சவால்களை ‘தண்ணீர்’ போல அணுகுவது எப்படி? - புரூஸ் லீ தத்துவமும்; தாக்கமும்!
வாழ்க்கை ஆச்சரியங்கள் நிறைந்ததாக இருக்கலாம். புரூஸ் லீ கூற்றுப்படி, ‘நாம் தண்ணீரைப் போல’ செயல்பட்டால், எவ்வித எதிர்பாராத தருணங்களை சிறப்பாக கையாள முடியும்.
புரூஸ் லீ என்றாலே கராத்தே சண்டையின் ஒரு ஜீனியஸ் என்பதாகத்தான் நாம் கண்டிருக்கிறோம். ஆனால், அவர் வெறும் சண்டை நிபுணர் மட்டுமல்ல, அதற்கும் அப்பால் வாழ்க்கையின் பல சவால் நிறைந்த விஷயங்களை தெரிந்து வைத்திருப்பவர் என்பது நம்மில் பலரும் அறியாதது.
புரூஸ் லீயின் மேற்கோள்களில் மிக முக்கியமான ஒன்று இதுதான்:
“உங்கள் மனதை வெறுமையாக்குங்கள், உருவற்றவர்களாகவும் வடிவற்றவர்களாகவும் இருங்கள் - தண்ணீரைப் போல,!”
இந்த மேற்கோள் நமக்கு வாழ்க்கையின் சவால் சூழ்நிலைகளைச் சமாளிக்க ஏற்று நடக்க, எதிர்த்து நடக்கவும், சுருக்கமாகச் சொன்னால், நம்மை மாற்றிக் கொள்வதற்கும், சவால்களைக் கையாள்வதற்கும் ஆழமான நுண்ணறிவுகளை வழங்குகிறது. இந்த மேற்கோளை இன்னும் ஆழமாகவும் தெளிவாகவும் அணுகுவோம் வாருங்கள்.
நீராலானது உலகு
தண்ணீரைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள், அது ஆச்சரியங்களைப் பருக அள்ளித்தரும். ஏனென்றால், தண்ணீர் தான் இருக்கும் இடத்தைப் பொறுத்து வடிவமெடுக்கும். ஒரு கோப்பையில், அது கோப்பை போல் தெரிகிறது. கொட்டினால்தான் பாய்கிறது. இது நீரின் உடல் வடிவத்தைப் பற்றியது மட்டுமல்ல, வெவ்வேறு சூழ்நிலைகளில் நாம் எவ்வாறு நெகிழ்வாகவும் சரிசெய்து கொண்டும் இருக்க வேண்டும் என்பதற்கான ஒப்புமையாகும்.
ஆனால், புரூஸ் லீ சொல்ல வருவது வடிவற்று, உருவற்று தண்ணீர் போல் இருக்க வேண்டும் என்பதுதான்.
மனதை நிர்மலமாக்குதல்
மனதை நிர்மால்யமாக்குங்கள், வெறுமையாக்குங்கள் என்று புரூஸ் லீ கூறுவது கிட்டத்தட்ட இந்திய தத்துவ ஞானி ஜே.கிருஷ்ணமூர்த்தி கூறும் ‘freedom from the known' போன்று அறிந்த நிரந்தரங்களில் இருந்து மனதை வெறுமையாக்கிக் கொள்வது போன்றதுதான்.
நாம் நமது பழைய சிந்தனையில் சிக்கிக்கொள்ளக் கூடாது.
மாறாக, நாம் திறந்த மனதுடன் இருக்க வேண்டும், புதிய அனுபவங்களுக்கு தயாராக இருக்க வேண்டும். மேலும், விஷயங்களைப் புரிந்துகொள்வதற்கு முன்பு அவற்றை மதிப்பிடக் கூடாது. அதாவது, நீச்சல் என்றால் என்ன என்பதை நாமே நீச்சல் பழகி அடித்துதான், அது பற்றிய மதிப்பீட்டை வளர்த்தெடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, அவர் சொன்னார் - இவர் சொன்னார் என்று மற்றவர்களின் வார்த்தைகளை எடுத்துக் கொள்வது அல்லது நம் சொந்த மன பயத்துடன் நீச்சலை அணுகுவது அல்லது அது பற்றிய விஞ்ஞான அறிவுடனோ அல்லது அது பற்றிய மூதாதையோ அறிவுடனோ பார்க்கக் கூடாது.
