NFT மூலம் தேனீ வளர்ப்பில் ஈடுபடலாம் - ‘Metaverse’ திருமணப் புகழ் தினேஷின் முயற்சி 'Bring Back Bees'
இந்தியாவின் முதல் மெட்டாவேர்ஸ் திருமணம் மூலம் உலகையே திரும்பி பார்க்க வைத்த தினேஷ், தற்போது NFT மூலம் தேனீக்கள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் Bring Back Bees என்ற புதிய திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.
தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் தகுந்தவாறு நம்மையும் நாம் அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் ஒரே இடத்தில் தேங்கி விடாமல், மக்கள் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும். இதற்கான முன்னெடுப்புகளில் ஒன்றுதான் என்எஃப்டி (NFT)
என்.எஃப்.டி என்பது பிளாக் செயின் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ஒரு வகை டிஜிட்டல் லெட்ஜர்கள். இவை நீங்கள் வாங்கும் டிஜிட்டல் சொத்துக்களின் பிரதிநிதியாக செயல்படும்.
NFT இணையதளங்கள் மூலம் மக்கள் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். மக்களின் இந்த ஆர்வத்தையும், மனித குலத்திற்கு தேனீக்களின் முக்கியத்துவத்தையும் ஒன்று சேர்த்து, விழிப்புணர்வு தரும் விதமாக தினேஷ் ஆரம்பித்துள்ள திட்டம் தான், Bring Back Bees.
இந்தியாவின் முதல் மெட்டாவேர்ஸ் (Metaverse) திருமண நிகழ்வை, கடந்த பிப்ரவரி மாதம் தமிழகத்தில் நடத்தி ஏற்கனவே மக்கள் மத்தியில் அறிமுகமானவர்தான் இந்த தினேஷ் சத்திரியன். இவரது அடுத்த தொழில்நுட்ப முயற்சிதான் இந்த BBB Genesis NFT.
சென்னையைச் சேர்ந்தவரான 24 வயது தினேஷ், கடந்த 2020ம் ஆண்டு எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை முடித்ததும், சென்னை ஐஐடியில் ஓராண்டு வேலை பார்த்தவர்.
கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வது, எத்திரியம் கிரிப்டோ காயினை மைனிங் செய்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார். படிக்கும் போதே உலக ரோபோட்டிக் சேம்பியன்ஷிப்பை 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் வாங்கியவரான இவர், சுமார் ஒன்றரை வருடங்கள் Metaverse தொழில்நுட்பத்திலும் பணிபுரிந்துள்ளார். அதன் அடிப்படையில்தான் தனது திருமணத்தை மெட்டாவெர்ஸ் தொழில்நுப்டத்தில் நடத்தி இந்தியா முழுவதும் பேசுபொருளானார்.
இப்போதும் தனது ஒரு புராஜெக்ட்டின் ஒரு பகுதியாக தேனீக்களைப் பாதுகாப்பதை தொழில்நுட்ப உதவியுடன் சாத்தியப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
“இயற்கையின் மிக முக்கியப் படைப்பாகக் கருத்தப்படுவது தேனீக்கள். அவை உலகத்திலிருந்து அழிந்துவிட்டால், மனித இனம் அடுத்த 4 ஆண்டுகளில் முற்றிலும் அழிந்து விடும் என்பது ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கருத்து. ஆனால், அப்படிப்பட்ட தேனீக்கள் பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் மிகவும் குறைவாகவே உள்ளது. அதனால்தான், என் எஃப்டி தொழில்நுட்பத்துடன் தேனீக்கள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் ’Bring Back Bees’ திட்டத்தை ஆரம்பித்துள்ளேன்,” என்கிறார்.
இதன்படி, ஆர்வமாக உள்ள விவசாயிகளுக்கு ஆளுக்கு தலா ஐந்து தேனீ வளர்க்கும் பெட்டிகள் வழங்கப்படும். அந்த ஒவ்வொரு தேனீப் பெட்டிகளின் NFT-2களையும் விருப்பப்பட்டவர்கள் வாங்கலாம். அதன்மூலம் கிடைக்கும் பணம் மூலம் தேனி வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளுக்கு பெட்டிகளை வழங்குகிறோம். தேனீக்கள் வளர்ப்பிற்கு இது ஒருவகையில் உதவிகரமானதாக அமையும், என்கிறார் தினேஷ்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின்மூலம், இதுவரை 33 என் எஃப் டிக்களை விற்று, அதன்மூலம் 33 தேனீ வளர்க்கும் பெட்டிகளை விவசாயிகளுக்கு தினேஷ் வழங்கியுள்ளார். அடுத்தாண்டு இறுதிக்குள் 3,333 என் எஃப் டிக்களை விற்க வேண்டும் என்பதுதான் தினேஷின் இலக்காக உள்ளது.
