‘இவங்க வேற லெவல்’ - BTS இசைக் குழு மீது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு ஈர்ப்பு வந்தது எப்படி?
இணைய உலகில் செல்வாக்கு மிகுந்த ஆர்மி எது? இந்தக் கேள்விக்கு எளிதில் பதில் சொல்லிவிடலாம், ‘பிடிஎஸ் ஆர்மி’ 'BTS Army' என்று... இந்த அளவு அன்பு உருவாக காரணம் என்ன?
இணைய உலகில் செல்வாக்கு மிகுந்த ஆர்மி எது?
இந்தக் கேள்விக்கு எளிதில் பதில் சொல்லிவிடலாம், ‘பிடிஎஸ் ஆர்மி’ 'BTS Army' என்று. ஒற்றை இரவில் இந்த ஆர்மி உருவாகிவிடவில்லை. ஒவ்வொரு இரவிலும் இசையில் ரசிகர்களைக் கரைத்ததில் விளைவாக உருவான ஆர்மி இது.
இந்த ஆர்மி ஏதோ 2கே கிட்ஸ்களின் கூடாரம் என்று நினைத்துவிட வேண்டாம். பிடிஎஸ் (BTS) 2கே கிட்ஸ் இசைக்குழுவால் ஆட்டுவிக்கப்பட்ட அனைத்து தசாப்த குழந்தைகளையும் உள்ளடக்கிய ரசிகர்கள் பட்டாளம் என்றால் அது மிகையில்லை.
எத்தனையோ கனவுகள் நோக்கிப் பயணித்து, துவண்டுபோய் ஒப்பாரி வைப்போரிடம் ‘நோ மோர் ட்ரீம்ஸ்’ என்று தேற்றியதில் தொடங்கியது இந்தப் பயணம். ஆம், கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் 12-ல் உதயமானது தென்கொரியாவைச் சேர்ந்த பிடிஎஸ் இசைக் குழு. ‘No More Dream’ என்ற தலைப்பிலான பாடல்தான் முதல் படைப்பு.
வசீகர இசையுடன் நம்மைத் தேற்றும் வரிகளில் ‘எனது சின்ன வாழ்க்கையில் கனவுகளே இல்லை’ என்று ஆசுவாசப்படுத்தியது அந்தப் பாடல்.
BTS ஆர்மி பின்னணி
இசை, பாடல், நடனம்...
கிம் நம்ஜூன், கிம் சியோக்ஜின், மின் யூங்கி, ஜங் ஹோசோக், பார்க் ஜிமின், கிம் டேஹ்யுங் மற்றும் ஜியோன் ஜங்குக் ஆகிய எழுவர் படைகொண்ட பிடிஎஸ் இசைக்குழு கே-பாப் இசையை உலகம் முழுக்க கொண்டு சென்றதுடன் கிராமி உள்ளிட்ட விருதுகளையும் வென்று ஆசியா முதல் மேற்கத்திய நாடுகள் வரையில் இசை சாம்ராஜ்ஜியத்தை பரிந்துவிரியச் செய்தது.
அமெரிக்கர்களே ஆதிக்கம் செலுத்தி வந்த பாப் இசையில் அமெரிக்கர்களை தங்களது இசைக்கு அடிமையாக்கி தங்களது வல்லமையைப் பறைசாற்றியது பிடிஎஸ் குழு.
பிடிஎஸ் குழுவினரின் ஈர்ப்பிசையை இதுவரை உள்வாங்கதவர்கள் யூடியூபை நாடி கேட்டு, கண்டு ரசிக்க வேண்டிய சாம்பிள் பாடல்கள் இவை: Fire (2016), Spring Day (2017), Blood, Sweat And Tears (2016), I need U (2015), Dope (2015), We are Bulletproof: The Eternal (2020), Black Swan (2020), Go-Go (2017), Louder Than Bombs (2020), Fake Love (2018), Butter (2021).
பிடிஎஸ் இசைக்குழுவின் பாடல் வீடியோக்களும், லிரிக்ஸ் வீடியோக்களும் கோடிக்கணக்கான பார்வைகளைக் கொண்டவை. என்றோ பதிவேற்றப்பட்ட அந்தப் பாடல்களுக்கு இன்றும் ஒவ்வொரு நாளும் வியூஸ்கள் குவிந்து வருவதை கவனிக்கலாம்.
