்கள் எங்களிடம் உள்ள இருப்பைக் கொண்டு அவர்களது பிராண்டிற்குப் பொருத்தமானதைத் தேர்வு செய்துகொள்ளலாம்,” என்றார்.

இவ்வாறான தேவைகளைத் தெரிந்துகொண்ட பின்னர் சகோதரர்கள் இருவரும் ஷாம்பூ, லோஷன், ஷவர் ஜெல், கண்டிஷனர் போன்ற திரவ பொருட்களை முதலில் தயாரிக்கத் துவங்கினர். அத்துடன் சோப்பு, லூஃபா, பல் மற்றும் ஷேவிங் கிட், மசாஜ் எண்ணெய் போன்ற பொருட்களையும் தயாரிக்கத் துவங்கினார்கள்.

”நாங்கள் Kimirica Bespoke Amenity Programme வடிவமைத்தோம். இதில் தனித்தேவைக் கேற்றவாறான பிரத்யேகமான நறுமணங்கள் மற்றும் தனித்தேவைக்கேற்ற லேபிள்களை தயாரிக்கிறோம். அத்துடன் பேக்கேஜிங் செய்வதற்கு பாட்டில்கள், மூடி, ட்யூப் போன்றவற்றை ஹோட்டல்கள் தேர்வு செய்ய பல்வேறு வகைகளை வழங்குகிறோம். ஹோட்டல்கள் அவர்களது விருந்தினர்களுக்கு தனித்துவமான, மறக்கமுடியாத பொருட்களை வழங்க உதவுவதே எங்களது நோக்கம்,” என்றார் ரஜத்.

ஆனால் அனைத்தும் எளிதாக சாத்தியமாகிவிடவில்லை.

”2013-ம் ஆண்டு நாங்கள் அறிமுகப்படுத்திய பிறகு எங்களது சிறிய பணியிடத்தில் அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்ளப் போராடினோம். நிதி நெருக்கடியையும் சந்தித்தோம். முன்னணி வங்கி ஒன்று எங்களுக்கு 10 லட்ச ரூபாய் கடன் வழங்க மறுத்தது,” என்று நினைவுகூர்ந்தார்.

சகோதரர்கள் இருவரும் தங்களது வீட்டையும் பழைய அலுவலகத்தையும் அடமானம் வைத்து வங்கிகளில் கடன் வாங்கினார்கள். ஆரம்பத்தில் நிறுவனத்தில் ஏழு ஊழியர்கள் மட்டுமே இருந்தனர். நெட்வொர்க்கிங் மற்றும் மார்கெட்டிங் செயல்பாடுகளுக்காக மோஹித் க்ளையண்டுகளை நேரில் சந்தித்தார். ஆராய்ச்சியில் ஈடுபட்டு முறைப்படுத்தி தயாரிப்புகளை உருவாக்கும் பணியில் ரஜத் கவனம் செலுத்தினார்.

இந்தத் தொழில்முனைவோரின் தொடர் முயற்சியின் பலனாக மேரியட் க்ரூப் இவர்களுக்கு வாய்ப்பளித்தது. அப்போதிருந்து Kimirica படிப்படியாக வெற்றியடைந்து 70,000 சதுர அடி கொண்ட அலுவலகத்தில் 400 ஊழியர்களுடன் வளர்ச்சியடைந்தது.

விருந்தோம்பல் துறையில் செயல்பட்ட மிகப்பெரிய நிறுவனங்களுடன் Kimirica இணைந்துகொண்டது. இந்தியாவிலேயே திரவ வடிவில் இருக்கும் பொருட்களை மட்டுமல்லாது விருந்தினர் வசதிக்காக வழங்கப்படும் இதர பொருட்களையும் உற்பத்தி செய்யும் முதல் சப்ளையராக உருவானது.

வளர்ச்சி

ஐந்தாண்டுகளிலேயே Kimirica பல்வேறு மைல்கற்களை எட்டியது. நவீன செயல்பாட்டு உத்திகளை இணைத்துக்கொண்டது. ”எளிதாக ஆர்டர் செய்யவும் திறம்பட தயாரிக்கவும் ஆர்டர்களை துல்லியமாக கண்காணிக்கவும் நாங்கள் SAP-ERP பயன்படுத்தினோம். உலகம் முழுவதும் சரியான நேரத்தில் டெலிவர் செய்யவும் அனைத்து க்ளையண்டுகளும் தங்களது டெலிவரி குறித்த தகவல்களை நேரலையில் கண்காணிக்கவும் புகழ்பெற்ற லாஜிஸ்டிக்ஸ் பார்ட்னருடன் இணைந்துள்ளோம்.

Kimirica ஆன்லைன் ஆர்டரிங் முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

ஒரே க்ளிக்கின் மூலம் ஆர்டர் செய்யும் அனுபவத்தை வழங்க அதை SAP உடன் இணைக்கவும் திட்டமிட்டுள்ளது. Kimirica உலகளவிலான அணுகுமுறையைப் பின்பற்றவும் June Jacobs, Pharmacopia, Portico, Christian Lacroix போன்ற சர்வதேச காஸ்மெடிக் பிராண்டுகளை இத்தகைய சந்தையில் அறிமுகப்படுத்தவும் ஹண்டர் அமெனிட்டீஸ் உடனான இணைப்பு உதவியது.

”இந்தியாவில் நூறு சதவீதம் வீகன் மற்றும் பாராபீன் இல்லாத ஹோட்டல் காஸ்மெடிக்ஸ் தயாரிக்கும் முதல் தயாரிப்பாளர்கள் நாங்கள் மட்டுமே. இது ஹோட்டல்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது,” என்றார் ரஜத்.