நாம் அனுபவித்த பிறகே ஒன்றைப் பற்றிய மதிப்புரைகளை வழங்க வேண்டும். உங்கள் மனதை புத்துணர்ச்சியாகவும், எதற்கும் தயாராகவும் வைத்திருப்பதாக நினைத்துக்கொள்ளுங்கள்.
உருவற்று, வடிவற்று இருங்கள்
‘உருவமற்று, வடிவமற்று இருங்கள்’ என்று புரூஸ் லீ கூறுவது கோப்பைக்குள் ஊற்றும்போது நீர் கோப்பை வடிவமாக மாறுவதை அவர் கூறவில்லை; மாறாக, கோப்பைக்குள் இருந்தாலும் நாம் வடிவமற்று இருக்க வேண்டும். அதாவது, நாம் என்னவாக இருக்கிறோமோ அதுவல்ல நாம் என்பது. நம் சுயம் என்பது நிலையான ஒன்றல்ல... எப்போதும் மாறிக்கொண்டிருப்பது, நாம் தண்ணீர் போல் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.
ஆணியடித்தாற்போல் ஒரே இடத்தில் நிலைத்தல் கூடாது என்கிறார் புரூஸ் லீ. புரூஸ் லீயின் சொந்த தற்காப்புக் கலைப் பாணியான ஜீத் குனே டோவைப் போல தடுப்பு உத்தி, எதிர்த் தாக்குதலாக மாற வேண்டும் என்பது போல் தேவைப்படும்போது நமது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.
இந்த யோசனை சண்டைக்கு மட்டுமல்ல, அன்றாட வாழ்க்கைக்கும். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைச் சரிசெய்து செயல்படச் சொல்கிறது.
நிஜ வாழ்க்கையில் பயன்படுத்துவது எப்படி?
வாழ்க்கை ஆச்சரியங்கள் நிறைந்ததாக இருக்கலாம். நாம் தண்ணீரைப் போல செயல்பட்டால், இந்த எதிர்பாராத தருணங்களை சிறப்பாக கையாள முடியும். எடுத்துக்காட்டுக்கு...
வணிகத்தில்: சந்தைகளும் தொழில்நுட்பமும் வேகமாக மாறுகின்றன. வெற்றிகரமான நிறுவனங்கள் ஒரு திட்டத்தை மட்டும் கடைப்பிடிப்பதில்லை. அவை தண்ணீரைப் போலவே மாறி மாறி மாற்றியமைக்கின்றன.
தனிப்பட்ட உறவுகளில்: தண்ணீரைப் போல இருப்பது என்பது புரிந்துகொள்வது. தடையற்ற ஓட்டமாக இருப்பது. தண்ணீரைப் போல் எதிலும் புகுந்து புறப்படுவதாகும். கோபமாக இருப்பதற்குப் பதிலாக அல்லது நம் கருத்துகளை மாற்றாமல் இருப்பதற்குப் பதிலாக, மற்றவர்களின் பார்வையில் இருந்து விஷயங்களைப் பார்க்க முயற்சிக்க வேண்டும்.
புரூஸ் லீயின் யோசனை தண்ணீரைப் போல இருப்பது தற்காப்புக் கலைகளைப் பற்றியது அல்ல. இது மாற்றத்திற்கு தயாராக இருப்பது மற்றும் வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ப எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும் உலகில் அனுசரித்துச் செல்வது பற்றியது.
எனவே, அடுத்த முறை வாழ்க்கை உங்களுக்கு ஒரு சவாலை அளிக்கும் தருணத்தில், புரூஸ் லீயை நினைத்து, ‘தண்ணீரைப் போல இருக்க முயற்சி செய்யுங்கள்: நெகிழ்வாக எதற்கும் தயாராக இருக்க வேண்டும்’ என்பதுதான் புரூஸ் லீயின் அனைவருக்குமான வாழ்க்கைத் தத்துவம்.
மூலம்: Nucleus_AI
Edited by Induja Raghunathan