உலக அளவில் இந்த இசைக்குழுவுக்கு இந்தியாவில்தான் ‘ஆர்மி’ அதிகம் என்றால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். அதுவும், ஒவ்வொரு வரிகளையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் அளவுக்கும், எந்நேரமும் தன்னிச்சையாக பாடலை அசைபோடும் வகையிலும் அதிதீவிர ரசிகர்கள் இங்கே ஏராளம்.
இந்தக் குழுவினர் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்திருப்பது ஏதோ வெற்று ஈர்ப்பு அல்ல. இசை, பாடல், நடனம் மூன்றிலும் திறமைவாய்ந்த இளம் கலைஞர்களின் படைப்பூக்கத்தின் பலன்.
‘தீம்’கள் என்னென்ன?
பிடிஎஸ் குழுவினரின் இசை ஒரு பக்கம் மெய்மறக்கச் செய்யும் வகையிலும், இளம் தலைமுறையினரை ஈர்க்கும் வகையிலும் இருந்தாலும் கூட, அவர்களின் பாடல்களும் வரிகளும் கொண்டுள்ள ‘தீம்’கள்தான் கோடானு கோடி மக்களுடன் நெருக்கத்தைக் கூட்டின.
அன்பு, காதல், பதின் பருவப் பிரச்னைகள், உறவுச் சிக்கல்கள், மனநலன், சமூக அரசியல், விழிப்புணர்வுகள் என பாசிட்டிவான விஷயங்களையே அந்தப் பாடல்கள் பேசின. குறிப்பாக, அந்தப் பாடல்களில் ரசிகர்கள் தங்களது வாழ்க்கையை ஏதோ ஒரு வகையில் தொடர்புபடுத்திக் கொள்ளும் நெருக்கமான அனுபவத்தையே அளித்துதான் இந்த அளவுக்கான ரீச்-சுக்கு காரணம்.
ஆடலும் பாடலும் நல்ல கருத்தாக்கங்களுடன் மனதுக்குள் நுழைவதால் இளம் ரசிகர்கள் பாசிட்டிவ் வைப்களை அனுபவித்தனர். இதன் பின்னணியில் கடுமையாக உழைப்பும், பணச் செலவும் எடுத்துக் கொண்டாலும், அதற்குப் பலனாக பெரும் புகழும் வருவாயும் ஈட்டப்பட்டது.
ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், டிக் டாக் என அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பிடிஎஸ் ஆர்மி-யினரின் வேகம் மிரளவைக்கத்தக்கது. ஆம், பிடிஎஸ் குழுவினர் ஒரு அப்டேட் கொடுத்தாலோ, ஒரு ட்வீட் செய்தாலோ அடுத்த நொடியில் மில்லியன் கணக்கிலான ஆர்மியினர் அந்தப் பதிவுகளை இணைய உலகில் பரப்பி வைரலாக்கி விடுவார்கள்.
இந்தக் குழுவினரால் ஒரு வீடியோ வெளியிடப்பட்டால், அதை யூடியூபில் 24 மணி நேரத்தில் சாதனைப் பார்வைப் பட்டியலில் இடம்பெறச் செய்துவிடுவார்கள். இணையத்தில் இசை சார்ந்த சாதனைகளை முறியடியப்பதில் பிடிஎஸ் குழுவினருக்கும், அவர்களது ஆர்மிக்கும் நிகர் அவர்களே!
மக்கள் தொண்டு...
இசைப் பணிகளுக்கு இடையே மக்கள் தொண்டு செய்வதிலும் பிடிஎஸ் குழு தீவிரம் காட்டி வருவது கவனிக்கத்தக்கது. குழந்தைகளின் உடல்நலன் சார்ந்தவை, குழந்தைகள் - பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு பணிகள், ஏழைகளின் சிகிச்சைகளுக்கு உதவுதல், பேரிடர் காலங்களின் நிவாரணங்களைத் திரட்டி தருதல் என பல தொண்டுப் பணிகளை இவர்கள் செய்கின்றனர்.