“சேவை நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில் என்னையும் சேர்த்து பத்து பேர் உள்ளனர். நாங்கள் அனைவருமே சமூகவலைதளத்தில் NFT கம்யூனிட்டி மூலம் ஒன்றாகச் சேர்ந்தவர்கள். தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் வசித்து வரும் நாங்கள் Bring Back Bees திட்டத்திற்கென, ஆளுக்கொரு வேலையாக பிரித்து செயல்பட்டு வருகிறோம். இதில், இத்திட்டத்தின் நிர்வாக இயக்குநரான நான், ஒவ்வொரு ஊராக நேரடியாகச் சென்று விவசாயிகளைச் சந்தித்து, தேனீக்கள் வளர்ப்பதில் உள்ள வியாபார அம்சங்கள் மற்றும் நன்மைகளை எடுத்துக்கூறி வருகிறேன்,” என்கிறார் தினேஷ்.
தங்களது இந்த புதிய தொழில்நுட்பத் திட்டத்தை இந்தியாவின் மூலை முடுக்கில் உள்ள கிராமங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் Bring Back Bees-இன் நோக்கம் எனக் கூறுகிறார் தினேஷ். இதற்காக ஊர் ஊராகச் சென்று நேரடியாக விவசாயிகளை சந்தித்து, அவர்களது தோட்டத்தில் தேனீ பெட்டிகளை வைப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுகிறார்.
“தேனீக்களை வளர்ப்பதன் மூலம் தேன் எடுப்பது மட்டும்தான் வருமானம் என்பதில்லை. தேனீக்களால் தென்னை மரங்களில் அதிக காய்களைப் பெற முடியும். இது நம்மூரில் பலருக்கும் தெரிவதில்லை. இதைத்தான் நேரடியாகச் சென்று நான் எடுத்துச் சொல்கிறேன். அதோடு, தேனீக்களுக்கு அதன் தேன் அடையைக் கட்டுவதற்கு அதிக நாட்கள் எடுக்கும். நாம் தேனை எடுக்க வேண்டும் என்பதற்காக, அந்த அடையை சிதைத்து விடுகிறோம். இதனால் அந்தத் தேனீக்கள் மீண்டும் அந்த அடையைக் கட்ட குறிப்பிட்ட நாட்கள் எடுத்துக் கொள்ளும். ஆனால், உரிய இயந்திரங்கள் உதவியோடு தேனை எடுக்கும் போது, அதன் அடைகள் சேதமாகாது. எனவே, எட்டு நாட்களுக்கு ஒருமுறை தேனை எடுக்கலாம். இதுபோன்ற விழிப்புணர்வுத் தகவல்களைத்தான் நான் விவசாயிகளுக்கு எடுத்துச் சொல்கிறேன்,” எனக் கூறுகிறார் தினேஷ்.
இவரது BringBackBees.in இணையதளத்தைத் திறந்தாலே அழகிய தேனீ ஒன்று நம்மை வரவேற்கிறது. இதன் ஒரு என் எஃப் டி-யை தற்போது 54 டாலர்களுக்கு விற்பனை செய்கிறார். இந்திய மதிப்பில் இது சுமார் 4,500 ரூபாய் ஆகும். இந்த பணத்தில் விவசாயி ஒருவருக்கு ஒரு தேனீ வளர்க்கும் பெட்டி மற்றும் தேன் எடுக்க உதவும் கருவிகள் போன்றவற்றை இலவசமாக வாங்கித் தருகிறார்.
“வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் மாதிரி, வீட்டுக்கு ஒரு தேனீ பெட்டி வளர்ப்போம்... என்ற நிலை வர வேண்டும். வீடுகளிலும் தேனீயை சுலபமாக வளர்க்க முடியும். மக்களிடம் அதற்கான போதிய விழிப்புணர்வு இன்னமும் வரவில்லை. அந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில்தான் தற்போது ஈடுபட்டு வருகிறோம். இந்த விழிப்புணர்வு ஏற்படும் பட்சத்தில், நமது வீட்டிற்குத் தேவையான தேனை, இயற்கையான முறையில் சுத்தமாக நாமே தயாரித்துக் கொள்ள முடியும்.”
இப்போது இந்தியாவிலேயே முதன்முறையாக என்எஃப்டி மூலம் தேனீக்கள் வளர்ப்பதற்கான வேலைகளை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். கூடிய விரைவில் இதனை மேலும் விரிவு படுத்த வேண்டும். அதற்கான பணிகளை தேனீக்கள் போலவே சுறுசுறுப்புடன் தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம், என்கிறார் தினேஷ்.