அத்துடன் இந்தியாவில் டூத்பிரஷ், சீப்பு போன்ற தயாரிப்புகளுக்கு மக்கும் பொருட்களைக் கொண்டு பேக்கேஜ் செய்யும் முறையை அறிமுகப்படுத்திய முதல் நிறுவனம் இதுவே.

”மூன்றாண்டுகளுக்கு முன்பு ஏற்றுமதி செய்யத் துவங்கினோம். 2020ம் ஆண்டில் எங்களது மொத்த வருவாயில் 30 சதவீத பங்களிப்பு ஏற்றுமதி வாயிலாகவே இருக்கும்,” என்றார்.

Kimirica-வின் முதன்மை தயாரிப்புகள் அனைத்தும் இந்தூரில் உள்ள அதன் உற்பத்தி ஆலைக்கு 100 கிலோமீட்டருக்குள்ளேயே வாங்கப்பட்டு உருவாக்கப்படுகிறது. இதுவே இந்நிறுவனத்தின் தனிச்சிறப்பாகும்.

”இந்த முயற்சி உள்ளூர் விற்பனையாளர்களையும் சிறியளவில் செயல்படும் எங்களது பார்ட்னர்களையும் ஊக்குவிக்கிறது. தற்போது எங்களது தயாரிப்புகளில் பெரும்பாலானவை எங்கள் ஆலையில் இருந்து 20 கிலோமீட்டருக்குள்ளாகவே தயாரிக்கப்படுகிறது. இது கார்பன் தடத்தை குறைக்கவும் நிலையான, சிறப்பான விநியோக சங்கிலியை உருவாக்கவும் உதவுகிறது,” என்றார் Kimirica Hunter வடிவமைப்பு மற்றும் வணிக வளர்ச்சி பிரிவின் தலைவர் மற்றும் இணை நிறுவனர் மோஹித் ஜெயின்.

இந்நிறுவனத்தின் ஊழியர்களில் குறைந்தபட்சம் 40 சதவீதம் பேர் பெண்கள்.  அருகாமையில் இருக்கும் கிராமப்புறப் பெண்கள் தங்களது குடும்பங்களின் அருகிலேயே பணிபுரிய இது வாய்ப்பாக அமைந்துள்ளது என்கிறார் மோஹித். அப்புறப்படுத்தப்பட்ட ஹோட்டல் சோப்புகளை சேகரித்து அவற்றை மறுசுழற்சி செய்து இந்தியாவின் கிராமப்புறங்களில் இருப்போர் பயன்பாட்டிற்கு அனுப்பிவைக்கும் முயற்சியையும் Kimirica துவங்கியுள்ளது.

அடுத்தகட்ட செயல்பாடுகள்

Kimirica-வின் வணிக திட்டங்களைப் பல நிறுவனங்கள் காப்பியடிக்க முயற்சிப்பதாகத் தெரிவித்தார் மோஹித். “இந்தத் துறையில் மிகப்பிரபலமான முன்னணி நிறுவனங்களும்கூட எங்களது இத்தனை வருட உழைப்பினால் உருவான வணிக திட்டங்களைக் காப்பியடிக்க முயற்சி செய்தன. ஆனால் எங்களது அர்ப்பணிப்பைக் கொண்டும் தொடர்ந்து புதுமைகளைப் புகுத்தியும் இதை எதிர்கொண்டு வருகிறோம். நாங்கள் எப்போதும் குறிப்பிடுவது போல போட்டியாளர்கள் எங்களது தயாரிப்புகளை வேண்டுமானால் அதேபோன்று உருவாக்கலாம். ஆனால் எங்களது அர்ப்பணிப்பிற்கு ஈடுகொடுக்கமுடியாது,” என்றார்.

புதுமையையும் படைப்பாற்றலையும் உந்துசக்தியாகக் கொண்டு இந்தத் துறையில் புதிதாக கால் பதிப்பவர்கள் செயல்படலாம் என்றார்.

”இந்தத் துறையில் அதிகபட்ச எதிர்பார்ப்புகள் இருந்துகொண்டே இருக்கும். தொடர்ந்து ஊக்கத்துடன் செயல்பட்டு ஒரே மாதிரியான கருத்துக்களை தகர்த்தெறிந்து உங்களது பணி மீது அதீத ஆர்வம் காட்டினால் சிறப்புறலாம்,” என்றார் மோஹித்.

சமீபத்தில் இந்நிறுவனம் Kimirica ஷாப் என்கிற சில்லறை வர்த்தக ஸ்டோரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது Kimirica தயாரிப்புகளை விரும்பி அவற்றை நேரடியாக வாங்க விரும்பும் பி2சி வாடிக்கையாளர்களுக்கான முயற்சியாகும். அத்துடன் இந்தியாவின் மிகப்பெரிய ’ஹோட்டல் அமெனிட்டி பார்க்’ உருவாக்கும் முயற்சியையும் இந்தச் சகோதரர்கள் துவங்கியுள்ளனர். இதன் மூலம் மத்திய கிழக்கு, ஆப்ரிக்கா, ஐரோப்பா ஆகிய பகுதிகளுக்கும் விருந்தோம்பல் துறை சார்ந்த பொருட்கள் விநியோகிக்கப்படும்.

Kimirica விருந்தோம்பல் பிரிவிற்கான புதுமையான மென்பொருள் தயாரிப்புகளை வழங்கும் பணியிலும் ஈடுபட விரும்புகிறது. இது முற்றிலும் மாறுபட்ட ஒரு புதுமையான முயற்சியாக இருக்கும் எனவும் எத்தகைய தடையையும் தகர்த்தெறிந்து சாதிக்கமுடியும் எனவும் இவர்கள் நம்புகின்றனர்.

ஆங்கில கட்டுரையாளர் : ரிஷப் மன்சூர் | தமிழில் : ஸ்ரீவித்யா