இவர்கள் வழியில் பிடிஎஸ் படையில் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களும் இத்தகைய சேவைகளில் ஈடுபடுவதைக் கவனிக்கலாம்.
பிரிவோம்... சந்திப்போம்!
சமீபத்தில் பிடிஎஸ் குழுவினர் 9-ஆம் ஆண்டையொட்டி யூடியூப் நேரலையில் வந்தபோதுதான் அந்த அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டது பலருக்கும் நினைவிருக்கலாம். பிடிஎஸ் ரசிகர்களை உடைந்து அழச் செய்த அறிவிப்பு அது. ஆம், ‘பிடிஎஸ் பிரியப் போகிறது’ என்ற அறிவிப்பு.
“உங்களின் (ரசிகர்கள்) விருப்பத்துக்கு குறை வைக்காமல், தனித்தனியாக சாதிக்கப் போகிறோம்.”
“எங்களின் தனித்தன்மையை நோக்கிய பயணத்தை தொடங்குகிறோம். அது மிக நீண்ட முயற்சி.”
"இந்தப் பிரிவை நாங்க பாசிட்டிவாகவே பார்க்கிறோம். தனியாக வாழக் கற்றுக்கொள்ளப் போகிறோம்.”
இப்படி ஒவ்வொருவராக இந்தப் பிரிவுக்கான காரணங்களை அடுக்கிய அவர்கள், குழுவில் உள்ள அனைவரும் தனித்தனியாக இசைத் துறையில் பயணத்தை அடியெடுத்து வைப்பதாக தெரிவித்தனர்.
அந்த அறிவிப்பை வெளியிடும்போது அவர்கள் அனைவருமே ஒடிந்துபோயிருந்தனர், தங்கள் ரசிகர்களைப் போலவே. ஆனாலும், காலம் சில முடிவுகளை கட்டாயம் ஆக்குவதைத் தவிர்க்க முடியாதே.
எனினும், பிடிஎஸ் என்ற குழு பிரிந்தாலும், அந்தக் குழுவில் இருந்த தங்களது ஃபேவரிட் கலைஞர்கள் இனி தனித்தனியாக விருந்து படைக்கப் போகிறார்கள் என்பதுதான் பிடிஎஸ் ஆர்மிக்கு கிடைத்த ஒரே ஆறுதல். அந்த ஆறுதலுக்கு அச்சாரமாக பிடிஎஸ் குழுவின் முக்கியஸ்தாரான பிடிஎஸ் குழுவைச் சேர்ந்த ஜின் இம்மாத இறுதியில் ஒரு சிங்கிள் பாடலை வெளியிடுகிறார். இதனிடையே, பிடிஎஸ் குழுவினர் தென் கொரியாவின் ராணுவத்தில் கட்டாய சேவையாற்றவும் தயாராகி வருகின்றன.
அதன் பின், பிரிந்த தோழர்கள் தனித்தனியாக இசை மழை மொழிந்து ரசிகர்களை சிலிர்ப்பூட்டும் பணிகளை செவ்வனே தொடருவர் என எதிர்பார்க்கலாம்.
சரி, ‘நாம் ஏன் பிடிஎஸ் இசையைக் கேட்க வேண்டும்?’ என்று இந்தக் குழு பற்றிய அறிமுகம் இல்லாத சிலர் கேள்வி எழுப்பலாம். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு.
உலக அளவில் கொரோனா காலத்தில் வளரிளம் பருவத்தினர், இளைஞர்கள் பலருக்கும் அதீத மன அழுத்தப் பிரச்னைகள் நிலவியதை அறிவோம். அத்தகைய மனநலப் பிரச்சினைகளில் இருந்து அவர்களை மீட்டதில் பிடிஎஸ் குழுவின் இசைக்கும், அந்தக் குழுவை முன்னோடியாக வைத்து உருவான நூற்றுக்கணக்கான கே-பாப் கலைஞர்களின் இசைக்கும் மிக முக்கியப் பங்கு இருந்ததை மறந்துவிட வேண்டாம்!
பிரபல ‘ரீல்ஸ்’ கிரியேட்டர்கள் ரசிகர்களுடன் சங்கமம் - Meta கிரியேட்டர் தின விழா கொண்டாட்டம்!